சாட்சி உண்டு
சப்தம் அடைக்கப்பட்ட
கிலுகிலுப்பையில்
அழுகை மறந்த
நாட்கள் உண்டு
சந்தனக் கலர்
சட்டையிலும்
சாக்கிலேட்டு டிரவுசரிலும்
சகலமும் இனித்த
நாட்கள் உண்டு
உயர் வகுப்புக்கு
ஒற்றையாய் சைக்கிளில்
பயணித்தபோது
உல்லாசம் தோன்றிய
நாட்கள் உண்டு
கல்லூரியில் பாதம் பதிக்க
சீருடை இன்றி
சாலையோரம் நின்று
பேருந்து ஏறியபோது
சில்லெனும் ஸ்பரிசங்களில்
கிறங்கிய
நாட்கள் உண்டு
இத்தனையையும்
திரும்பிப் பார்க்க
மட்டுமே முடியும் என்று
திகைத்துப் போன
நாளும் உண்டு
திரும்பிப் பார்த்தபோது
எல்லோருமே
திரும்பி இருந்தார்கள்
என்பதற்கு
திரும்பா வானம்
சாட்சியாய் உண்டு