நெஞ்சிருக்கும் வரை ஸ்ரீதர்

நெஞ்சிருக்கும் வரை ஸ்ரீதர்

இன்று இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் நினைவு நாளையொட்டி (அக்.20) அவர் குறித்த சில நினைவலைகள்:

ஒரு படம் நெஞ்சை அடைக்கும் அளவு ட்ராஜடி, அடுத்த படம் நெஞ்சில் மணமணக்கும் காதல், அதற்கடுத்த படம் முழு நீள காமெடி என ரோலர்கோஸ்டர் அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கு அளித்தவர் ஸ்ரீதர். கல்யாண(ப்) பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற சோகப் படங்களை இயக்கிய ஸ்ரீதர்தான்,காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற ஹிலேரியஸ் படங்களையும் இயக்கினார் என்பது ஆச்சரியமான விஷயம்.

புதுமை இயக்குனர் என்ற அடைமொழியைப் பெற்றவர் ஸ்ரீதர். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கும். அவர் இயக்கிய முதல் படமான ’கல்யாண பரிசு’ படத்தின் டைட்டிலில் வேண்டுமென்றே ‘ப்’ என்ற எழுத்தை தவிர்த்தார் ஸ்ரீதர். கதாநாயகனும், கதாநாயகியும் சேரப் போவதில்லை என்பதை சிம்பாலிக்காக உணர்த்தவே இந்த உத்தியை பயன்படுத்தினார் ஸ்ரீதர். (ஏழெழுத்து செண்டிமெண்ட் மற்றொரு காரணம்!)

இன்று ரீமேக் செய்தாலும் கியாரண்டியாக ஓடக் கூடிய படம் அவரது ‘காதலிக்க நேரமில்லை’. தமிழில் வெளிவந்த முதல் ஈஸ்ட்மேன் கலர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது படம் சிவாஜி கணேசன் நடித்து, தாதா மிராசி இயக்கிய ‘புதிய பறவை’. ‘கதையை எதிர்பார்க்காதீர்கள்’ என்று ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்தப் படத்தை 21 நாட்களில், ஒரே செட்டில் படமாக்கி சாதனை படைத்தார் ஸ்ரீதர். இந்தப் படம் வெளியானவுடன், ‘இந்தப் படம் ஓடாது’ என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால், ஸ்ரீதர் இயக்கிய படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்தப் படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’தான்.

நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன் உள்ளிட்டோரை ஒப்பனை இல்லாமல் நடிக்க வைத்து புதுமை செய்திருந்தார் ஸ்ரீதர். வண்ணப்படங்கள் வந்துக் கொண்டிருந்த காலத்தில் வறுமையை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்பதால் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தை கறுப்பு வெள்ளையில் படமாக்கினார் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் மிகவும் கைராசியானவர். அவர் அறிமுகப் படுத்திய யாரும் சோடை போகவில்லை. செல்வி.ஜெயலலிதா,வெண்ணிறாடை மூர்த்தி,ஸ்ரீகாந்த் (பழைய நடிகர்),ரவிசந்திரன் முதல் விக்ரம் (தந்துவிட்டேன் என்னை) வரை ஸ்ரீதர் அறிமுகப் படுத்தியவர்களின் பட்டியல் நீளம். கதாநாயகியாக நடித்து வந்த சச்சு, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த டி.எஸ்.பாலையா ஆகியோரை காமெடி படமான காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க வைத்து சோபிக்க வைத்தவர் ஸ்ரீதர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை வைத்து ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற படத்தை ஆரம்பித்து சில காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினார் ஸ்ரீதர். எம்ஜிஆர் அவர்களின் கால்ஷீட் தொடர்ந்து கிடைக்காததால் அந்தப் படம் நின்று போனது. பிறகு அதே படத்தை ‘சிவந்த மண்’ என்ற பெயரில் சிவாஜிகணேசனை வைத்து எடுத்தார் ஸ்ரீதர். இதனால் எம்ஜிஆர் அவர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஸ்ரீதர் அவர்கள் ஓரிரு தோல்வி படங்களால் நலிந்து போயிருந்த போது, ‘உரிமை குரல்’ படத்தை ஸ்ரீதருக்காக செய்து கொடுத்தார் புரட்சித்தலைவர்.

சிவந்த மண்’ படத்திற்கு முதலில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் கருணாநிதிதான். அந்த நேரத்தில் அவர் அமைச்சராக ஆகியிருந்ததால் அந்தப் படத்திற்கு வசனம் எழுத ஏதாவது சட்ட சிக்கல் ஏற்படுமோ என தயங்கினாராம் கலைஞர். அதனால், அந்தப் படத்திற்கு கலைஞர் வசனம் எழுதும் நல்வாய்ப்பு நழுவிப் போனது. ஆனால், ’சிவந்த மண் படத்திற்கு நான் வசனம் எழுதுவதாக இருந்தேன்.ஸ்ரீதர்தான் என்னை தொடர்புக்கொள்ளவில்லை’ என ‘சிவந்த மண்’ படத்தின் நூறாவது நாள் விழாவில் ஜாலியாக சுட்டிக் காட்டினார் கலைஞர். ’மோதிரக் கையால் என் தலையில் வைக்கப்பட்ட இந்த குட்டை, என்னால் மறக்கவே முடியாது’ என்று இந்த நிகழ்வு பற்றி அடிக்கடி நினைவுகூர்வார் ஸ்ரீதர். வெளிநாடுகளில் படமாக்கப் பட்ட முதல் வண்ணப் படமும் ’சிவந்த மண்’தான்.

2008ம் ஆண்டு ஸ்ரீதர் அவர்கள் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன், சன் டிவியில் ’நினைவுகள்’ என்ற நிகழ்ச்சியில் தன்னிடம் ஒரு அருமையான காதல் கதை இருப்பதாகவும், மீண்டும் ஒரு ரவுண்ட் வரப்போவதாகவும் உற்சாகமாக கூறினார். அந்தப் படைப்பை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காமலே போய் விட்டது.

நன்றி: பார்த்திபன்

எழுதியவர் : செல்வமணி (20-Oct-15, 8:53 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 270

சிறந்த கட்டுரைகள்

மேலே