லாபம் என்றால் சுரண்டலா

லாபம் என்றால் சுரண்டல் என்றுதான் இன்று பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் நேர்மையான முறையில் லாபம் சம்பாதிப்பது சாத்தியமல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய புத்தகம் டாஸ் கேபிடல்.

கம்யூனிசத்தின் பைபிளாகக் கருதப்படும் டாஸ் கேபிடல், லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் ‘உபரி மதிப்பினால்’ மட்டுமே உருவாகிறது என்று வாதிடுகிறது. அதாவது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் அல்லது கூலி என்பது அவர்கள் உயிர்வாழத் தேவையான அடிப்படை அளவிலேயே (subsistence level) நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுடைய உழைப்பின் ‘உபரி மதிப்பை’த்தான் முதலாளிகள் ‘சுரண்டி’ லாபமாக எடுக்கின்றனர் என்பதே மார்க்சியம் முன்மொழியும் வாதம். லாபம் என்பதற்கு வேறு எந்த அடிப்படையும் இல்லை என்பதும் அனுமானம்.

இந்த ‘சுரண்டல்’ என்ற கருத்தாக்கம், அதன்பின் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டு, கடந்த 150 வருடங்களாக மாபெரும் தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவுக்கு பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய கருத்து வேறு எதுவும் இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்கவும், வர்க்க எதிரிகளை அழிக்கவும், செம்புரட்சியை உலகெங்கும் உருவாக்கி, ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டவும், அதன் மூலம் சோஷலிச அரசையும், பிறகு படிப்படியாக தூய கம்யூனிச அரசையும் உருவாக்குவதை லட்சியமாகக் கொண்ட பயணத்துக்குமான inspiration இந்த ‘சுரண்டல்’ என்ற கருத்தாக்கம்தான்.அது இன்றுவரை தொடர்கிறது.

இந்த சுரண்டல் என்ற கருத்தாக்கம் தவறாது, அறிவியல்பூர்வமற்றது. உபரிமதிப்புதான் லாபமாக மாறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த ‘உபரி மதிப்பு’ யாரால் உருவாக்கப்படுகிறது எனபதில்தான் பிரச்னை இருக்கிறது. தொழில்முனைவோர்களின் உழைப்பு, ஊக்கம், நிர்வாக மேலாண்மை, திறமை போன்ற விஷயங்கள்தான் உபரி மதிப்பை உருவாக்குகிறது என்பதே சரியாகும். பல நாடுகளில், ஒரே அளவு உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி வேறுபட்ட அளவுகளில் உள்ளது. அவர்கள் வாழ்க்கை தரமும் மாறுபடுகிறது.

டாஸ் கேபிடலில் மார்க்ஸ் மேலும் சில முக்கிய அனுமானங்களை முன் வைக்கிறார். ஒரு நாட்டில், படிப்படியாக நிகர உபரி மதிப்பு குறைந்துகொண்டே போகும். Labour saving machineகளை படிப்படியாக முதலாளிகள் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் தொழிலாளர்களின் நிகர பங்களிப்பைக் குறைக்க முயல்வர். ஆனால், உபரி மதிப்பு மற்றும் லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பினால் ’மட்டும்’ (repeat மட்டும்) உருவாகும் என்ற கருத்தாக்கத்தின்படி, நிகர உபரி மதிப்பும் லாபங்களும் படிப்படியாக குறைந்துகொண்டே போகும். இது பொருளாதார மந்தங்களை ஏற்படுத்தி, பெரும் சிக்கல்களை உருவாக்கும். Business cycles அடுத்தடுத்து உருவாகும். பொருளாதார மந்தங்களின்போது சிறு நிறுவனங்கள் அழிந்து, அவற்றைப் பெரும் நிறுவனங்கள் விழுங்கி ஏப்பம்விடும். ஒவ்வொரு மந்தமும், அதற்கு முன்பு உருவான மந்தத்தைவிட மோசமாகவே இருக்கும். தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக சீரழியும். ஒரு கட்டத்தில் இறுதிப் பேரழிவு உண்டாகி, மொத்த முதலாளித்துவ அமைப்பே தகர்ந்துவிடும். பிறகு, சோஷலிச அமைப்பு இயல்பாகவே உண்டாகும். சுருக்கமாக, இதுதான் டாஸ் கேபிடல் தரும் அனுமானம்.

ஆனால், கடந்த 150 ஆண்டுகால வரலாறு இதை பொய்பிக்கிறது. உலகின் மொத்த உபரி மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் ஐரோப்பாவில் கண்ட தொழிலாளர்களின் நிலை மிகக் கொடுமையானதாக இருந்தது. Sweat shops என்கிற நிலை. 12 மணி நேர ஷிஃப்டுகள், சொற்பக் கூலி, கொடுமையான பணிச்சூழல், குழந்தை தொழிலாளர்கள்; இவை யாவும் படிப்படியாக மாறி, தொழிலாளர்களின் நிலை அங்கு பெரும் உயர்வையே அடைந்தது. இதற்கு, ‘காலனி ஆதிக்க ஏகாதிபத்தியத்தின்’ மூலம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சுரண்டியதால்தான் சாத்தியமானது என்று ஒரு விளக்கத்தை காம்ரேடுகள் வைப்பர். ஆனால், அது மிகத் தவறனாது. காலனியாதிக்கத்தில் ஈடுபடாத பல நாடுகளிலும் இதே முன்னேற்றம் உருவானது. மேலும், காலனியாதிக்கம் இரண்டாம் உலகப்போருக்கு பின் படிப்படியாக அழிந்தது. அதன் பின்தான் உலகெங்கிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் நிஜ முன்னேற்றம். முக்கியமாக வளர்ந்த நாடுகளில்.

மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. வாங்குபவருக்குப் பயன் இல்லாவிட்டால், பெரும் உழைப்பில் உருவான எந்தப் பொருளுக்கும் மதிப்போ, தேவையோ இருக்காது. உதாரணமாக, பாலைவனத்தில் சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு ஒரு மர மேசை தேவைப்படாது, பயன்படாது. அந்த மேசையை ஒரு தொழிலாளி எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும், அங்கு அதற்கு மதிப்பில்லை, தேவையில்லை. அதேபோல்தான் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குமான மதிப்பு. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே என்பது மார்க்சிய கருத்து.

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த ‘உபரியை’ ‘சுரண்டி’ லாபமாக மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்தச் சொல் எமக்கு ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம் இதற்கு, பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், ‘தொழில் முனைவோன்’ என்ற சொல்லே சரியானது.) இந்த லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு என்கிறது மார்க்சியம். சில கேள்விகள்:

1.தொழில்முனைவோரின் ‘உபரி மதிப்பு’ என்ன? ஒரு நிறுவனத்தைக் கட்டமைக்க, நிர்வாக மற்றும் மேலான்மைத் திறன்கள் மிக மிகத் தேவை. ரிஸ்க் எடுக்கும் திறன், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் திறன், புதுமையான சிந்தனை, தலைமைப் பண்புகள், தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை அவசியம்.இவை இல்லாமல் தொழில்முனைவோர் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தமுடியாது. இவற்றின் ’உபரி மதிப்பு’ என்ன ?

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே நாளில் தொடங்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இரண்டும் ஒரே வகையான எந்திரங்களைக் கொண்டு, ஒரே வகையான பொருள்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில் விற்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம அளவு திறமை, உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒராண்டுக்குப் பிறகு, ஒரு தொழிற்சாலை ஒரளவு லாபத்தையும், மற்றொன்று நஷ்டத்தையும் அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம், அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால், பிறகு நஷ்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின் தொழிலாளர்களின் ‘உபரி மதிப்பு’ எங்கு சென்றது? இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள், சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களைக் கொண்டு, ஒரே ரகபொருள்களைத்தான் உற்பத்தி செய்தனர். பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது?

3. கூட்டுறவு அல்லது அரசுத் துறையில், மேற்கொண்ட உதாரணத்தில் உள்ளதைப் போன்ற அதே வகை /அளவிலான நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம் மற்றும் உற்பத்தித் திறன், தனியார் நிறுவனங்களைவிடக் குறைவாக இருப்பது இய்லபு. ஏன்? காரணம், உரிமையாளர் என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பொறுப்பற்ற
மனோபாவம். அரசுத் துறையின் மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் தனியார் துறையைவிட குறைவாகவே இருக்கிறது. இவர்களின் ‘உபரி மதிப்பு’ எப்படிக் குறைந்தது? அது எங்கு சென்றது?

மேலும், பொருளாதார மந்தங்கள் படிப்படியாக மோசமானவைகளாகவே உருவாகும் என்ற அனுமானமும் தவறு. அதாவது முந்தைய மந்தத்தைவிட அடுத்து உருவாகும் மந்தம் மோசமாகவே இருக்கும் என்ற அனுமானம் தவறு என்றே வரலாறு நிரூபிக்கிறது. 1930களில் உருவான பெரிய மந்தத்தைவிட அடுத்து உருவானவை அவ்வளவு கடுமையானதாக இல்லை. இன்று உருவாகியுள்ள மந்தத்துக்கான காரணிகள் வேறு.

-K.R. அதியமான்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Oct-15, 12:04 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 321

சிறந்த கட்டுரைகள்

மேலே