கௌரவப் பிச்சைக்காரர்கள்
கௌரவப் பிச்சைக்காரர்கள்!!! - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல் என்ற சிந்தனையோ இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களின் ஓட்டத்திற்குத் துணையாகச் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை செல்லும் ரயிலில் எப்பொழுதும் போல் நானும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறிவிட்டேன்.
தினமும் ஒரே ரயிலில்பயணிப்பதும் ஒரு சுகம், வீட்டிலும், வெளியிலும் வேலைச் செய்துவிட்டு அரக்கப்பறக்க ஓடிவந்து ஏறிவிட்டால் ஜன்னலில் இருந்து வந்து மோதும் காற்று மனதைக் குளிர்வித்து, சோர்வைப் போக்கி உற்சாக மனநிலைக்குக் கொண்டுசெல்லும், அதைச் சொன்னால் புரியாது. இந்த ரயில் பயணம் ...... ஒரு வாழ்க்கைப்பயணம் போல்..ஆம், போதிமரம்!
நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவுக்கண்ணைத் திறக்கும், நாம் கேட்டாலும் இல்லையென்றாலும் நிதர்சனங்களை எடுத்துக்கூறும் பயணம்.ஜாதி, மத, இனம், ஆண், பெண், கல்வி, பொருளாதாரம் என்ற பாகுபாடு இல்லாத பயணம்.
“சுதா அக்கா, வந்துடீங்களா? ஸ்டேஷன்ல உங்களப் பாக்கவே இல்ல?”
“ஆமாம், நீலா. கொஞ்சம் இருந்திருந்தாப் பிடிக்க முடியாமத் திண்டாடியிருப்பேன். இன்னிக்கின்னு ஆபீஸில மீட்டிங் வேற இருக்கு. அதுகூட இந்த டென்ஷன்வேற.” என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
சென்னை வரை நின்றுக்கொண்டே சென்றாலும் சுவாரசியமான பேச்சு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியில் பயணித்து அலுப்பைத் தராது. எப்பொழுதும் போல் அரட்டைக் கச்சேரி நடந்துகொண்டு இருந்தது.
இன்று பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராளுமன்றக் காண்டீனில் வழங்கப்படும் சலுகை விலைப் பக்கம் திரும்பியது.
ஒருவர் விலைபட்டியலை வாசித்தார் .....
“டீ - ₹ 1; சூப் - ₹5.5௦; வெஜ் தாலி - ₹ 12.5௦; சப்பாத்தி- ₹1, தோசை - ₹4, சிக்கன் பிரியாணி - ₹51; .....”
“ம்ம்ம் இது அந்நியாயம்..., காலைல இருந்து சாயங்காலமோ ராத்திரியோ எவ்வளவு நேரம் ஆனாலும் வேலையை முடிச்சிட்டு வரும்போது ஒரு வாய் காப்பி வாங்கிக் குடிக்க நாம இவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு. இருபது ரூபா குடுத்து காப்பி டீ குடிக்க நினைச்சாலே மனசும் வாயும் வேண்டாம் போ அப்படின்னு சொல்லிடுத்து. ...இப்போ பால் விலை ஏறினதுல இருந்து பட்ஜெட்ல பெரிய ஓட்டை விழுந்ததால ஒரு நேரம் தான் பால் வாங்கறேன், அதுனால வீட்டுலையும் ஒரு வேளை காப்பிக் கட். காப்பிக்கே இப்படினா ஒரு ஆளுக்கு ஒரு வேலைக்கே வெளி சாப்பாடு சாப்பிட நூறு இல்ல நூறுக்கு மேல கொடுக்க வேண்டி இருக்கு?” என்ற மஞ்சரியை ஆதரித்து
“ஆமாம், ஆமாம். அதுக்காகவே உடம்புக்கு முடிஞ்சாலும் இல்லைனாலும் சீக்கிரம் எழுந்து காலைல, மத்தியானம்னு எல்லாருக்கும் சமைச்சிவெச்சிட்டு கொண்டுவர வேண்டியிருக்கு. அந்தப் பணம் இருந்தாப் பசங்க ப்ராஜெக்ட்கு இது வேணும் அது வேணும்ன்னுக் கணக்குல இல்லாத திடீர்ச் செலவுக்குக் கைக்கொடுக்குமே அப்படின்னு இருக்கோம்.” என்ற பாமாவின் நிலையே எங்களுடன் பயணிப்பவர்களின் பெருவாரியானவர்களின் நிலை.
“அட என்னங்க, நீங்க மட்டுமா? நாங்களும் தான்... முன்ன மாதிரிக் காப்பி, சிகரட், சினிமா இப்படி எல்லாத்தையும் விட்டுவிட்டு இருக்கிறோம். முன்னவண்டியிலப் போயிட்டு இருந்த நான் இப்போ பெட்ரோல் விலையால இப்படி ட்ரைன்ல தொத்தி கிட்டுப் போகவேண்டி இருக்கு. சீக்கிரம் போய்ப் புள்ளகுட்டியோட இருக்கலாம்ன்னு நினைச்சாலும் முடியல” என்று கிருஷ்ணன் பதில் கூறினார்.
“நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? பொம்பளைங்க நாங்க எத்தன நேரம் கழிச்சிப் போனாலும் வீட்டுக்குப் போனதும் அடுப்படியில ஏறினாத்தான் ராத்திரிக்குப் புவ்வா. வேலைய விடலாம்னு நினைச்சாலும் விக்குற விலைவாசிக்கு இப்போவே சமாளிக்க முடியல, இந்த அழகுல வேலைய விட்டா அவ்வளவு தான்.” என்றார் லதா.
“அதுவும் இல்லாம இப்போ இருக்கற விலைவாசிக்கு எங்க ஆரோக்கியமான உணவுச் சாப்பிட? காய்கறி விக்கற விலைக்குச் மாசத்துல பாதிநாள் ரசம் சோறும், துவையல், வத்தகுழம்பு, ஊறுகாய் வெச்சி ஓட்ட வேண்டி இருக்கு. அதுனால பசங்க எதிர்ப்பார்க்குற வித விதமான சாப்பாடுப் செஞ்சி தரவும் முடியல. காய்கறி மட்டும் இல்லாம எல்லாச் சாப்பாட்டுச் சாமான்களும் விலை ஜாஸ்தியா இருக்கு. ஒன்னும் மட்டும் இப்போ புரியுது, நகை நட்டு வாங்க மட்டும் இல்ல, நல்ல சாப்பாடு சாப்பிடணும்னாலும் கைலப் பணம் ஜாஸ்தி இருக்கணும்; இல்லைனா சலிசு காசுல சாப்பிட அரசியல்வாதியா இருக்கணும்.” என்று சாந்தா தொடர்ந்தார்.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த முத்தம்மா, “அட இவ்வளவு நாளும் என்னய மாதிரி இப்படிக் கூடையைத் தூக்கிக்கிட்டுப் போகாம என் பசங்கஉங்கள மாதிரிப் படிச்சி ஆபீஸ் போகனும்னு நினைச்சிகிட்டு இருந்தேன். இப்போ இல்லத் தெரியுது, ப்ரீ காஸ், டெலிபோனு, விமானம், ரயில் இப்படிப்பலதும் தந்து, கைல லட்சக் கணக்குல உழைக்காம இருக்கப் பணமும் தந்து..,(அவங்க கொள்ளையடிகரத்தைச் சேர்க்காம) இந்தப் பாவப்பட்ட தம்புரான்களுக்குச் சோறும் சுளுவாக் கிடைகும்னா என் பசங்களையும் இவங்கள மாதிரிக் கௌரவப் பிச்சைக்காரங்களாச் சுத்த விடலாமே.” என்றது சிந்திக்க வைத்தது.
“இத்தன வருஷத்துல யானைக் கட்டெறும்பாத் தேஞ்சக் கதையா நம்பக் கதை இருக்கு. நம்ம வரி பணத்தை எடுத்து அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டிக் கையேநுறக் கணக்கா இவங்கத் துன்னுறதுகுக் கொடுக்கனுமா? அதுவும் இல்லாமப் புதுசுப் புதுசா வரியாப் போட்டு மென்னியப்பிடிக்கறாங்க. ஆனா, அரசியல் வாதிங்க நிலைமை மட்டும் சூத்துலச் சுக்கிரன் அடிச்சக் கதையா ஷோக்கா கீது.... ஒரு வேள நல்ல சோறு போட நாதியில்லாமயிருக்கேன், ஆனா அரசியல்வாதிங்க விதவிதமா வெளுத்துக் கட்டுறதக் கேக்கும்போது என் புள்ளையும் நம்பள மாதிரிக் கஷ்ட படாம எக்காலத்துக்கும் வயறு நிறையச் சாப்பிடணும்னு நினைக்குறது தப்பா? அதுக்கு வேண்டித் தானே இப்படி கூடையச் சொமந்துகிட்டுப் போய் யாபாரம் பாக்குறேன்.” என்ற முத்தமா ஒரு தாயாய் நினைப்பதை தவறு என்று சொல்ல முடியுமா?
எல்லோரையும் சிந்திக்க வைத்த முத்தம்மா அதை அறியாது “இம்புட்டும் படிக்க வெச்சி ரசம் சோறும் துவையலும் துண்ணறதுக்கு பேசாம கட்சில சேத்துவிட்டுட போறேன். நம்ப நாட்டுல கட்சிக்கா பஞ்சம்? இந்த கட்சி இல்லேனாக்க அந்த கட்சி, எப்படியும் தாவி தாவி பொழச்சிப்பாங்க.. எப்படி தாவினாலும் விதவிதமா துண்ண முடியும். கண்ட பயலுக்கும் ஓட்டுப் போடுற நீங்க என் புள்ளைக்குப் வோட்டு போடமாட்டீங்க? ஆரம்பத்துல நீங்க எல்லாம் ஒரு கைத்தந்தாப் போதும்.. எம்புள்ள சாமார்த்தியசாலி மத்தவங்களப் பாத்துக் கப்புன்னு கத்துக்கும், கற்பூரப் புத்தி!!!