அந்த இடம் எங்கே

உலகம் பொல்லாதது - இதில்
உறவுகள் செல்லாதது
சுயநலம் சதிராடுது
பொதுநலம் போராடுது....!!

முல்லைப்பூ சிரிப்பிருக்கும்
முள் அதிலே புதைந்திருக்கும்
தேன்வழியும் பேச்சிருக்கும் - அதில்
தேவைகள் நிறைந்திருக்கும்..!!

வேடமிடா நாடகங்கள்
நடிக்கும் நல்ல கூட்டங்கள்
சிக்கல் தந்து சிரித்திருக்கும்
சிரிப்பதற்கு அழ வைக்கும்...!!

இன்ப துன்ப கலப்பினிலே
வாழ்க்கை எனும் சக்கரமே
இறைவனவன் வஞ்சனையில் - எனக்கு
துன்பங்கள் மாத்திரமே...!!

கனவுலகில் வாழ்ந்திருக்க
தூக்கம் துணை வருவதில்லை
துக்கம் சொந்தம் ஆன பின்னால்
தூக்கமெல்லாம் துரோகிகளே...!!

நலம் கெடுக்கும் உலகினிலே
பலம் தொலைந்து போகிறது
நான் தொலைந்து போவதற்கோ
நாள் இன்னும் வரவில்லை..!!

விழி நனைத்து போவதெல்லாம்
கவலை அழித்துப் போவதில்லை
வழிநடக்கும் பாதையெல்லாம் - நான்
வலி சுமந்து போகின்றேன்..!!

கள்ளமில்லை.. கபடமில்லை...
என்றுலகம் இருக்குமென்றால்
அங்கே நான் வாழுதற்கு
என்னிறைவா அருள் புரிவாய்...!!

எழுதியவர் : சொ.சாந்தி (20-Oct-15, 10:04 pm)
Tanglish : antha idam engae
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே