பெண்மை தூங்குவதில்லை
பெண்மை தூங்குவதில்லை
இரவு நேரம். ஆளில்லாத தேரிக்காடு.
பொன்னம்மாள் நடந்து கொண்டிருந்தாள். தனியாக நடந்து வந்து கொண்டிருந்த அவளுக்கு திடீரென நிலவும் துணைக்கு வந்தது. கருவேல மர இலைகளின் நடுவே அவளுடன் தொடர்ந்து அதுவும் வந்தது.
அவளுக்கு முதுகு குறுகுறுத்தது. ச்சே.. இந்த அறுவாளோடு ஒரே ரோதனையாப் போச்சு. முன்ன பின்ன அறுவாளை ரவிக்கையின் பின்புறம் மறைத்து வைத்திருந்தால்தானே உறுத்தல் பழகும். இதுதான் அவளுக்கு முதல் முறை. ஏன்.., இப்படி ஒரு அறுவாளை வைச்சு ஒரு கிராதகனை ஒரே போடாய்ப் போட்டு அவன் கதையை முடிக்க வேண்டும் என்று நினைத்ததும் இதுதானே முதல் முறை?
அவள் அவளை நினைத்தே வியந்து கொண்டாள்...
அவள்தானா? அவளேதானா? என்று பல முறை அவளையே கேட்டுக் கொண்டாள்.
ஆம். அவள்தான்.
மஞ்சள் சிக்குளித்த சாந்தமான முகம். உதடுகளில் எப்போதும் குடியிருக்கும் ஒரு அன்புப் புன்னகை. குறுகுறுத்த விழிகள். சாந்தமான பேச்சு. சாந்தமான பண்பு. சாந்தம்.. சாந்தம்... சர்வம் சாந்தம் மயம்.
ஆனால் எல்லாம் கல்யாணத்தோடு போச்சு.
இல்லை. ஒளிந்து கொண்டது.
காரணம் கனவுகள் பொய்த்துப் போய் தடம் புரள் வதற்காகவே அவளுக்கும், வேலுவுக்கும் கல்யாணம் ஆனதோ என்னவோ.
அவள் வாழ்க்கையை, மூன்று முடிச்சுகளோடு வேலுவுடன் பிணைத்துக் கொண்டபோது மற்ற சரா சரிப் பெண்களைப் போல அவளும் கற்பனை களில் மிதந்து மிதந்தே களைத்துப் போனாள்.
கண் நிறைந்த கணவன். பெண்மையைப் புரிந்து கொண்டு அவளை அரவணைத்து வாழ்க்கைத் தேரில் உல்லாச பவனி வருவான் என்று நினைத்திருந் தவளுக்கு முதலிரவன்றே பேரிடி விழுந்தது. காரணம் கண் நிறைந்த கணவன் என்று எதிர்பார்த்து பால் செம்புடன் நுழைந்தவளுக்கு கள் குடித்த கணவனே தென்பட்டான். பனியன் கூட போடாத கரு கரு உடம்பு. வியர்வை நாற்றத்தில் ஊறிப் போய் தாறுமாறாக கிடந்தது. புளிச்ச நெடி. தொப்பைக்கு கீழே நுனியில் கட்டிக் கொண்டிருந்த வேட்டி எந்த நேரமும் சரிந்து மேலும் இறங்கி விழுந்து விடுவது மாதிரி இருந்தது.
குமட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டாள்.
கட்டில் ஓரம் அமர்ந்து மயக்கத்தில் கிடந்த அவனையே பார்த்து கொண்டிருக்கையில் விடிந்து விட்டது.
அவன் கண் விழித்தபோது அவள் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். அவன் கரம்பட்டு விழித்தாள்.
ஏய்... முதலிரவுக்கு ஜாலியா இருடா மச்சான் என்று ஊற்றிக் கொடுத்துட்டான் மாடசாமிப் பய. நிறைய குடிச்சுட்டு பொத்துனு விழுந்துட்டேன்டி... மன்னிச்சுக்கிறியா? என்றான் அவள் தோளை அழுத்தி.
அந்த மாடசாமிதான் இவனுக்கு தோஸ்த்.
கல்யாணம் ஆன பிறகும் என்ன நெருக்கமான தோஸ்த். விட வேண்டியதுதானே. நேரம், காலம் தெரியாமல் கூடவே இருந்து தொலைத்தான். அவனைப் பற்றி பேச்சு வந்தது.
அவனைப் பற்றி எதுவும் பேசாத... வேறு எது வேணுமானாலும் பேசு* என்றான் வேலு.
அந்த மாடசாமியோ புருஷனுக்கு மொடாக்குடியைக் கொடுத்துவிட்டு அவனை அரை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு அவளிடம் வந்து ஆழம் பார்த்தான்.
நான் எப்படி இருக்கேன் பொன்னம்மா? கட்டுமஸ்தா இருக்கேனா? என்று கண்ணடித்தான்.
த்தூ என்று காரித் துப்பினாள் பொன்னம்மாள்.
யேய்... என்னடி... இன்னமுமா பெத்துக்காம இருக்கே? - கிராமத்திலிருந்து வந்த அத்தை கேட்டாள்.
ஆனால் பொன்னம்மாவின் புருஷன் அவளிடம் அன்பாய் இருந்தால்தானே ஆசையும் வரும். ஆசை வந்தால்தானே அத்தனையும் வரும். குழந்தை உட்பட.
அந்தப்பாவி மாடசாமி இவன் ராத்திரி முழித்துக் கொண்டிருக்கப்படாது என்பதில் கண்ணும், கருத்து மாய் இருப்பதுபோல் அல்லவா இயங்குகிறான்?. பொன்னம்மா என்ற புத்தம் புது பெண் கன்னி கழியா மல் இருந்து காலத்திற்கும் ஏங்க வேண்டும்.. விர கதாபத்தில் துடித்து தன் மடியில் விழ வேண்டும் என்பது மாதிரியல்லவா பார்க்கிறான். பேசுகிறான். பாவிப்பயல். அவன் பாழாப்போக.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவளுக்கு சுற்ற மும் நட்பும் கூட அவள் பிரச்சினையை கண்டு கொள்ள வில்லையே என்ற எரிச்சல் வந்தது. பாட்டியிடமும் அம்மாவிடமும் லேசு மாசாய் சொல்லிப் பார்;த்தாள். அவர்கள் கேட்கவில்லை. பெண் என்றால் எதுவும் நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா? அல்லது பொண்ணுகளுக்குன்னா இப்படித்தான் இருக்கும் என்று டகமாய் விளக்குகிறார்களா என்று தெரியவில்லை.
பக்கத்து வீட்டு பாம்படக் கிழவி கூட அட்சசு பண்ணிக்கோடி புருஷனை என்று இங்கிலீஷில் விளாசுகிறாள்.
அவளின் பெண்மையின் நளினம் மெல்ல மெல்லச் சிதைந்தது. கணவனின் அநியாய கோபங்கள், குடி போதை சண்டைகள் இவற்றையெல்லாம் நிராயுத பாணியாக எதிர்க்கத் துவங்கினாள். அடங்கிக் கிடக்க வேண்டிய பெண்டாட்டி இப்படி ஆட்டம் போடலாமா? அது ஆண்மைக்கே இழுக்கு என்று சண்டை போடுவதை மட்டும் ஆண்மை என நினைத்திருந்த வேலு புலியாய் எழுந்தான். அவளைத் துச்சம் செய்தான்.
என்னோட தோஸ்து மாடசாமியைப் பற்றி எதுவும் பேசின... பிறகு இந்த வீட்டு அறுவாதான் பேசும்... என்று திட்டவட்டமாய், அதுவும் மாடசாமியை வைத்துக்கொண்டே எச்சரித்துவிட்டதால் மாடசாமி அதைப் பெரிய அங்கீகாரமாக எடுத்துக் கொண்டான்.
அந்தப் பயங்கரமான நாள் அன்று. வேலு குடித்து விட்டு பெரிய ரகளையில் இருந்தபோது. மாடசாமி அவனை உசுப்பேற்றினான். உன் பெண்டாட்டிக்கு இவ்வளவு திமிர் ஆகாதுடா... உன்னைக் கிள்ளுக் கீரையா நினைக்கிறா... என்று தூபம் போட வேலுவுக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
பாவம். அவளுக்கு சப்போர்ட் இல்லாம் போயிற்று.
அப்போது சண்டை உச்சத்தை அடைந்தது. தள்ளாடிய வேலுவை பின்னுக்குத் தள்ளிவிட்ட மாடசாமி, டேய் நான் உன் பெண்டாட்டிய பணிய வைக்கிறேன்டா... பாரு... என்று கூறி நமுட்டுச் சிரிப்புடன் அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளின் பெண்மைத் திசுக்களில் அணுகுண்டுகள் வெடித்தன. உடம்பு எகிறி, பாவிப் பயலே... என் கையைப் பிடிச்சா இழுக்கிற... டே... இதப் பார்த்துட்டு இருக்கிற நீயெல்லாம் ஒரு புருஷனா...என்று அலறி எதுவும் தென்படுகிறதா என்று தேடும் போது தான் கீழே கிடந்த வீச்சரிவாளால் வேலுவை ஒரே போடாய் போட்டான் மாடசாமி...*
இரத்த வெள்ளத்தில் வேலு பிணமாகக் கிடக்க பொன்னம்மாவை பிடரியில் அடித்து மயங்கச் செய்தான். இவன் செத்தாலாவது நீ என் வழிக்கு வறியா பார்க்கலாம் - என்ற வார்த்தைகள் அவள் செவியில் இறங்குகையில் நினைவிழந்தாள். அவள் கையில் அறுவாள் திணிக்கப்பட்டது.
நினைவு திரும்பும்போது ஆஸ்பத்திரியில் கிடந்தாள். சுற்றிலும் போலீஸ். ஏதோ மிருகக் காட்சி சாலையில் வினோத ஜந்துவைப் பார்ப்பதுபோல வெராந்தா ஜன்னல்களில் மனிதத்தலைகள்.
டேய் பார்றா அவதான். புருஷனை வெட்டிக் கொன்னவ. கிளியாட்டம் இருக்கா... இப்படி பிசா சாட்டம் புருஷனை வெட்டிக் கொன்னுட்டாளே... நல்ல வேளை... அந்த மாடசாமிப் பய தப்பிச்சிட்டான். இல்லாட்டி அவனையும் ஒரே வெட்டுல மேலோகத்துக்கு அனுப்பிச்சிருப்பா...
அவள் மனம் இறுகிக் கிடந்தது.
பெண்மையின் நளினங்கள் முற்றிலும் சிதைந்து துருப்பிடித்துப் போயின. முகத்தில் இருந்த மஞ்சாரம், மினு மினுப்பும் காணாமற்போக, உடம்பெல்லாம் ஒரு பாறை இறுக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது.
போலீஸ், கோர்ட், வழக்கு என்று எல்லாம் வரிசைக்கிரமமாக முடிந்தவுடன் அவள் ஜெயிலில் அடைக்கப்பட்டாள்.
ஜெயில் வாசம் அவளை புது மனுஷி யாக்கியது... ஆம். அடிபட்ட புலி*
மிகமிக நல்லவளாக, பசுத்தோல் போர்த்திய புலியாக மாறிவிட்ட பொன்னம்மா, சிறையில் சேமித்த பணத்தைக் கொண்டு சின்னதாய் ஒரு அறுவாள் வாங்கிக்கொன்டாள் - விடுதலையானதும். செய்யாத கொலைக்கு ஜெயிலில் கிடந்தவள். மாடசாமியை கொலை செய்து விட்டு உண்மையான கொலைகாரியாக மீண்டும் திரும்புவதாக முடிவெடுத் திருந்தாள்.
தேரிக்காடு முடிந்து கிராமம் ஆரம்பித்துவிட்டது. இருட்டும் நேரமாதலால் கயிற்றுக்கட்டிலில் பெரிசு கள் படுத்திருந்தன. கிராமம் மாறவில்லை. அப்படியேத் தான் இருந்தது. பொன்னம்மா கோவிலுக்குச் சென்று பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
ஜன நடமாட்டம் இல்லை.
கோபுரத்தில் உள்ள மெர்குரி விளக்கை வெளவால்கள் வட்டமிட்டு வினோத ஒலி எழுப்பிப் பறந்தன.
அப்போது இருளைக் கிழித்துக் கொண்டு ஜலக் ஜலக் சத்தம். கொலுசு சத்தம். பொன்னம்மா தூணின் பின்னே ஒளிந்து உட்கார்ந்து கொண்டாள்.
கொலுசுக்குரியவள் இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் நடந்து போனாள்...
அட... கமலா.
ஏய்...* என்று கட்டுப்படுத்த முடியாமல் கூவி விட்டாள் பொன்னம்மா. கமலா அவளின் அன் புத்தோழி மட்டுமல்ல. அந்தரங்க தோழிகூட*
திடுக்கிட்டு திரும்பிய கமலா, பொன்னம்மாவைப் பார்த்ததும் நிலை குலைந்தாள். அவளால் நம்ப முடிய வில்லை. ஓடியே வந்தாள். இடுப்புக் குடம் நழுவி தடால் என்று விழுந்து தண்ணீரை அகாலமாய் பிரசவிக்க* பொன்னு... என்று கட்டிக் கொண்டாள் கமலா. நம்ப முடியாதவளாய் அரையிருளில் அவளைப் பார்த்து கன்னங்களைத் தடவி, கைகளைப் பிடித்து உச்சி முகர்ந்து, என்னமாய் இருந்தே... எப் படி மாறிட்டேடி... ஆண்டவனே... என்று கண்ணீர் மல்கினாள்.
எப்படி இருக்கேடி...கமலா...- தழுதழுத்த குரலில் பொன்னம்மாள் கேட்டாள்.
நல்லா இருக்கேன்... ஏண்டி... எங்களையெல்லாம் மறந்துட்டே? இரண்டு தரம் வேலூருக்கு வந்தேன். உன்னியப் பார்க்க... விடமாட்டேனு சொல்லிட்டானுவ... என்னடி கோயில் பிரகாரத்துல வந்து உட்கார்ந்திட்டே... ஊருக்குள்ளாற வா... என்று கமலா சொல்லும்போது பொன்னம்மாளின் இடுப்பில் நறுக்கென்று கடித்தது ஒரு கட்டெறும்பு.
ஆ* என்று அலறிய பொன்னம்மா கையைப் பின்னிற்கு கொண்டு போன போது ஜாக்கெட் நெகிழ்ந்து நங்கென்று அறுவாள் வெளியே விழுந்தது.
அட... அருவா...* ஏய் என்ன இது? அதிர்ந்தாள் கமலா. விழிகள் நிலை குத்தின
எதுக்குடி?
உண்மையான காரணத்தைச் சொல்லவா முடியும்?
ராத்திரி வரேன்ல கமலா... சும்மா ஒரு பாதுகாப்புக்குத்தான்...*
சரி... சரி... கிளம்பு... உன் வீட்ல உன்னோட அப்பாவும், அம்மாவும் ராமேஸ்வரம் போயிருக்காங்க... என் வீட்ல நீ தங்கிக்கலாம்... எழுந்திரு*
வேண்டாம்டி... நான் கொலைக்காரி... ஜெயிலுக்குப் போனவ
அடி செருப்பால. நீ ஜெயிலுக்குப் போனவ தான். ஆனா கொலைகாரி இல்ல. இது எல்லோருக்கும் தெரியும். கிளம்புடி... நீ வராட்டி நானும் போக மாட்டேன்....
அவளின் அன்புக் குளத்தில் நனைந்து பொன்னம்மா திக்குமுக்காடிப் போகிறாள். கமலாவின் அன்புக்குரல், கிராமத்தின் பல அன்புக்குரல்களாக கேட்டன. அவளின் இறுக்கம் குறைந்தது. பெண்மையும், நளினமும் மெல்ல தலைதூக்கின. தண்ணீரு பட்டவுடன் மறுபடியும் துளிர்க்கும் பசும்புல்லைப் போல அவள் உணர்வுகள் மனதின் அடி ஆழத்திலிருந்து கிளர்ந்தன.
கமலாவுடன் நடக்க ஆரம்பித்தாள். நடக்க நடக்க அவள் கிராமத்து மண் காலில் படப்பட மீண்டும் பழைய பொன்னம்மாளாக மாறுவது போல் உணர்ந்தாள்.
வழியில் கல் மண்டபம் குறுக்கிட்டது. பாழடைந்த மண்டபம்.
அதிலிருந்து சங்கிலி ஓசையும், யாரோ முனகுவதும் இருளில் கேட்டது.
அந்த மாட சாமிப்பய...* நாலு வருஷமா பயித்தியமா இருக்கான். சங்கிலியில கட்டிப் போட்டிருக்கு என்றாள் கமலா.
அந்த இருட்டு மண்டபத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தாள் பொன்னம்மா. பிறகு அருவாளை உருவி தூர எறிந்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.