கணவன் மனைவி

அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார்.

”வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட சொல்லாமல்… நந்தினி வரலையா?”

”இல்லப்பா… புறப்பட்டு வரணும்ன்னு தோணிச்சு. ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்.”

அவன் முகத்தில் தெரிந்த சோகம், கவலை. ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிய, உள்ளே நுழைந்தவனை மவுனமாக பின் தொடர்ந்தார்.

”அம்மா எங்கப்பா?”

”டாக்டர்ஸ் கான்பரன்ஸ்காக ஏற்காடு போயிருக்கா… நாளைக்கு வந்துடுவா.”

”நீங்க ரிடையர்டு ஆயிட்டீங்க. அம்மா இன்னும் வேலை பார்த்துட்டு இருக்காங்க…”உங்கம்மாவுக்கு ரிடையர்ட்மென்டே கிடையாது. அவ செய்ற தொழில் அப்படி. புனிதமான மருத்துவ தொழிலாச்சே… சரி… நீ என்ன குடிக்கிற… காபி… டீ?”

”இருக்கட்டும்பா… டிரெயினை விட்டு இறங்கியதும் காபி ஷாப்பில் குடிச்சுட்டு தான் வந்தேன். உட்காருங்கப்பா… உங்க கிட்டே தனிமையில் மனசுவிட்டு பேசுணும்ன்னு தான் பெங்களூருவிலிருந்து வந்தேன். அம்மா வீட்டில் இல்லாததும் நல்லதா போச்சு…”

புருவத்தை சுருக்கி, அவனை பார்த்தார்.

”தெரியுதுப்பா… நீ ஏதோ பிரச்னையில் இருக்கேன்னு உன் முகபாவமே சொல்லிடுச்சி. என்ன விஷயம்பா?”

மென்மையாக கேட்கும், அப்பாவை பார்த்தான்.

”நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோணுதுப்பா… நந்தினியை நான் கல்யாணம் பண்ணினது… என் வாழ்க்கையை நான் தொலைச்சுட்டேனோன்னு பயமா இருக்குப்பா…”

மூன்று வருடமாக காதலித்து, ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, இவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று திடமாக முடிவு செய்து, அவன் விருப்பப்படி தானே நந்தினியின் கழுத்தில் தாலி கட்டினான். திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்… இதென்ன கசப்பான வார்த்தைகள். புரியாமல், அவனை பார்த்தார்.

”ஆமாம்பா… என்னோட தனித்தன்மையை இழந்துட்டேன்னு தோணுது. எல்லாமே அவ விருப்பப்படி தான் நடக்கணும்ன்னு எதிர்ப்பார்க்கிறா. தானும் சம்பாதிக்கிறோம்ங்கற திமிர், அவ உடம்பிலே ஊறி போயிருக்கு. வெளியே போறது… வர்றது, சமையல் எல்லாமே அவ விருப்பம் தான். அது மட்டுமில்லை, “நானும் வேலைக்கு போறவ… நீங்களும் வீட்டிலே வேலைகளை பகிர்ந்துக்கணும்…’ன்னு கட்டாயப்படுத்தறா…

”அவளோட போராடி தோத்து போயிட்டேன்பா… எது பேசினாலும் அது விவாதமாக மாறி, சண்டையில் தான் முடியுது. என்னோட ஒத்துப்போகிற எண்ணம் அவ மனசிலே துளி கூட இல்லை. பேசாம நல்லபடியா இரண்டு பேரும் பிரிஞ்சுடறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது…”

”வசந்த்… உன் மனசுக்கு பிடிச்சவளைத்தான், உன் விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டே; நாங்க எந்த காலத்திலும், உன் விருப்பத்துக்கு தடை சொன்னதில்லை. இப்பவும் நான் உனக்கு புத்திமதி சொல்லணும்ன்னு நினைக்கலை. இது உன் மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்தவங்க சொல்லி அதை சரிபடுத்த முடியாது.

”நீ புறப்பட்டு வந்ததும், நல்லதா போச்சு. தனிமைதான், நல்ல விதமாக யோசிக்க வைக்கும். என்னை பொறுத்தவரை, உன் மேலேயும், நந்தினி மேலேயும் எந்த தப்பும் இருக்கிறதாக தோணலை. எந்த முடிவுக்கும் உடனே வந்துடக் கூடாது வசந்த்… யோசனை பண்ணி முடிவு பண்ணலாம்.”

”வசந்த்… என்னடா இது. நீ மட்டும் புறப்பட்டு வந்திருக்கே… நந்தினியை கூட்டிட்டு வரக்கூடாது; அவளை பார்த்து நாளாச்சு… வேலை, வேலைன்னு உடம்பை கெடுத்துக்கிறாளா… அடுத்த முறை அவசியம் அவளையும் கூட்டிட்டு வாப்பா…”

மருமகளை பற்றி ரேவதி விசாரிக்க, மவுனமாக இருந்தான் வசந்த்.

”இன்னைக்கு நான் ஆஸ்பிடலுக்கு லீவு போட்டிருக்கேன்; இன்றைய சமையல் உன்னோட ஸ்பெஷல், ப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா… ஓ.கே., வா?”
கலகலப்பாக பேசும் அம்மாவை பார்த்தான்.

“அம்மா எவ்வளவு நல்லவள். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி, அடுத்தவர் மனம் கோணாமல் பேசும் அம்மா… உன்னிடம் நந்தினியை பிரிய போகிறேன் என்பதை எப்படி சொல்வேன்…’ மனம் தவித்தது.

”எங்கே வசந்த், அப்பாவை அரைமணி நேரமாக காணோம்?”

அதற்குள் அங்கு வந்தவர், மனைவியை புன்னகையுடன் ஏறிட்டார்.

”எங்க போனீங்க; இன்னைக்கு நம்ம சமையல் மெனு என்ன தெரியுமா?”

”ம்… ப்ரைட் ரைஸ் செய்ய போறே… அம்மாவும், பிள்ளையும் பேசிட்டு இருக்கட்டுமேன்னு, நான் தான் ப்ரிஜிலிருந்து காய்கறிகள் எடுத்து வெட்டி வச்சுட்டு வந்தேன்.”

”உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா… நானே உங்க கிட்டே இந்த உதவி கேட்கணும்ன்னு நினைச்சேன். என் மனதில் இருப்பதை புரிஞ்ச மாதிரி உடனே செய்திட்டீங்க.”

அம்மாவும், அப்பாவும் இப்படி அன்னியோன்யமாக பேசிக் கொள்வது, மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கு. எனக்கும், நந்தினிக்கும் ஏன் இந்த ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது.

சாயந்திரம் அப்பா, வாக்கிங் சென்றிருக்க, தோட்டத்தில் அம்மாவுடன், காற்றாட அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

மகனை பார்த்து புன்னகைத்தவள், ”சொல்லு வசந்த், அப்புறம் உன் லைப் எப்படி போயிட்டிருக்கு… நந்தினி என்ன சொல்றா… நான் ஒரு பைத்தியம், மூணு வருஷமா ஒருத்தரையொருத்தர் விரும்பி, கல்யாணம் பண்ணிட்டிருக்கீங்க, நிச்சயம் உங்க வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கும்ன்னு எனக்கு தெரியும். தேவையில்லாமல் கேட்கிறேன். அது சரி… நீ மட்டும் வந்ததுக்கு நந்தினியையும் கூட்டிட்டு வந்திருந்தா மனசுக்கு நிறைவா இருந்திருக்கும்.”

”அம்மா… உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்… அப்பாவை பத்தி நீ என்ன நினைக்கிறே… முப்பது வருஷ தாம்பத்யத்தில் உனக்கு முழு நிறைவு கிடைச்சிருக்காம்மா?”

மகனை விழிகள் அகல பார்த்த ரேவதி, “”அப்பாவை பத்தி தெரிஞ்சும், இப்படி ஒரு கேள்வி எப்படி உன் மனசில் வந்தது. என்னை பார்த்தா நிறைவா வாழற மாதிரி தெரியலையா?”

”அதுக்கில்லம்மா… உங்க இளமை கால வாழ்க்கை எனக்கு தெரியாதில்லையா… அந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள்… மனசுக்கு நெருடலான விஷயங்கள்… ஒருத்தொருத்தர் கருத்து வேறுபாடு, இப்படி எதுவும் உன் வாழ்க்கையில் நடந்ததா? அப்பா உன் கிட்டே எப்படி நடந்துகிட்டார்ன்னு ஒரு ஆர்வத்தில் கேட்டேன்”

”புரியுது வசந்த்… உனக்கு தெரியாத சில விஷயங்கள், எங்க வாழ்க்கையில் நடந்திருக்கும்ன்னு நினைக்கற… அதையெல்லாம் எப்படி சமாளிச்சேன்னு கேட்க வர்றே அப்படித் தானே?

”அந்த விஷயத்தில், நான் ரொம்ப கொடுத்து வச்சவ வசந்த். உன் அப்பா மாதிரி ஒருத்தர், கணவனாக கிடைச்சதுக்கு, நான் கொடுத்து வச்சிருக்கேன். எனக்கு கல்யாணம் ஆனப்ப, பதினெட்டு வயசு.

”எனக்கு படிப்பின் மேல் இருக்கிற ஆர்வத்தை பார்த்து, உன் அப்பாதான் என்னை மெடிக்கல் காலேஜில் சேர்த்து படிக்க வச்சார். என் முன்னேற்றத்தை பார்த்து, உண்மையில் சந்தோஷப்பட்டார்.

”கடைசி வருஷம், படிப்பு முடியும் சமயம் நீ பிறந்தே. உன்னை நான் வளர்த்தேன்னு சொல்றதை விட, இரவு, பகலாக கண் விழிச்சு, அவர்தான் உன்னை வளர்த்தார்ன்னு சொல்லணும்… “ரேவதி… நீ ராத்திரியில் கண் முழிக்க வேண்டாம். குழந்தை அழுதா நான் பார்த்துக்கிறேன். படிச்சுக்கிட்டு, வீட்டு வேலையும் பார்த்து சிரமப்படாதே. ராத்திரி நல்ல தூக்கம் இல்லாட்டி, உடம்பு கெட்டுடும். நீ ரெஸ்டு எடு ரேவதி…’ என்பார்.

”உங்கப்பாவின் அன்பான வார்த்தைகள், எனக்கு நிறைய தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுத்துச்சு… இன்னைக்கு சொசைட்டியில் நான் ஒரு நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கினதுக்கு காரணம், உங்க அப்பாதான்…

”கணவன், மனைவிங்கிறது, வெறும் மூணு முடிச்சில் ஏற்படற பந்தம் மட்டும் இல்லப்பா… அதையும் தாண்டி உள்ளுணர்வோடு ஒருத்தரையொருத்தர் மனசார ஏத்துக்கணும்… அவரவர் நிறைகுறைகளோடு வாழறதுதான் உண்மையான தாம்பத்யம்…

”நீ நாலு வயது சிறுவனாக இருந்த போது, ஆபிசில் நடந்த கையாடலில், வேண்டாதவங்க உங்க அப்பாவையும் இழுத்துவிட, ஒரு வருஷம் வேலை இழந்து, அவர் வீட்டில் இருந்தப்ப, என் சேலை, துணிமணி கூட துவைச்சு போட்டிருக்காரு தெரியுமா? “இங்க பாரு ரேவதி… இந்த கேஸ்ல என் மேலே எந்த தப்பும் இல்லைன்னு நிருபணம் ஆயிட்டா… திரும்ப நான் வேலைக்கு போகத்தான் போறேன்… அதுவரைக்கும் உனக்கு உதவியாக இருப்பதில் எனக்கு சந்தோஷம் தான்…’ என்பார்.

”இன்னைக்கு வரைக்கும், உங்கப்பாவோடு சந்தோஷமாக தான் வாழ்ந்துட்டு இருக்கேன். மனைவிங்கிறவ தனக்கு இசைவாக தான் நடக்கணும், தனக்கு அடங்கி நடந்து, தன்னோட எண்ணங்களை தான் பிரதிபலிக்கணும்ன்னு நினைக்கறவங்க மத்தியில், என்னோட திறமைகளை ஊக்குவிச்சார்.

”தான் ஒரு சாதாரண வேலையில் இருந்தாலும், என்னை உயர்வான இடத்தில் வச்சு பார்த்து பெருமைப்படறாரே… அந்த நல்ல மனசுக்கு நான் காலம் முழுவதும் சேவை செய்ய கடமைப்பட்டிருக்கேன்பா,” குரல் நெகிழ பேசும் அம்மாவை பார்த்தான்.

”வசந்த் இங்கே வா… போனில் நந்தினி இருக்கா… இரண்டு நாளா உடம்பு சரியில்லையாம்… ஆபிசுக்கு போகாம வீட்டில் தான் இருக்காளாம்… நான் தான் தனியா இருக்காளேன்னு போன் பண்ணி பேசினேன். நீயும் ரெண்டு வார்த்தை பேசிடு.”

ரேவதி அழைக்க, போனை வாங்கி, ”என்ன… உடம்பு சரியில்லையா?”

”ஆமாம்… காய்ச்சல் அதிகம் இருக்கு. மாத்திரை போட்டுட்டு, வீட்டில் இருக்கேன். நீங்கதான், நான் எப்படி போனா என்னன்னு விட்டுட்டு போயிட்டீங்க. நீங்க பக்கத்தில் இருந்தா, அதுவே எனக்கு பெரிய பலம்ன்னு உங்களை பிரிஞ்சு இருக்கிற இந்த சமயத்தில்தான் தோணுது.

”நானும் வார்த்தைகளாலே உங்களை நிறைய காயப்படுத்தி இருக்கேன். உங்ககிட்டே நான் அன்பை காட்டறதை விட, ஆத்திரத்தை அதிகம் காட்டினதாலே தான், உங்க மனசிலிருந்து விலகிட்டு வரேன்னு இந்த தனிமை எனக்கு புரிய வச்சுடுச்சுங்க… நீங்க… நீங்க… எப்ப வர்றீங்க?”

குரல் தழுதழுக்க நந்தினி பேச, உள்ளுக்குள் உடைந்து போனான் வசந்த்.
நானும் ஈகோ பார்த்து, நந்தினி விஷயத்தில் கடுமையாக தான் நடந்திருக்கிறேன். அம்மா சொன்னது போல், அவரவர் நிறைகுறைகளோடு மனசார ஏத்துக்கிறது தான், உண்மையான தாம்பத்யம். நானா… நீயாங்கற போட்டிக்கே, இதில் இடமில்லை. இப்படி ஒரு அம்மா, அப்பாவுக்கு மகனாக பிறந்த நானா, இப்படி நடந்து கொள்கிறேன்?

”என்னங்க பேச்சையே காணோம்; இன்னும் என் மேலே இருக்கிற கோபம் குறையலையா? சாரிங்க…”

”அதெல்லாம் இல்லை நந்தினி… இன்னைக்கு ஈவினிங்கே ப்ளைட் பிடிச்சு, ராத்திரிக்குள் அங்கு வந்துடறேன்; டேக் கேர்!”

என்றுமில்லாத அன்பும், பாசமும் வழிய, பழைய வசந்தாக மகன் பேச, அவன் மனதில் ஏற்பட்ட சலனங்களும், சஞ்சலங்களும் மறைந்து விட்டதை புரிந்து கொண்டார் அப்பா. அவன் அருகில் வந்து, அன்புடன் அவனை தட்டிக் கொடுத்தார்.


- சுசிலா பாலன் (டிசம்பர் 2010)

எழுதியவர் : இணையம் சிறுகதைகள் (21-Oct-15, 7:06 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kanavan manaivi
பார்வை : 435

மேலே