தன் வினை தன்னைச் சுடும்
தான் பொறந்து வளர்ந்து வாழ்ந்த கிராமத்தை நோக்கி ரெண்டு கால்கள் நடந்து கொண்டிருந்தன...
நடந்து கொண்டிருந்த பாதையோ சரியான பொட்டல் காடு...
சூரியனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சியோ...
நன்றாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான் நிலத்தை...
கூட பேச்சுத்துணைக்கு கூட யாருமின்றி மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருந்தன கால்கள்...
சிறிது வயதாகிவிட்ட காரணத்தால் நடையில் ஒரு தடுமாற்றம் இருந்தது...
கால்கள் சிறிது சிறிதாக முன்னொக்கிச் செல்ல... மனது அதுபாட்டுக்கு பின்னோக்கி சென்றது...
அப்பொழுது இவருக்கு சொந்தமா எக்கச்சக்கமான வயற்காடும் தோட்டமும் இருந்துச்சு...
ஊருலேயே இவரு ராஜா மாதிரி...
அதிலேயும் கொஞ்சம் பேச்சுத்திறமையும் இருக்க... மெல்ல மெல்ல கிராமத்திலேயிருந்து ஆரம்பிச்சு ஒவ்வொரு அடியா வச்சு... அரசியல்ல ஒரு நிலைக்கு போயிட்டாரு...
அப்புறம் என்ன.. அமைச்சராக கூட ஆயிட்டாரு...
அப்புறம் தான் ஒரு பெரிய ஆட்டமே போட்டாரு...
ஊருக்கு ஏதோ தொழிற்சாலை கொண்டுவரேனு சொல்லி இருந்த வயக்காட்டெல்லாம் சமமாக்கி... தோட்டத்தையெல்லாம் அழிச்சு... இருந்த கொஞ்ச நஞ்ச மரங்களையும் வெட்டிபோட வச்சிட்டாரு...
ஊரே எதிர்த்தும் ஒண்ணும் பண்ண முடியல...
ஒவ்வொருத்தரா ஊர விட்டு கெளம்ப ஆரம்பிச்சிட்டாங்க...
அப்பத்தான் புதுசா ஏதோ சட்டம் வர... இவரு ஒரு பெரிய ஊழல்ல மாட்டிக்கிட்டாரு...
எவ்வளவு தப்பிக்கபாத்தும் இவருக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சிருச்சு...
கூட நின்ன ஒண்ணு ரெண்டு பேரும் விட்டுட்டு போயிட்டாங்க...
இப்பத்தான் தண்டனை எல்லாம் முடுஞ்சு... ஊருப்பக்கமா வந்துட்டு இருக்காரு...
ஊரை வெறுமனே பார்க்க பார்க்க... அவரு கண்ணுரெண்டுலேயும் தண்ணி தண்ணியா கண்ணீர் கொட்டுச்சு...
மரமே இல்லாத இடத்திலேயும் ஆ ஊ ன்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு... இலைகள் எல்லாம் உரசுர மாதிரி...
இத்தன நாளா இவரு எப்படா வருவாருன்னு பார்த்துக்கிட்டு இருந்த எல்லா மர ஆவிகளும் ஒண்ணுகூடி வந்த மாதிரி... இவருக்கு தோணுச்சு...
தண்ணிக்கும் வழியில்லாம, ஒதுங்க நிழலுக்கும் மரமில்லாம, நாக்கு வரண்டுபோயி... அவரால அழிக்கப்பட்ட அந்த நல்ல பூமியிலேயே... அவரு அப்படியே சுருண்டு விழுந்தாரு...
பாவம் அவர காப்பாத்தத்தான் அந்த ஊருலேயே இப்ப யாருமே இல்லை...