இருந்தோம் இருக்கிறோம் இருப்போம் - வினோதன்

ஓடிக்கொண்டே இருக்கிறோம் !

ஓடுகிறோம் அதி வேகமாக...!
எதை நோக்கி என்றுகூட
வினவ நேரமின்றி !

பிறப்பிலிருந்தே
ஆரம்பிக்கிறது ஓட்டம் !
மருத்துவரின் - பணம்
தேடு பயணத்திற்காக
அறுக்கப்படுகிறாள் தாய்,
அறுந்து விழுகிறது சேய் !

பாடசாலை நோக்கிய
பெற்றோரின் ஓட்டம் - பின்
அப்பிஞ்சு பாலகனுக்கு
இரக்கமின்றி கடத்தப்படுகிறது !

காதலிக்க வேண்டிய
புத்தகத்தை - மூட்டையென
சுமக்கவிட்டு - கல்வியைக்கூட
திணிக்கிறது சமூகம் !

மேற்படிப்பை - அவன்
திறமையை விட
கிடைக்கும் கல்லூரியும்
கிடைக்கா பணமுமே
மூர்க்கமாய் தீர்மானிக்கின்றன !

அணுஅணுவாய் ரசிக்கப்பட
வேண்டிய காதலைக்கூட,
அரைகுறையாய் அனுமானித்து
அவசர முடிவுகளால்
ரணம்மிகு கணங்களின்
கண்களுக்கு இரையாகிறோம் !

திருமணம் என்பது
தேவை என்பதை மறந்து
கடமையாக பாவிக்கிறது
பணம் சூழ் சமூகம் !

குமுகாய தகுதிநிலைக்காக
நாம் இழந்தவை ஏராளம் !
படிப்பு, வேலை, மனைவி
பிள்ளை, வீடு, வாகனமென
வாழ்தல் தான் வெற்றியா ?

பணமே - வெற்றியின்
உள்ளார்ந்த அளவீடாக
பரிமாண வளர்ச்சியடைந்துள்ளது !
அந்த பணத்தையும்
அதன் மூலமாக
அந்த வெற்றியையும்
அடையவே ஓடுகிறோம் !

காலையுணவை
மறக்காமல் துறந்தபடி !

வடிபடா கஞ்சியுடன்
சோற்றை விழுங்கியபடி !

தாய் தந்தையைக் கூட
காண காலமின்றி !

எதையும் ரசிக்க
துளி பொறுமையின்றி !

கடவுளைக் காண
குறுக்கு வழி தேடி !

இயற்கை அழைப்புகளைக்கூட
தள்ளிப்போட தயங்காமல் !

அவசர கோழிகளில்
அறுசுவை தேடிக்கொண்டு !

சம்பள வெட்டிற்கு பயந்து
செத்தவரை புறக்கணித்து !

வேகத்தைக் கூட்டி
விபத்தை விலைக்குவாங்கி !

தலைக்கவசம் மறந்து
தலையை காவு கொடுத்து !

இரு நிமிடத்தில் காரியம்
சாதிக்க - காரீயம் உண்டு !

ஓடிக்கொண்டே இருக்கிறோம் !

பணத்தை அச்சடித்து
அதையே அச்சாக்கி
சுழலும் சமூகத்தில்
மகிழ்வைத் மறந்து
வெற்றியைத் தேடியோடவே
பழக்கப்பட்ட பந்தைய
குதிரைகள் நாம் !

ஓடிக்கொண்டே இருந்தோம் !
ஓடிகொண்டே இருக்கிறோம் !!
ஓடிக்கொண்டே இருப்போம் !!!

எழுதியவர் : வினோதன் (23-Oct-15, 3:15 pm)
பார்வை : 85

மேலே