ஒப்பாரி வைத்து ஓதுவது ஏனோ
கயவனைக் கருவிலே
போட்டு எரித்தது
ஏனோ?
ஈனக்கரையிலே
கன்னிகள் கருவை
கரைத்ததால் தானோ!
சிதைமுட்டும் வயிற்றில்
சிசுக்கரு சிக்கியது
ஏனோ?
தெருமுற்றம்
திறக்காமல்-கருமுற்றம்
கருகியதால் தானோ?
திரைநீர் தீயில்பட்டு
காயப்புண்ணை
கக்குவது ஏனோ?
மண் அகமெங்கும்
மனிதம் புடைத்து
வெடிப்பதால் தானோ!
அலைக்கரைகள்
அம்மணப்பட்டு
கிடப்பது ஏனோ?
ஆடையாய்
ஆழிக்கொலைகள்
நடப்பதால் தானோ?
பாவத்தின் வெற்புகள்
பசுமையாய் இருப்பது
ஏனோ?
கற்புடை கங்கையிலும்
கயவர்கள்
குளிப்பதால் தானோ!
செம்மொழி தமிழை
செவ் வாய்கிழிய
சீரழிப்பது ஏனோ?
அரசியல் அமைத்து
மொழி வளர்க்கத்
தானோ?
எந்தப்பக்கமும்
உதயசூரியன்
உதித்திடத் தானோ?
ஒப்பாரி வைத்து
ஓதுவது ஏனோ?
துதித்த கடவுள் வந்து
தூக்கிக்கொடி
பிடிக்கத் தானோ?
புண்ணிய நதிகள்
கன்னிய மிழந்து
காய்ந்து
துடிப்பது ஏனோ?
பாவிகளின் மீதும்
பாவிமகள்
இரக்கம் வைத்ததால்
தானோ?
வாக்கியங்கள் ஒடிந்த
சாரங்களை யின்னும்
வாதிகள்
தூக்கி சுமப்பது ஏனோ?
மசூதியை யிடித்து
மனித வளம்
குறைத்திடத்தானோ?
பெண்ணியக்கைதியாய்
பெண்டுகள் கொதிப்பது
ஏனோ?
ஆதிக்க முடிச்சுகளால்
ஆளுமைச்சிறைகளில்
அடைத்ததால் தானோ?

