கதவுகளின் கதை

பால்ய பிராயத்து எனதூரில்
பல வீடுகளில் கதவுகளே இல்லை ..
இருந்த சில வீடுகளிலும்
திறவுகோளின் தேவை இருந்ததில்லை ..
அப்பத்தாவின் பெரிய ஓட்டை காதைப் போல
ஒரு சங்கிலியை இழுத்து
அதில்
இல்லாதவன் வீட்டு குழந்தையின்
காதில் சொருகி வைப்பதை போன்று
ஒரு மரக்குச்சியை தான் சொருகி வைத்து சென்று வருவர் ..

அதுவும்
ஆடு மாடு வீட்டுக்குள் புகுந்து
இருக்கும் கம்பு சோள தானியங்களை
தின்று விட கூடாது என்பதற்காக
தின்று விட்டால் வயிறு ஊதி
கருப்பசாமியோ... அய்யனாரோ..
செத்து விடக் கூடும் என்பதற்காக ..

கூலிக்கு செல்வதானாலும் சரி
சோளியாய் பக்கத்துக்கு ஊருக்கு போய் வருவதானாலும் சரி
பக்கத்துக்கு வீட்டிலோ
தெரு முக்கு கடையிலோ
ஒரு வார்த்தை சொல்லி விட்டு
குச்சியை சொருகிவிட்டு
நிம்மதியாக சென்று வரலாம்...

இப்போது போல கதவுகளால்
அடையாளம் காணப்படவில்லை வீடுகள்
அதன் கூரைகளால்
இனம் காணப் பட்டன..
ஓட்டடுக்கு ஆசாரி வீடு
மச்சு வீட்டு கந்த சாமி வீடென
அதன் கூரைகளால் அடையாளம் காணப் பட்டதப்போது ...

இப்போ பட்டணத்தில்
பத்தடுக்கு வத்திகுச்சி வீட்டில்
கிரில் கேட்டு போட்டு அதுக்குள்ள பத்திரமா இருக்கும் கதவையும்
நம்பி விட்டு வர முடியாமல்
காமெராவும் பொருத்தி உத்து உத்து பாத்துகிட்டு இருக்கான்
கதவை...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (24-Oct-15, 2:15 pm)
பார்வை : 152

மேலே