வாழ்வியற் குறட்டாழிசை 12

வாழ்வியற் குறட்டாழிசை. 12.
சோம்பலின் ஆட்சி.


தீயெனும் முயற்சியைச் சோம்பல் போர்த்தி
நீறு பூத்த நெருப்பாக்குகிறது.

மூதேவி ஆதரிப்பாள் சோம்பேறியின் இடத்தை.
சீதேவி ஆதரிப்பாள் முயற்சியாளனை.

தீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.
பேடியாகி எதிரியிடம் தோல்வியுறுவான்.

மெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்
மொத்த நோய்களின் குத்தகைக்காரன்.

முயற்சியாளரை உலகு ஏற்கும், சோம்பலுடைய
அயர்ச்சியாளரை ஒதுக்கி விடும்.

சோம்பேறி இருட்டில் சுருண்டு கிடப்பான்.
அம்பலத்திலும் ஆட மாட்டான்.

புவனத்தை மறக்கடிக்கும் நோய்களாம் கவலையீனம்,
கவனயீனத்தினாதி காரணம் சோம்பலே.

ஆளுமைக்குள் தன் சோம்பலைக் கொள்பவன்
ஆளும் தகுதி உடையவன்.

சோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்
தாம்பூல வரவேற்பு உண்டு.

ஆம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
சோம்பல் அழித்தோன் மனது.



ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-8-2011.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (26-Oct-15, 3:28 am)
பார்வை : 61

மேலே