தினம் தினம் திருமணம்

பாலியல் வணிகத்திற்கு
பருவப் பிஞ்சுகள் கடத்தல் !
காமவான்களின் பசிக்கு
கன்னிப் பெண்கள் இரை !

வறுமை விலைபேசலில்
வாழ்வின் வசந்தங்கள் தொலைப்பு !
வித்தைத் தின்னும்
விவசாயி போல் பிழைப்பு !

ஒருவாய்க்கும் வருவாய்க்கும்
பண முதலைகளின் பெருவாய்க்கும்
வலியோடும் வேதனையோடும்
வயிற்றுக் கரு கலைப்பு !

மரகதவல்லி மீனாட்சி
மாநகரில் விமானத்தின் கீழ் !
மனம் நொந்த மீனாட்சிகளோ
மாபெரும் அவமானத்தின் கீழ் !

கோயிலுக்கும் குறைவில்லை
குட முழுக்கிற்கும் குறைவில்லை !
பக்திக்கிங்கே பஞ்சமில்லை
பள்ளிவாசல் தேவாலயங்கள் கொஞ்சமில்லை !

அம்மன்களுக்கு இங்கே
ஆண்டுதோறும் அழகாய் திருமணம் !
அடிமைப்பட்ட பாவையர்க்கோ
அன்றாடம் புதிதாய் திருமணம் !

மாப்பிள்ளைகள் மட்டும்தான்
மாறிக் கொண்டே இருக்கிறார்கள் !
மதவேறுபாடும் இல்லை
சாதிப் பாகுப்பாடும் இல்லை !

- ருக்மணி

எழுதியவர் : கவிஞர் ருக்மணி (28-Oct-15, 12:00 am)
சேர்த்தது : கவிஞர் ருக்மணி
பார்வை : 121

மேலே