தேவதைகள் தூங்குகிறார்கள் - 3

மீண்டும் இரவு பேசணும் ...இரவை பகலாக்கிக் கொண்டு ... வீடு நோக்கிய பாதையில் விளையாடி நடந்து கொண்டிருந்தாள்... வழியில் தென்பட்ட மாந்தர்கள் அவளைக் கடக்கும் பொழுது வெறும் சிலைகள் உருண்டு செல்வதாகவே உணர்ந்தாள் இந்த உலகில் அவள் மட்டுமே பேசும் தேவதை போல ஒரு தீர்க்கம்... இன்னமும் விஜியின் விரல்களுக்குள் அவளது விரல்கள் தஞ்சமடைந்து கிடப்பதாக தன் இடது கையை பாவித்து நடந்தாள்... இளந்தாடியும் இனித்த கன்னங்களும் இன்னமும் அவளைத் தரைக்கு அனுப்ப வில்லை... இப்படியே அவளது பாதங்கள் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டது

நிறமற்ற Toyota Etios வீட்டு வாசலில் ... தன் நிலை உணர்ந்தவள் சுதாரித்தாள்... புரிந்தது... அப்பாவைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்... முகப்பு கடந்து வீட்டினுள் சென்றவளை முகப்பு தாண்டிய அலுவல் அறையில் இருந்து கொண்டே அப்பா பார்த்தார் "வந்துட்டியாடா வினி" வினி - அப்பா செல்லமாக அழைப்பது. "ஆமாப்பா " சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் கணபதி சில்க்ஸ் புடவையை வைத்துவிட்டு அடுப்படி நோக்கி விரைந்தாள்… "ஒரு நிமிஷம் வந்துடறேன்..." அப்பா வந்தவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு மகளைப் பார்க்க வீட்டின் உள்ளே வந்தார் "என்னடா purchase போனியா அதான் தாமதமாயிடுச்சா " தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டார் மகள் மீது அத்தனை செல்லம். அடுப்படியில் நுழைந்தவர் "உனக்கு மட்டும் தேநீர் போட்டுக்கோ நான் எனக்கும் வந்தவருக்கும் போட்டுக் கொண்டேன், இதைச் சொல்லத்தான் வந்தேன் எனக்கு இன்னும் சற்று அலுவல் இருக்கிறது நீ உனக்கு எதாவது வேலை இருந்தா பார் " என்று சொல்லிவிட்டு மகளின் பதிலுக்கு காத்திராமல் அறை நோக்கி வந்திருக்கும் நபருடன் அலுவல் தொடரச் சென்றார்.

தன் அறைக்குச் சென்றவள் புதிதாக வாங்கி வந்த புடவையைப் பிரித்தாள் முழுவதுமாகப் பிரிக்காமல் முதல் சில மடிப்புகளைப் பிரித்ததோடு தன் இடது தோளில் முந்தானையாகப் போட்டுக் கொண்டு அடுத்த முனையை முன்னழகைத் தாண்டி இடுப்பின் வலது பக்கம் வரை இழுத்துக் கொண்டு ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடியில் இடப் பக்கமும் வலப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து தன்னைத்தானே புன்னகையோடு... தலையை வலது தோள் தொட்டும் இடது தோள் தொட்டும் ரசித்துக் கொண்டாள். பின்னால் நின்றுகொண்டு விஜி புன்னைகைப்பது போல் தோற்றம். "என்னடா பாக்குற... நீ தானே இந்தக் கலர் எனக்கு எடுப்பா இருக்குன்னு சொன்ன.... இப்ப சிரிக்கிற.... " என்று சத்தம் வெளியில் வராமல் சிணுங்கிச் சிரித்தாள். "என் மூக்கு உனக்கு ஜப்பான் மூக்கா... உனக்கு மட்டும் என்ன கத்தி மூக்கோ ... இரு இரு இதே மாதிரி ஜப்பான் மூக்கா பெத்துக் கொடுக்குறேன்..." என்று அவள் நினைவில் உரையாடும் பொழுதே "...க்ளுக்...." சிரிப்பு சற்று சத்தமாகவே வெளியாகியிருந்தது.

அருகில் இருந்த அவளது படுக்கையில் போர்த்திய புடவையோடு தலையணையில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி அவனை சுவாசிக்கத் தொடங்கினாள்... இது எப்படி நடந்தது இன்னமும் அவளால் நம்ப முடிய வில்லை அந்த மெல்லிய விளக்கொளியில் முதல் பார்வையில் எப்படி சாத்தியம்... இருவர் நினைப்பும் ஒரே கோட்டில் பயணிக்க... எப்படி நிகழ்ந்தது... மணிக் கழுத்தின் அடிப்பாகம் தொடங்கி மனதின் பாகமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் மலை நெஞ்சு தாண்டி இளமை தேக்கிய மலர் இடை வரைக்கும் மூச்சுக் காற்றின் உள் வழிப் பயணத்தில் மேலெழும்பி… சுவாசக் காற்றின் வெளி வழிப் பயணத்தில் மேலெழுந்த பாகங்கள் கீழிறங்க... மேலெழ... கீழிறங்க...மேலெழ.... கீழிறங்க....உடல் முழுதும் அவனைக் உடுத்தி உறங்க வைத்துக் கொண்டிருந்தாள்...

விஜி... சத்தம் கேட்டு பின்னால் திரும்பினேன் "என்னடா என்ன நினைப்பு கூப்பிடக் கூப்பிட அமைதியாப் போயிட்டு இருக்க..." நண்பன் ஆதிதான் அது "இல்லடா ஆதி எதோ சிந்தனை... சரி அத விடு... உன்னோட நவீன காய்கறி விவசாயம் project எவ்வளவு தூரத்தில் இருக்கு...." என்றேன்... இருவரும் பேசிக் கொண்டே என் வீடு வரை வந்தோம்... அவன் விடை பெற்றுச் சென்றதும் முகப்பில் காலணிகளைக் களைந்துவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தேன் எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாக இருந்தாலும் நான் உள்ளே நுழைந்ததைக் கண்டுகொள்ளாமல் இல்லை... "விஜி... இப்பவே சாப்பிட்டுட்டு போய்டு.... மாடிக்கு போனா அப்பறம் கீழ இறங்கவே மாட்ட.... எனக்கு வேலைய முடிக்கணும்....." அடுப்படியில் இருந்து அம்மாவின் குரல் கச்சிதமாக ஒலித்தது, "7 மணிக்கேவா... என்னம்மா இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..." சொல்லிக் கொண்டே குளியலறை நோக்கி விரைந்தேன்.....

தட்டில் இட்லி வைக்கும் கைகள் அவள் கைகளாகவே... சாம்பார்க் கரண்டி பிடித்த கைகள் அவள் கைகளாகவே... "ரெண்டே இட்லி இன்னமும் என்னடா பெசஞ்சுகிட்டே இருக்க..." அம்மாவின் குரல் என்னைத் திருப்பியது பாவம் அவளுக்கு எப்படித் தெரியும் என் மனதை இன்னொருத்தி பிசைந்து கொண்டிருக்கிறாள் என்பது என்று நினைக்கும் பொழுதே புன்னகை எழுந்தது இட்லியோடு புன்னகையையும் மென்றேன் அம்மாவுக்காக... "..க்கும்..." விக்கிய தலை தட்டும் கைகள் அவளது... தண்ணீர்ச் செம்பு நீட்டிய கைகள் அவளது... "பாத்து சாப்பிடுடா... எனக்கு வேலை முடிக்கனுங்கரதுக்காக வாய்ல வச்சு குத்திக்காத..." மீண்டும் அம்மா என்னைத் திருப்பினாள்... "நான் குத்திக்கல... என் விக்கலுக்குக் காரணம் வி.. வி.." சுதாரித்துக் கொண்டு வி யுடன் புள்ளி வைத்தேன். "என்னடா வி வி " என்றாள் அம்மா, " விக்கல் தான் " என்று விட்டு விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டேன்.

தம்பியின் அறைக் கதவு சாத்தி இருந்தாலும் உள்ளே எரிந்துகொண்டிருந்த மின் விளக்கு அவன் படித்துக் கொண்டிருக்கிறான் என்று வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது

மாடிக்கு விரைந்தேன்... எனது நினைவு மேகமெங்கும் வியாபித்துக் கொண்டிருந்தாள் விசாந்தினி... கீற்று வெளிச்சத்தில் தோன்றிய பதுமை... கிண்ணக் கரைசல்கள் கொட்டிய ஓவியம்... என்னையும் ஆட்கொண்டு விட்டது இந்த அணுக்கற்றை காணாத மனக் கூற்று... அறிவியல் விளக்க முடியாத அதிசயம்... ஒரு புது சொந்தம்... உறங்காமலே கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும்... எனக்குள் பொழியும் மழை... அவளின் இரு விழிகள் வீசிய தூண்டிலில் விழுந்த இதயம் விடுபட்டு எழ மறுக்கிறது... பூக்காயம்... இது புதிது... காதல் சொல்லாத கவிஞன் இல்லை என்றார்கள்... ஒரு கவிஞன் உருவாகிறான் என்றால் அதற்கு முதல் காரணம் அவனது காதலாகத்தான் இருக்க முடியும்... பிள்ளையைப் பெறுவது தாய்... கவிஞனை ஈன்றேடுப்பது காதல்... என்னையும் கவிக்க வைத்துவிட்டாள் தூண்டில் பார்வையாள்... அவளைப் பற்றி யோசித்துக் கொண்டும்... எழுதிக் கொண்டுமே இருக்க வேண்டும்... நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லாதவன்... இனி ஒவ்வொரு கணங்களையும் வாழவேண்டும்... அனுபவிக்கும் தருணம் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் அதை எண்ணி எண்ணி ரசிக்க வேண்டும்... அதற்கு இன்று முதல் எழுதத் துவங்க வேண்டும்... அலமாரியில் தேடினேன் ஏதாவது தென் படுகிறதா... பழைய நாட்குறிப்புப் புத்தகம் என்றாலும் பரவாயில்லை என்று பட்டது... தென்படுகிறதா... அதோ ஒன்று... அவ்வப்போது சில தேவைகளுக்காக இடையிடையே தாள்கள் கிழிக்கப் பட்டு... மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தேதிகளைக் காட்டியது... அடுத்து பேனா... தேவை இல்லாத பொழுதுகளில் எல்லாம் கண்களில் ஆங்காங்கே தென்படும்...

எண்ணம் தொட்டவளே
------- இத்தனைநாள் எங்கிருந்தாய்
கண்ணன் ராதையெனக்
------- காதல்மழை போழியவந்தாய்
சின்னச் சிரிப்பினிலே
------- சிறையென்னைப் பிடித்துவிட்டாய்
கன்னம் சிவந்தவளே
------- கவியெழுத வைத்துவிட்டாய்

இன்னும் எழுதிக் கொண்டே இருப்பேன்...

அவளின் அழைப்பிற்காக அலைபேசியை அருகாமையில் வைத்துக் கொண்டு படுக்கையில் கிடந்தேன். அப்பாவுக்குத் தெரியாமல் அல்லாவா அவள் அழைக்க வேண்டும் எனவே எப்பொழுது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம்... திடீரென்று நினைவு வர அலைபேசியின் மின்கற்றை அளவையைச் சோதித்தேன் 20% என்றது அடடா புன்னகையாள் என்னைப் பூமிக்கு அப்பால் இட்டுச் செல்ல இது பத்தாது... மின்னூட்டியைச் செலுத்தி அலைபேசியை மேசை மீது வைத்தேன்... அனார்கலி சலீமின் அந்நாளையக் காதல் அலைபேசி இல்லாமல் எப்படி இனித்திருந்திருக்கும்... அமராவதி அம்பிகாபதி தொலைபேசித் தொடர்பின்றி என்ன சுவைத்திருந்திருப்பார்கள்... வரலாற்று காதலையே சற்று வம்பிழுக்கத் தோன்றியது... "காலங்களில் அவள் வசந்தம்..." என்ற அந்தக் கண் காணாக் கவிஞனைக் கற்பனையில் கை கூப்பத் தோன்றியது... அதே கண்ணதாசனின் "பாடாத பாட்டெல்லாம்..." நினைவுக்கு வர அட... என்ன கவிஞனடா நீ... இப்படியா ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்திருப்பாய்... என்று ஆரத் தழுவத் தோன்றியது... இதயம் கனக்கும்... என்று கவிதைகள் படித்த பொழுதுகளில் உணர்ந்ததில்லை... ஒரு முழுக் கவளம் தண்ணீரில்லாமல் தொண்டைக் குழியை வந்து அடைத்த அந்தப் பொழுதில்... கண்களில் சட்டெனப் படர்ந்த நீர்த்திவலை... காதலித்திருந்தாலன்றிக் கடுகளவும் புரிய வைக்க முடியாது வார்த்தைகளில்... ஹார்மோன்கள் சுரப்பு என்ற அறிவியல் விளக்கம் ஒரு கருவி... கூட்டும் இசையின் குழைவைச் சுவைக்க கருவிக்குக் கிடைக்காத பாக்கியம்... இந்த அனுபவ அனுமதி பெறாதவர்களைப் பாவப் பட்டவர்களாகவே எண்ணத் தோன்றியது...

நா வரட்சி... சற்றே இருமினேன்... குரல் கம்மியிருந்தது புரிந்தது... கீழே இறங்கி அடுப்படி நோக்கி நடந்தேன்... குளிரியைத் திறந்து கதவு பாகத்தில் இருந்த தண்ணீர் நிரம்பியிருந்த சீசா ஒன்றை வெளியில் எடுத்து வாய்ப் பாகத்தை என் குவிந்த உதடுகளுக்குக் கொடுத்தேன்... வாயு அடுப்பில் எதோ வேலையாக விசாந்தினி நின்றுகொண்டிருந்தாள்... "வினிம்மா... மேல வரும்போது தண்ணி கொண்டு வந்துட்ரா..." "நான் பால் எடுத்துட்டு வரணும்பா..." சிணுங்கினாள்... எதேச்சையாகத் திரும்பினேன் அவள் அணிந்திருந்த அந்த பருத்திப் புடவையில் அசைவுகள் என்னை அவளருகில் அழைத்தது... அடுப்பின் எதிர்ப்புறம் இருந்த அலமாரியின் மேலறையிலிருக்கும் சர்க்கரைக் குடுவையை எடுக்க பின்னால் திரும்பித் தன் வலக் கையை உயர்த்தினாள்... முந்தானையை இழுத்து அவள் இடுப்பில் சொருகிய லாவகம்... கோடிட்ட இடமாகப் புடவை விட்ட இடை... இந்த இரவில்... அவளின் இளஞ்சோர்வு... பருத்திச் சேலை அவளோடு ஒட்டியிருந்தது என்றே சொல்லவைத்தது... புதுத் தாலி மார் பூக்களின் மீது கொடியாய்ப் பரவி... மறைந்திருக்கும் சிப்பிகளின் கிளர்ச்சியில்... உள்ளக் கடல் கொந்தளித்ததன் இரைச்சல் என் இதயச் செல்களுக்கு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது... நான் அவளின் பின்னால் நின்று அவளது வலபுறத் தோளில் என் முகவாயை வைத்து... சேலை மறைக்காத இடையை என் இரு கரங்களால் வளைத்து மறைத்தேன்... என் இடது தோளில் அவள் தன் தலையை பின்புறமாய்ச் சாய்த்தாள்... மைக் கூந்தலின் கதகதப்பு என் மெய் முழுதும் பரவியது... இளம் புருவம் தாங்கிய நெற்றிக் கீற்றில் தவழ்ந்த வந்த காற்று எனது அனுமதி இல்லாமலேயே என் நாசிக்குள் புகுந்து ஆணை பிறப்பித்தது... இத்தனை அருகாமையில் அவளின் இமைக் கற்றைகள் இப்படியே இரு என என் மூளைச் செல்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தது... பூசிய என் இரு உதடுகள் அவளின் வலக் காதுக்குக் கீழே கன்னப் பகுதியில் மெதுவாய்... மெது..வாய்.. மெ..து..வா..ய்...... கூசிய கன்னங்களால் அந்தச் சிலிர்ப்பு... அவளின் கன்னச் சருமத்தின் ரோமங்கள் உறக்கம் விழித்ததை உணர்ந்து களித்தேன்... வாய் நிரம்பிய தண்ணீர் என் கீழுதடு தாண்டிக் கழுத்தில் சரிந்து நெஞ்சைத் தொட்டு ஆடை நனைத்தது... அடடா இத்தனையும் நிசமாக நிகழப் போகும் சில்லென்ற தருணங்கள் எப்போது... ஊ ...... என்று கத்தித் துள்ளிக் குதிக்கத் தோன்றியது... படித்துக் கொண்டிருக்கும் தம்பியின் அறை வெளிச்சம் என்னைக் கட்டிப் போட்டது.

அலைபேசி சிணுங்கி இருமுறை ஒளிர்ந்து நிற்கவும் நான் அறைக்குத் திரும்பவும் சரியாக இருந்தது... அவள் தான்... எத்தனை முறை பேசினாலும் இந்த அலைபேசி சமிஞைக்கு இன்னமும் மனசு பட படத்துக் கொண்டுதான் இருந்தது... WhatsApp குறுஞ்செய்தி... என்ன தான் அறிவியல் வளரட்டும் எம் தமிழ் அங்கே கொடி நாட்டும்... ஆம்... தமிழில் வந்த குறுஞ்செய்தி... முதல் வார்த்தை மட்டும் தெரிய... முழுவதும் படிக்க... மனம் அதிகரித்த லப்டப் புடன் ஆவலாய்...

(தொடரும்...)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேவதைகள் தூங்குகிறார்கள் தொடர் கதையின் அடுத்தடுத்த பாகங்களை எழுத விரும்புவோர் கவிஜி அவர்களை விடுகை மூலம் தொடர்புக் கொள்ளுங்கள் - நன்றி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : மீ.மணிகண்டன் (28-Oct-15, 2:15 pm)
பார்வை : 358

மேலே