கழுதையும், கட்டெறும்பும்

கழுதையும், கட்டெறும்பும்!
-------------

ஓர் ஊரில் கழுதையும், கட்டெறும்பும் நட்பாக இருந்தன. கழுதை தான் தினமும் படும் கஷ்டத்தையும், தன் முதலாளி தன்னை அடித்துத் துன்புறுத்துவதையும் கூறி, தன் மன ஆறுதலைத் தேடிக் கொள்ளும். கட்டெறும்பும், கழுதைக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி தேற்றிச் செல்லும். ஒரு நாள் கட்டெறும்பு தன் புற்றின் வெளியில் அமர்ந்திருந்தது. அப்போது, கழுதையின் மேல் பெரும் பொதியை வைத்து கழுதையின் வயிற்றோடு கட்டி, பின் அதை ஆற்றுக்கு ஓட்டும் முகமாக, ஒரு தடி கொண்டு ஓங்கி அடித்தான். கழுதை பொதியை சுமக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி செல்ல, அதன் முதலாளி பலம் கொண்ட மட்டும் கழுதையை அடித்து, விரட்டிக் கொண்டிருந்தான். கழுதையின் நிலையைக் கண்டு கட்டெறும்பும் கண்ணீர் விட்டது.

“தன் நண்பன் இப்படி வேதனைப்படுகிறான். நாம் எவ்வளவோ பரவாயில்லை. பிறர் மிதித்தோ, அடித்தோ தன் உயிர்தான் போகுமே ஒழிய, தாம் யாருக்கும் அடிமை இல்லை’ என்று நினைத்து பெருமூச்சு விட்டது. பின் அன்று மாலை, துவைத்து எடுத்து வந்த ஈரம் இன்னமும் உளராத துணிகளை முதுகில் சுமந்தபடி ஆடி ஆடி வந்தது கழுதை. முதலாளி தான் உணவு உண்டு உறங்கி பின் போதும் போதாதுமாக கழுதைக்கு தீவனம் வைத்தான். அதை கழுதை ஆசை ஆசையுடன் உண்டு பின் படுத்தது.

அப்போது மெல்ல கட்டெறும்பு கழுதை அருகில் வந்தது.

“”நண்பா, சுகமில்லையா?” என வாஞ்சையுடன் கேட்டது கட்டெறும்பு.

“”வா, நண்பா! இன்று பொதியின் கனம் தாங்க முடியவில்லை. அதோடு ஏகப்பட்ட அடி வேறு. உடல் முழுதும் வலி. வயிற்றுக்கும் போதுமான உணவு இல்லை. தனியாக மேயலாம் என்றால் கட்டு போட்டுவிட்டான் என் முதலாளி.” கழுதை வருத்தத்துடன் கூறியது.

“”நண்பா, கவலைப்படாதே. உன் முதலாளியின் கொட்டத்தை எப்படியும் அடக்குகிறேன். உன் நிலையை இன்று நானே நேரில் பார்த்தேன். எவ்வளவு கொடுமை இழைக்கிறான் உன் முதலாளி” என்று கூறி நண்பனைத் தேற்றியது. அப்போது மாலை முடியும் வேளை. முதலாளி கையில் தீப்பந்தம் ஏற்றி வந்தான்.

“”ஐயோ… நண்பா, என்ன இது உன் முதலாளி இப்படி தீப்பந்தத்துடன் வருகிறான்” என்று அஞ்சியபடி கேட்டது கட்டெறும்பு.

“”நாம் இருக்கும் மரத்தின் மேல் ஒரு பெரும் தேன்கூடு இருக்கிறது. அதை இப்போது பிரித்து தேனை எடுக்கப் போகிறான் என் முதலாளி” என்றது கழுதை.

இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து, கழுதையிடம் கூறிவிட்டு வேகமாக தன் புற்றுக்குச் சென்றது. தயாராக தன் பின்னால் ஐந்து கட்டெறும்புகளை நிறுத்தி கட்டளைக் கொடுத்து காத்து நின்றது. அப்போது, முதலாளி தீப்பந்தம் ஏந்தி, படுத்திருந்த கழுதையின் வயிற்றில் ஒரு கால் வைத்து ஏற, கழுதை வலி தாங்காமல் துடித்தது, அதை லட்சியம் செய்யாமல், மரக்கிளையில் கூட்டின் பக்கம் தீப்பந்தத்தைக் காட்டும் சமயம், கட்டெறும்பு கட்டளையிட, மற்ற ஐந்து கட்டெறும்புகளும் வேகமாகச் சென்று முதலாளியின் பாதத்தை ஆறு இடங்களில் ஒரு சேர கடித்தன. அவன் “”ஐயோ” என்று அலறியபடி தடுமாறி கீழே விழுந்தான். தீப்பந்தம் அவன் முதுகில் விழுந்து அந்தச் சூடு பொறுக்க முடியாமல் அலறினான். அதை வீசி எறிய, அந்தப் பந்தம் கழுதையை கட்டியிருந்தக் கயிற்றில் பட்டு எறிய கயிறு அறுந்தது.

அவ்வளவுதான், கழுதை சுதந்திரமாக எழுந்தது. எறும்புக் கடி, தீக்காயம் இவைகளால் வலி கொண்டு படுத்திருந்த முதலாளியைப் பார்த்து புன்னகைத்தது. “ஐந்தறிவு பிராணிகளிடம் அன்பு செலுத்தாது, அடித்துத் துன்புறுத்திய உனக்கு ஆண்டவன் கொடுத்தப் பரிசு’ என்று எண்ணி, தன்னை விடுவிக்க காரணமான கட்டெறும்பு நண்பனைப் பார்த்தது. ஆனால், அவை முதலாளியின் பாதத்தில் நசுங்கி, அதன் மற்ற நண்பர்களுடன் இறந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கி அழுதது.

அதற்குள், முதலாளி மெல்ல எழுந்து கழுதையை பிடிக்கலானான். அப்போது, முதலாளியை ஒரு உதை விட்டு, கானகம் நோக்கி ஓடியது. இப்போது, முதலாளியை தேனீக்கள் வட்டமிட்டு கடிக்க, அவன் “ஐயோ… அம்மா…’ என்று அலறியபடி வீட்டினுள் சென்று தாளிட்டான்.

தன் உயிர் கொடுத்து நண்பனுக்கு உதவிய கட்டெறும்பின் அருமையை நினைத்தபடி கழுதை சுதந்திரக் காற்றை அனுபவித்தது.

+
வாணிஸ்ரீ சிவகுமார்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (28-Oct-15, 10:19 pm)
பார்வை : 1022

மேலே