குதிரையும் கொடுத்தான்

குதிரையும் கொடுத்தான்!

ஏமாற்றுக் கதைசிறுகதைகள்பழங்காலக் கதைகள்
----------------
இந்தக் கதை நடந்த காலம் சைக்கிள், மோட்டார் உபயோகத்தில் இல்லாத காலம்.

ஒரு நாள் வெயில் காய்ந்து கொண்டிருந்த நண்பகல் நேரம். சாலையிலே நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன், சற்றே இளைப்பாற வேண்டி ஏதேனும் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் நடந்து கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்ற உடன் ஒரு குளமும், அதையொட்டிய சிறு கிராமமும் தென்பட்டது. கையில் கொண்டு வந்திருந்த உணவை குளக்கரையில் அமர்ந்து சாப்பிட்டான். கை கால்களை கழுவிக் கொண்டு கிராமத்திற்குள் நுழைந்தான்.

நீண்ட தெருவின் இரு பக்கமும் ஓட்டு வீடுகள் தென்பட்டன. ஒரு வீட்டின் வாயிலில் வேப்ப மரமும், அதை ஒட்டி பெரிய திண்ணையும் இருந்தன. காம்பவுண்டு சுவர் எழுப்பி வழிப் போக்கர்களுக்கு உதவாமல் இருக்கக் கூடிய நிலை அக்காலத்து மக்கள் அடையவில்லை. வருவோர் போவோர்க்காக விசாலமான திண்ணைகள் அமைக்கப்பட்ட காலம். உண்ட களைப்பு, அத்துடன் கூட நடந்து வந்த களைப்பு. இரண்டிலிருந்தும் சிறிது நேரம் விடுபட்டு ஓய்வெடுக்க எண்ணிய வழிப்போக்கன், அந்த வீட்டின் படிகளில் ஏறினான். வாசற்கதவு சாத்தியிருக்கவே, சரி வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி திண்ணையிலே துண்டை உதறிப் போட்டு காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.

நன்றாக ஒரு தூக்கம் தூங்கி எழுந்தவனுக்கு தாகம் எடுத்தது. எழுந்து உட்கார்ந்துக் கொண்டவன், வீட்டின் உட்புறம் திரும்பிப் பார்த்தான். இப்பொழுது கதவு சற்றே திறந்திருந்தது. யாரோ வீட்டுக்குள் நடப்பது தெரிந்தது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டான். உடம்பை கதவிற்குப் பின் மறைத்துக் கொண்டு, தலையை மட்டும் நீட்டிய ஒரு பெண்மணி உங்களுக்கு குளிர்ந்த நீர் தேவையா அல்லது வெந்நீர் தேவையா என்று கேட்டாள். இந்த வெயிலுக்கு குளிர்ந்த நீர் தான் தேவை என்றான் வழிப்போக்கன். சிறிது நேரத்தில் ஒரு சொம்பு நிறைய குளிர்ந்த நீர் கொண்டு வந்தாள் அந்த இல்லத்தரசி. ஒரு நொடியில் சொம்பு காலியாகியது.

“”இந்தத் திண்ணை, வேப்பமரக் காற்று அடடா, சொர்க்கம் போலவே இருக்கிறது” என்றான் வழிப்போக்கன். சொர்க்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இல்லத்தரசியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“”நீங்கள் சொர்க்கத்திற்கு போயிருக்கிறீர்களா?” என்று வினவினாள்.

வழிப்போக்கன் புத்திக் கூர்மையானவன். அந்தப் பெண்மணியை ஒரு முறை உற்றுப் பார்த்தான். அவள் ஒரு அரைப் பைத்தியம் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. அசட்டுத்தனமான அவளது கேள்விக்கு நேராக பதிலளிக்காமல்,

“”சொர்க்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை” என்று வினவினான்.

“”ஆறு மாசம் முன்னால் தான் என்னுடைய ஒரே பெண் தங்கம் காலமானாள். செல்லமா வளர்ந்த பொண்ணு. அவ இப்ப எங்க இருக்கா. சொர்க்கத்திலா இல்ல நரகத்திலா ஒண்ணுமே புரியல. ரொம்ப கவலைல இருக்கேன்” படபடவென பொரிந்தாள்.

உஷாரான வழிப்போக்கன் “”ஒரு முறை என்ன, சொர்க்கத்திற்கு அடிக்கடி போய்விட்டு வருவதுதான் என்னுடைய வேலை. உங்க பொண்ணோட அடையாளம் சொல்லுங்கள். ஒருவேளை நான் அவளைப் பார்த்திருக்கலாம்” என்றான்.

தங்கத்தின் அங்க அடையாளங்களை அந்தப் பெண்மணி கூற, வழிப்போக்கன் பலமாக தலையாட்ட தொடங்கினான்.

“”இந்தப் பெண்ணை நான் நன்றாகவே பார்த்திருக்கிறேன். சட்டை துணிமணிதான் சரியாக இல்லை. கழுத்தும் காதும் மூளியாக இருக்கிறது” என்றான்.

அவனது பதிலைக் கேட்டு அதிர்ந்து போன பெண்மணி, “”என்ன! என்னுடைய தங்கத்திற்கு சட்டை துணிமணி இல்லையா? அவள் கழுத்தும் காதும் மூளியாகவா இருக்கு. அச்சச்சோ அவளுக்குன்னு தைத்த துணிமணி எல்லாம் இங்கே வீணாப் போகிறது. நகை நட்டு போட்டுக் கொள்ள ஆளில்லாமல் பெட்டிக்குள் கிடக்கு. நீங்க ஒரு உதவி செய்வீங்களா?” என்று வழிப்போக்கனைக் கேட்டாள்.

“”உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு உபகாரமாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம். என்ன உதவி செய்ய வேண்டும்” என்றான் வழிப்போக்கன்.

“”தங்கத்தோட துணிமணி, நகை எல்லாத்தையும் மூட்டை கட்டித் தருகிறேன். அடுத்தமுறை நீங்க சொர்க்கம் போகும் போது அதை அவளிடம் கொடுங்க. என்னுடைய தங்கம் எந்தக் குறையும் இல்லாம இருக்கணும்” என்றாள்.

இன்று நாம் நரி முகத்தில் விழித்தோம். இந்த அசடு நம் குடும்பத்திற்கு தேவையான துணிமணி, நகை எல்லாவற்றையும் தருகிறது என்று சிந்தனை செய்த வழிப்போக்கன், “”கொடுங்கள், கொடுங்கள் பத்திரமாக சேர்த்துட்டு அடுத்த முறை இந்தப் பக்கம் வரும் போது உங்களுக்கு தகவல் தருகிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய மூட்டை அவன் முன்னால் இருந்தது. விஷயம் தெரிந்தவர்கள் யாரேனும் வருவதற்குள் விரைந்து கம்பி நீட்ட வேண்டும் என்று முடிவு செய்தான் வழிப்போக்கன். “”நான் இன்னும் சற்று தூரம் நடந்து செல்ல வேண்டும். இருட்டுவதற்குள் ஊர் போய் சேர வேண்டும். வருகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

சிறிது நேரம் சென்றது. வெளியே சென்றிருந்த அந்த வீட்டு எஜமானர் வழக்கம் போல் தன் குதிரையில் இல்லம் திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்து கை, கால் கழுவுவதற்கு பின்பக்கம் சென்றார். பின்கூடத்தில் வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். தன் கணவருக்கு மரியாதையுடன் ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்த அப்பெண்மணி, சொம்பை அவர் முன்னால் வைத்து விட்டு, “”நம்ப தங்கம் சொர்க்கத்தில் தான் இருக்காளாம். உடம்பெல்லாம் அப்படியே தான் இருக்காம்.

போட்டுக்கத்தான் துணிமணி சரியாக இல்லையாம். காது, கழுத்து தான் மூளியா இருக்காம்” என்றாள்.

எஜமானருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் அசட்டு மனைவியைப் பார்த்து, “”என்ன உளர்றே” என்றார்.

“”நான் ஒன்றும் உளறவில்லை. சொர்க்கத்திலிருந்து வந்த ஒருவர் நம் வீட்டு திண்ணையில் படுத்திருந்தார். அவர்தான் தங்கத்தைப் பத்தி சொன்னார். நம்ப தங்கம் துணிமணி இல்லாம கஷ்டப்படலாமா? கழுத்து காது மூளியா இருக்கலாமா?” என்று பொரிந்து தள்ளினாள்.

எஜமானருக்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது புரிந்து விட்டது. துருவித் துருவி விசாரித்ததில் துணிமணி, நகை எல்லாம் ஒரு எத்தன் கையில் போயிருப்பதும் புரிந்து விட்டது.

தலையிலடித்துக் கொண்ட அவர், “”எந்தப் பக்கம் போனான் அவன்” என்று வினாவினார்.

குதிரை மீது ஏறிக் கொண்டு மனைவி காட்டிய திசையில் குதிரை செலுத்தினார்.

பின்னால், நாலுகால் பாய்ச்சலில் ஒரு குதிரை வருவதைப் பார்த்த ஏமாற்றுப் பேர்வழி செய்வதறியாது திகைத்தான். இருந்தாலும் நிலைமையை சமாளிக்க வேண்டி கையிலிருந்த மூட்டை உடன் அருகிலிருந்த ஒரு மரத்திலேறி ஒரு அடர்ந்தக் கிளையில் உட்கார்ந்து கொண்டான். வீட்டுக்காரர் மரத்தின் கீழ் குதிரையை நிறுத்தினார். உரத்தக் குரலில், “”டேய்… மரியாதையா கீழே இறங்கு” என்று மிரட்டினார். வழிப்போக்கன் அசைந்து கொடுப்பதாக இல்லை. விட்டேனா பார் என்று கூவியபடியே குதிரையிலிருந்து கீழே குதித்த எஜமானர் மரத்தின் மேல் ஏறத் தொடங்கினார்.

தனக்கு ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்த வழிப்போக்கன் கீழே குதித்தான். அவனது அதிர்ஷ்டம் சரியாக கீழே நின்று கொண்டிருந்த குதிரையின் மேல் விழுந்தான். பயத்தில் குதிரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். தன் எஜமான் மேலே அமர்ந்து விட்டார் என்று நினைத்த குதிரை ஓடத் தொடங்கியது.

எஜமானருக்கோ ஓன்றும் புரியவில்லை. மரத்திலிருந்து கீழே இறங்கினார். மனைவி கொடுத்த துணிமணிகள், நகைகள் ஒருபுறம், தனது அருமையான குதிரை மற்றொரு புறம் எல்லாமே பறிபோய் விட்ட நிலை அவரை திக்குமுக்காடச் செய்தது.

செய்வதறியாது திகைத்த அவர் குதிரை ஓடிய திசையைப் பார்த்து உரத்தக் குரலில், “”எமகாதக எத்தனே என் தங்கத்தைப் பார்த்தால் அம்மா நகை கொடுத்தாள், துணி கொடுத்தாள், உன் அப்பா குதிரையும் சேர்த்துக் கொடுத்தார் என்று சொல்” என்று கூவிவிட்டு வீடு திரும்பினார்.


+

வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (28-Oct-15, 10:23 pm)
பார்வை : 685

மேலே