பிறவாதே மானிடராய்

மானிடராய்ப் பிறவாதே
மதிகொண்ட மிருகங்களா
மானிடராய் மட்டுமிந்த
பூவுலகில் பிறவாதே

உறங்காது உழைத்திடும்
எறும்பு மக்கா
உன் உழைப்பிங்கே சுரண்டப்படும்
பிறவாதே மானிடராய்

உடையின்றி அலைந்திடும்
குரங்கு மக்கா
உன் கண்ணியம் குலைக்கப்படும்
பிறவாதே மானிடராய்

மனிதச்சாதி ஒன்றல்ல
ஆயிரம் ஆயிரம் இருக்கிங்கே
பழகுவதும் குற்றமென்பார்
பிறவாதே மானிடராய்

சுதந்திரமாய் பேசிடலாம்
என்றே நீ பேசிவிட்டால்
நாவறுக்கப் பட்டிடுவாய்
பிறவாதே மானிடராய்

பகையென்று வந்துவிட்டால்
குலையறுக்கப் படுவாய் நீ
பத்திரமாய் அங்கே இரு
பிறவாதே மானிடராய்

இம்மதமென்று
சொல்லிக்கொல்வான்
இந்நிறமென்று
சொல்லிக்கொல்வான்
பொன் பார்த்தால்
அள்ளிக் கொல்வான்
பெண்பார்த்தால்
சதை கிள்ளிக் கொல்வான்

பணமென்ற மாயயை தனிலே
தான்வாழ பிறரைக் கொல்வான்
மனம் என்ற ஒன்றை இங்கே
மிதித்துக் கிழித்து வீசிக் கொல்வான்

நிலைமாற நிறம் மாறுவான்
பெரும் கோர முகம் காட்டுவான்
முன் நின்று சிரித்திருப்பான்
பின் சென்று குழிபறிப்பான்

உயிர்க்கூட்டில் விளையாடுவான்
சிதைமீது பொருள் தேடுவான்
மடிதேடும் சிறுபிள்ளைக்கும்
வெண் நஞ்சுப் பொடி ஊட்டுவான்

எவன் வீழ்வான் என்றேதான்
காத்திருக்கும் இனம் இதுவே
ஆகையால்தான் மிருக மக்கா
பிறவாதே நீ மானிடராய் !!!

எழுதியவர் : வெ. கண்ணன் (31-Oct-15, 3:02 am)
பார்வை : 155

மேலே