மனிதர்கள் ஒரு பொழப்பு பல வயிறு

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அழகு என்று குதிரை வண்டிகளைச் சொல்லலாம். தமிழகத்தில் இன்னும் குதிரை வண்டிகள் மிச்சமிருக்கும் மிகச் சில இடங்களில் ஒன்று ராமேஸ்வரம். அங்குதான் சுப்பிரமணியைச் சந்தித்தேன். பெட்டிகளை வாங்கி வண்டிக்குள் வைத்த சுப்பிரமணி, “நம்பி ஏறுங்க சார், ராஜா சல்லுனு கொண்டுபோய் விட்டுடுவான்” என்றார். வண்டியில் கட்டப்பட்டிருந்த ராஜாவைப் பார்த்தால் சல்லென்று கொண்டுபோய் விட்டுவிடுவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக நின்றது. வண்டி நகர ஆரம்பித்தது.


“வெளிலேர்ந்து வர்றவங்களுக்குதான் சார், இது ஊர். உள்ளூர்க்காரங்களுக்குத் தீவு. ராமேஸ்வரத்துக்குள்ள நுழையணும்னாலும் கடலைக் கடக்கணும்; ராமேஸ்வரத்தைவிட்டு வெளியே போகணும்னாலும் கடலைக் கடக்கணும். எங்க பாட்டன் காலத்துல எல்லாம் வெளியூர் போய் வரணும்னா படகு சவாரிதான். அதே மாரி உள்ளூர்ல போய் வர ஒரே வழி குதிரை வண்டிங்கதான். நூறு வருஷத்துக்கு முன்னாடி, வெள்ளைக்காரன் புண்ணியத்துல பாம்பன் ரயில் பாலம் வந்துச்சு. பாலம் வந்ததுக்கு அப்புறம் படகு சவாரி கொஞ்சம் கொஞ்சமா கொறைஞ்சாலும் குதிரை வண்டிங்களுக்குக் கொற இல்ல. 1988-ல காந்தி ஜெயந்தி அன்னிக்கு ராஜீவ் காந்தி ரோட்டு பாலத்தைத் தொறந்து வெச்சார். வந்துச்சு ஆபத்து. பஸ்ஸு, கார், ஆட்டோவோடு சேர்ந்து தீவுக்குள்ள எல்லாம் வந்துடுச்சு.
இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னாடிகூட முந்நூறு நானூறு வண்டிங்க ஓடுன தீவு இது. இன்னைக்கு நாலு வண்டிங்க இல்ல. ஆனா, அந்த வண்டிங்களுக்குக்கூடத் தொழில் இல்லங்கிறதுதான் கொடுமை!” நிறையக் கசப்போடு பேச ஆரம்பிக்கிறார் சுப்பிரமணி.

“நீங்க இந்தத் தொழிலுக்கு வந்து எத்தனை வருஷம் இருக்கும்?”

“அது இருக்கும் நாப்பது வருசம். இவன் எனக்குப் பத்தாவது குதிரை. ரெண்டு பொண்ணு பையன்களை வண்டி ஓட்டிதான் கரை சேர்த்தேன். சுத்துப்பட்டு இருவது கிராமம் இருக்கு. அப்புறம், ஊருக்குள்ளேயும் இது ஒண்ணுதான் அப்போ போக்குவரத்து பாருங்க, நல்லா ஓடும். இப்போ இந்த ரயிலடியை விட்டா வழி இல்ல. காலையில சென்னைலேர்ந்து ராமேஸ்வரம் வர்ற மொத வண்டி சேது. அஞ்சு மணிக்கு வரும். நான் மூணு மணிக்கு எந்திருப்பேன். இவனைக் குளிப்பாட்டுவேன். ஒரு வாளி தண்ணி காட்டுவேன். நான் குளிச்சு முடிச்சு வரவும் இவன் தண்ணி குடிச்சி நிக்கவும் சரியா இருக்கும். ரயிலடி வந்துருவோம். நாலரை மணிக்கு வந்தோம்னா ஒரு மணி வரைக்கும் நிப்போம். மொத்தம் அஞ்சு வண்டி. ஒரு வண்டிக்கு ஒரு சவாரி கிடைச்சுட்டா அதிர்ஷ்டம். பெரும் பகுதி ராமநாதசாமி கோயிலுக்கு வர கூட்டம்தான். அம்பது ரூவா சத்தம். அதிசயமா, அஞ்சு வண்டிக்கும் அஞ்சு சவாரி கெடைச்சா எறநூத்தம்பது ரூவா கெடைக்கும். ஆனா, அது மாசத்துக்கு ஒரு நாள் நடந்தா பெரிசு. மூணு சவாரி, நாலு சவாரி கெடைக்கும். கெடைக்குறதுள்ள ஆளுக்குப் பாதி.”

“கட்டுப்படி ஆகுதா?”

“வெட்கத்தைவிட்டுச் சொல்லணும்னா, இது பாதி வயிறு பொழைப்புக்குதான் சார் ஆகும். நீங்க இவன் வயித்த பாருங்க, புரியும். குதிரைங்க பெருத்த உயிருங்க. வயித்துக்கு எவ்ளோ கொடுக்குறோமோ, அவ்ளோவுக்கு அதுங்க உயிரைக் கொடுக்கும். வயிறுன்னா பாத்தா, சின்னது; ஆனா, குடலு நீண்டது. அதிகாலையில பையில கொள்ளைக் கொட்டி, பைய மூஞ்சில கட்டிவிட்டோம்னா, நாளு முழுக்க அசை போடும். குதிரைங்கள்ல பல நூறு வகை சொல்வாங்க. இது பஞ்ச வகை. (சிரிக்கிறார்…) எங்களை மாதிரி பஞ்சத்துல அடிபட்ட ஏழைங்களுக்கு உதவுற வகை.
ஒரு நாளைக்கு ஆறேழு கிலோ கொள்ளு வைக்கணும். ஒரு கிலோ கொள்ளு நூறு ரூபாயைத் தொட்டு நிக்குற விலைவாசியில, நம்ம வருமானத்தை வெச்சிக்கிட்டு எங்க கொள்ளுக்குப் போக? நாலு கிலோ தவிடு வாங்கிப் போடுறேன். புயல், மழைனு சொல்லி ரயிலை நிப்பாட்டுற நாள்ல அதுக்கும் துந்தனாதான்.”

“குதிரையை எப்படிப் பழக்குவீங்க?”

“குதிரைங்க மனுஷனோட நல்லா உறவாடும் சார். பல விசயங்கள்ல நம்மளோட ரொம்ப நெருக்கமா இருக்கும்ணு வெச்சுக்குங்களேன். மனுஷப் புள்ளைக்குப் பத்து மாசம்னா, குதிரைக் குட்டிக்குப் பதினோரு மாசம். நம்மளை மாரி அதுக்கும் பிரசவத்துக்கு ஒரு புள்ளதான். ஆனாக்க, சீக்கிரம் வளர்ந்துரும். நாலு வயசாயிட்டா முழுக் குதிரை ஆயிரும். நாய் அளவுக்குக் கூர்மை இல்லாட்டினாலும், நல்ல மோப்ப சக்தி உண்டு. காது கூராக் கேக்கும். கடுமையா உழைக்கும். ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் தூங்கும் தெரியுங்களா, மூணு மணி நேரம். அதுவும் எப்படி? நேரம் கிடைக்கிறப்போலாம் அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்னு. படுத்துதான் தூங்கணுமின்னு இல்ல; நின்னுக்கிட்டும் தூங்கும். நல்ல புத்திசாலி. பொசுக்குன்ணு கத்துக்கும்.
இவனைப் பத்தாயிர ரூவாய்க்கு வாங்கினேன். ரெண்டு நாள். வண்டியைப் பூட்டி, ஆள் ஏத்தாம கோயிலைச் சுத்தி வீதியில நடத்தி வந்தேன். மூணாம் நாள் ஆள் ஏத்த ஆரம்பிச்சாச்சு. இப்போ எனக்கு உடம்பு சரியில்லாம ஒரு நாள் எழுந்திருக்கலைன்னாகூட அவன் வந்து எழுப்புவான்.”

“சரி, அதுக்கு உடம்பு சரியில்லாமப்போனா, என்ன பண்ணுவீங்க?”

“ஓய்ச்சல்தான். கட்டிப்போட்டுட்டு அலுப்பு மருந்து வாங்கியாந்து கலக்கிக் கொடுப்பேன். காய்ச்சல் வந்தா காய்ச்ச மருந்து, கழிசல் வந்தா கழிச மருந்து. நம்மளை மாரி ரொம்பத் தொல்லைங்க இதுங்களுக்கு வராது. நம்மளை மாரி கண்டதையும் திங்கிறதுல்ல பாருங்க, அப்புறம் அலுக்காம நடக்குதே! ஒரே சமாச்சாரம், காலைப் பத்திரமா பாத்துக்கணும். காலு போச்சுன்னா, குதிர போச்சு!” என்பவர் “காலைலேர்ந்து வெறும் வயித்தோடு சுத்துறது தலையெல்லாம் சுத்துது; ஒரே ஒரு டீ குடிச்சுக்குறேன் சார்” என்று வழியில் ஒரு டீக்கடைப் பக்கமாக வண்டியை ஓரம்கட்டுகிறார். வேக வேகமாக டீயைக் குடித்துவிட்டு ஓடி வந்து வண்டியில் ஏறி உட்காருகிறார். ராஜா நகர ஆரம்பிக்கிறது. “டேய் வேகமா போடா…” என்கிறார். “சொல்றேன்ன்னு தப்பா நெனைக்கக் கூடாது, மனுஷங்களோட பிரச்சினையே இப்போ வேகம்தான் சார். கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டுப் போகலாம்னுதான் ராமேஸ்வரம் வர்றாங்க. ஆனா, என்னா அவசரம்கிறீங்க! ஆட்டோல கால் மணி நேரத்துல போற எடத்துக்கு இந்த வண்டில போக அரை மணி நேரம் ஆகும். ஆனா, இந்த சுவாரஸ்யம் அதுல வருமா? என்னமோ தெரியலை சார், பறக்குறாங்க. அப்புறம் அவங்களா ஒண்ணு நெனைச்சுக்கிட்டு என்னென்னமோ பேசுறாங்க. போன வாரம் ஒரு குடும்பம் வண்டில ஏறுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த வீட்டம்மா சொன்னாங்க, ‘பாவம்க குதிர, நாம எறங்கி ஆட்டோல போகலாம்’னு. உடனே அந்தாளும் எறங்குவோம்னுட்டாரு. புள்ளைங்களுக்கு எறங்க மனசு இல்ல. நான் சொன்னேன். ‘அம்மா, இந்தக் குதிரையோட வயித்துப் பாடே நீங்க இந்த வண்டில ஏறி வர்றதுலதான் இருக்கு. யாருமே ஏறலைன்னா, இதுக்குத் தீனி எப்படிம்மா கிடைக்கும்’னு. அப்புறம் ஏறி உட்கார்ந்தாங்க.
அய்யோ பாவம்னு இரக்கப்பட்டு மனுஷன் திங்கிறதை விட்டுட்டா ஆடு, கோழியை எல்லாம் யார் சார் வளர்ப்பா? ராமேஸ்வரத்துல தனுஷ்கோடி நோக்கிப் போனீங்கன்னா, மைலுக்கு நாலு குதிர அனாதையா திரியுறதைப் பார்க்க முடியும். எல்லாம் பொழப்பு அத்துப்போனவங்க ஓட்டிவிட்ட குதிரைங்க. ஒரு வாய் தீனிக்கு ஆளாப் பறக்கும். நாட்டுல மணியடிச்சா கெடைக்குற தீனி காட்டுல கெடைக்காது. ஒவ்வொரு பொழைப்புக்கும் பின்னாடி பல வயிருங்க இருக்கு. இது பலருக்குப் புரியுறதில்ல. கோயில் வந்துடுச்சு சார்…”

ராமநாதசாமி கோயில் கோபுரம் உயர்ந்து நிற்கிறது, கோயிலடியில் இறக்கிவிட்டுவிட்டு, சுப்பிரமணி வண்டியைக் கிளப்பினார். ராஜா நடக்க ஆரம்பித்தது. வண்டி போன பாதை மறைய வெகுநேரம் ஆனது.

அக்.2015, ‘தி இந்து’

எழுதியவர் : மீள் பதிவு - சமஸ் ‘தி இந்து (31-Oct-15, 9:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 174

மேலே