இன்னும் உறங்குதியோ OoO சொசாந்தி
இன்னும் உறங்குதியோ..?
விடியல் தோன்றிய பின்னும்
விழிமூடிக் கிடந்திடலாமோ
பிடிக்குள் சிக்க வைக்கும்
பிணிகள் விட்டுப் போமோ..?
துடிப்புக ளுள்ள வரைக்கும்
சோம்பித் திரிதல் வேண்டாம்
படிகளில் ஏற்றி வைக்கும்
பண்பு மறத்தலும் வேண்டாம் .!
பொறுப்புகள் மறந்து வாழ்ந்தால்
பொங்கி நகைக்கும் உலகே
இருட்டு விழிக்குள் என்றால்
எப்போது மில்லைப் பகலே..!
முடக்கம் செய்வார் கூடி
முயற்சிகள் தடுப்பார் நாடி
அடங்கிக் கிடந்தால் துன்பம்
அல்லல் தருமே என்றும்..!
பதுங்கிப் பாய்வார் கண்டறி
பாதகர் செயலை உடன்முறி
முதுகில் மூன்றாம் கண்வை
முன்னேற இதுவழி உண்மை..!
அடுத்தவன் உழைப்பில் வாழ
அழிவாய் நோய்கள் சூழ
படுத்துக் கிடந்தால் அண்டும்
பாசத்துடன் பல துன்பம்..!
இல்லை இல்லை என்பார்
இருப்போர் கைப்பொருள் கொள்வார்
கல்லையும் கரையச் செய்வார் - மனக்
கண்கள் திறந்து பார்..பார்..!
அடக்கி யடக்கி வைக்கும்
அதிகாரம் அவலம் வளர்க்கும்
இடர்கள் தடைகள் உடைப்பாய்
எதிரிகளொழித்துக் கடப்பாய்..!
புழுதியை விழிக்குள் தூவும்
போக்கிரித் தனங்கள் எங்கும்
அழுது கிடக்கவோ விழிகள்
அடித்து நொறுக்குப் பிழைகள். !
அயறும் நேரம் நோக்கும்
அரையின் ஆடை யவிழ்க்கும்
சுயநலம் சூழ்ந்த உலகு
சுருட்டும் உறவுகள் விலகு..!
வெற்றி வேண்டும் வாழ்வில்
வியர்வை சிந்திப் பார் நீ
பற்றும் பலன்கள் உன்னை
பகிர்வா யதுதரும் நன்மை..!
விழிகள் உறங்கும் போதும்
விழித்தே யிருக்கட்டும் மனது
மழிக்கும் மனிதர் பலவாய்
மயக்கத்தை விரட்டு பலமாய்..!
சுமையாய்த் துன்பம் சேர்க்கும்
சோம்பலை உறக்கம் விதைக்கும்
இமைகள் திறக்க வெளிச்சம்
இமைத்தல் இன்னலைச் சிதைக்கும்..!
இழிவாம் உறக்கம் களைவாய்
இருட்டு விலகும் அதுவாய்
விழிப்பினைக் காட்டு எதிலும்
வெளிச்ச வெற்றிகள் குலவும்..!
#சொ.சாந்தி