‘மாமிச படைப்பு’ என்ற நாவலில் தெய்வ வழிபாடு

‘மாமிச படைப்பு’ என்ற நாவலில் தெய்வ வழிபாடு
முன்னுரை
நாட்டுப்புற மக்களால் மிக நீண்ட காலமாக வணங்கப்பட்டு வரும் கிராமக் கடவுள் ‘சிறு தெய்வங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவர்களுக்கு நாட்டார் தெய்வங்கள் என்று மறு பெயரும் உண்டு. இந்த தெய்வ வழிபாடு நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் அவர்கள் முன்னோர்கள் கற்றுத்தந்த முறைப்படியும் நடத்தப்படுகின்றது. ஊரிலுள்ள மக்களை காக்கும் வழிபாடு ஊர் தெய்வ வழிபாடு எனலாம். பெரும்பாலும் காவல் தெய்வங்களையே ஊர் தெய்வங்களாக வழிபடுகின்றனர். ‘மாமிச படைப்பு’ என்ற நாவலிலும் ஊரையும், ஊர்மக்களையும் காக்கும் முத்தாரம்மனின் வழிபாட்டு முறைகனைப் பற்றி ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றனர்.
ஆசிரியர் குறிப்பு
‘மாமிச படைப்பு’ என்ற நாவலின் ஆசிரியர் நாஞ்சில் நாடன். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியம். வேலையின் காரணமாக பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகின்றார். ஆசிரியரின் நகைச்சுவையும், நவீன விமர்சனமும், இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்திலுள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். இவரது தனித்துவம் என்றால் அது நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்து நடை.
ஊரின் அமைப்பு
நாஞ்சில் நாட்டில் மாங்கோணம் என்ற கிராமம். இங்கு ஐந்து தெருக்கள். மொத்தம் இருநூறு வீடு. இங்குள்ள மக்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். நெல் அறுவடையின் போது கூலியாகக் கிடைக்கும் நெல்லிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவை முத்தாரம்மன் கோவிலுக்கு வரியாகக் கொடுப்பர். இந்நெல்லை நாவலில் முதன்மைக் கதாப்பாத்திரமான கந்தையாவிடம் கொடுத்து பாதுகாக்கப்படுகின்றது. இதனால் இவனை கூறுவடி கந்தையா என்றே அழைப்பர். நாஞ்சில் நாட்டு மக்கள் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள். ஏனென்றால் கோவில் வேலைகள், பிறருக்கு துன்பம் வரும் போது கேட்காமலேயே உதவி செய்தல். இதனால் தான் இம்மக்கள் தங்களின் சுய முயற்சியால் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கோயிலை விரிவுபடுத்தி அம்மன் பெயரில் நிலங்களை வாங்கி அதில் விளைகின்ற வருமானத்தை வைத்துக் கொடை நடத்துகின்றனர்.
கோயில் அமைப்பு
“மாங்கோணத்தில் நடுத்தெருவில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. வடக்குப் பார்வையில் அம்மனும், மேற்கு கோடியில் சாஸ்தா கோயிலும் உள்ளது. முத்தாரம்மனைப் புடைசூழ சந்தனமாரியும், சூலைப்பிடாரி ஆகிய தோழிகளோடும், பூதத்தான் என்ற சேனாதிபதியோடும், வைரவன் என்ற காவலோடும் மாங்கோணத்தைப் பஞ்சம், வறுமையிலிருந்தும், வாந்தி, பேதி, வைசூரி நோய்களிலிருந்தும் காத்து பாலித்து வந்தாள்” (ப.எ-39) என்கின்றார் ஆசிரியர். இதிலிருந்து நாஞ்சில் நாட்டு மக்கள் தெய்வங்களை வழிபட்டால் நோய் வராமல் தங்களைக் காத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடையவர்களாக விளங்குகின்றார்கள்.
பூஜை மாதங்கள்
ஒவ்வொரு தெய்வங்களுக்கென்று ஒவ்வொரு நாட்கள் குறிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றது. இதே போல் தான் நாஞ்சில் நாட்டிலும் தெய்வ வழிபாடு நடத்தப்படுகின்றது. ஆசிரியர் கதை சூழலுக்கு தகுந்தாற்போல் மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் சிறப்புப் பூஜையை குறிப்பிடுகின்றார்.
“ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மண்டைக்காட்டு அம்மனுக்கு கொடை முடிந்த மறு கிழமைகளில் அம்மனுக்கு அனனக்கொடை கொடுக்கப்படுகின்றது. கார்த்திகை மாதத்துச் செவ்வாய் கிழமைகள், தை அமாவாசை, மாசிமகம்;, பங்குனி உத்திரம், சித்திரை வருட பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி அறுதி, இவ்வாறு மாதத்திற்கொன்றாய் வரும் பண்டிகை நாட்களில் தெய்வங்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றன. கல்யாணம், மறுவீடு, சூலழைப்பு, ஆண்டு நிறைவு ஆகியவைகளுக்கு அம்மனுக்கு பாயாசம் படைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. (பா.எ.38,39). இந்த நன்நாளன்று விளக்குகள், சரவிளக்குகள், அம்மனுக்கு சோடிப்பு ஆகியவை நடைபெறும் என்கின்றார் ஆசிரியர்.
மரபு
மரபு என்பது பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற ஒரு செயலைத் தொடர்ந்து நடத்தி வருவது மரபு எனலாம். இம்மரபு பொதுவாக கோயில் நிர்வாகம், ஊர்த் தலைவர், தொழில்கள் ஆகியவைகளுள் அடங்கும். நாட்டுப்புறக் கூறுகளான பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் குறிப்பிடலாம். இதே போல் நாஞ்சில் நாட்டிலும் கோயில் நிர்வாகம் மரபு வழியாகத் தொடர்ந்து வருகின்றன என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். கோயிலுக்கென்று ஒரு பூஜாரி நியமிப்பது வழக்கம். இது நம் முன்னோர்கள் காலம் தொட்டே பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்றன. ஆசிரியர் தனது நாவலில் குணம், செயல், ஆகியவற்றிற்கு தகுந்தார்ப் போல் ஒரு பெயரை அமைத்து முத்தாரம்மன் கோயில் பூசாரியாக சடையப்பப் பிள்ளை என்ற கதாபாத்திரத்தைப் படைத்துள்ளார்.
“ஊர்வகைச் சிறப்பானாலும், தனியார் சிறப்பானாலும் கோயில் பிரசாதம் விளம்பிய பின்னர் செம்புத் தட்டில் வெற்றிலை, பாக்கு, மூன்று பழங்கள், ஒரு தேங்காய் முறி, மஞ்சள் காப்பு, திருநீறு, துண்டு பூச்சரம் ஆகியவற்றை வைத்து முதலடி வீட்டிற்கு கொடுப்பது நாஞ்சில் நாட்டில் மரபாக இருக்கின்றது.
சிறு தெய்வங்கள்
ஆசிரியர் நாஞ்சில் நாட்டில் முத்தாரம்மன் கோயில் சிறப்புக்களைக் கூறினாலும் அங்குள்ள சிறு தெய்வங்களைப் பற்றியும் அவற்றின் அமைப்பைப் பற்றியும் கூறியுள்ளார். இது ஆசிரியரின் தனித் திறனை எடுத்துக்காட்டுவனவாக அமைகின்றது.
மாங்கோணத்தில் கிழக்கு எல்லையில் சுடலைமாடன் கோயில். இம்மாடன் முன்னால் பேச்சியம்மன் அதனைச் சுற்றி புலைமாடன், கழுமாடன், முண்டன், முத்துப்பட்டன், பூதத்தான், வல்லரக்கு ஆகிய தெய்வங்கள் இருந்தன. இத்தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பின் போது மேனி பூசி, சிரசு வைத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கு சிறப்புச் செய்ய வேண்டுமென்றால் மலையப்ப பிள்ளை சாமியாடி கூறுவார். இவர் வைரவன் சாமி பீடம் ஆடுபவர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் விரதம் இருந்து தெய்வத்தை வழிபடுகின்றார் என்று ஆசிரியர் கூறுகின்றார்.
கோயில் உருவான கதை
கோயில் என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இச் சொத்துக்கள் யாருடைய பெயரிலோ அல்லது இனாமாகவோ கொடுத்ததில்லை. நாஞ்சில் நாட்டு மக்கள் தங்களின் சொந்த உழைப்பின் முயற்சியால் அம்மன் கோயிலை உருவாக்கியுள்ளார்கள். அறுத்தடிப்பவர்கள்;, சூடடிக்காரர்கள், உழவாளிகள் கொடுத்த நெல், நல்லப்ப வாழைக் குலை, முதல் குலை, தேங்காய் முதல் பறி, உளுந்து என்று தங்களால் முடிந்த அளவு பணம் இல்லையென்றாலும் பொருட்களைக் கொடுத்து உதவி செய்தார்கள். உழைப்பில் முதல் கூலியை கோயிலுக்கு செலுத்தும் வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்திருக்கின்றன என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இவர்களில் ஒருவர் பணத்தை சேமித்து வைப்பார்கள். அம்மன் கோயிலுக்கென்றே பூதோறும் (அறுவடை) மக்களின் வசதிக்கேற்ப குறுணி, பதக்கு, முக்குறுணி, என்று நெல்லை அளந்து கொடுத்தார்கள். சேர்ந்த நெல்லை பூச்சீட்டு போட்டு அம்மனின் பெயரில் நிலம், ஆறு மரைக்கால், விதைப்பாடுகளாக நல்ல தடிகள், தோப்புகள், காலி புரையிடங்கள், வாங்கினார்கள். மக்கள் தங்களால் முடிந்த வேலைகள் செய்தும் பொருட்கள் வழங்கியும் அம்மன் கோயிலை விரிவடையச் செய்தார்கள். நாஞ்சில் நாட்டு மக்களின் பெருந்தன்மையைப் பற்றியும், வேளாண் தொழிலின் சிறப்புகள் பற்றியும் ஆசிரியர் கதையினூடே பயணப்படுத்தியுள்ளார்.
வழிபாட்டு முறைகள்
ஊர் திருவிழா நடத்த வேண்டுமென்றால் முதலாவதாக ஊர் மக்கள் கூடி ஊர் தலைவரின் முன்னிலையில் தீர்மானம் செய்வது வழக்கம். அதே போல் தான் இந்நாவலில் ஊர்த் தலைவரான கங்காதரன் பிள்ளை என்ற கதாபாத்திரத்தை படைத்து அவர் தலைமையில் ஊர்க்கூட்டம் கூடி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதைப் பற்றி தீர்மானம் செய்யப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். செவ்வாய் கிழமைகளில் வரி (நெல்) எழுதுகின்றார்கள். கணியா குளத்து ஜோசியர் ஒருவரை வரவழைத்து கால்நாட்ட, கொடை கழிக்க, இழுப்பாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அம்மனை நீராட்ட ஆகியவற்றிற்கு நல்ல நேரம் கணிக்கப்படுகின்றன. அதன் பின்பு கோயிலை சுத்தம் செய்து, வெள்ளையடித்து, பூஜை பொருட்களை எல்லாம் புளிபோட்டு தேய்த்து பளபளக்கச் செய்கின்றார்கள். கோயில் பல வர்ணங்கள் தீட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது.
அம்மனுக்கு பூஜையின் போது சைவ படைப்பு, அசைவ படைப்பு என்று இரு முறைகளில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதற்கென்று தனித்தனியாக உணவு சமைப்பதற்கு ஆட்களை வரவழைத்து உணவு சமைக்கப்படுகின்றன. சைவப் படைப்புக்கு குப்பு ஐயர் என்ற கதாபாத்திரமும், அசைவப் படைப்புக்கு பொன்னு என்ற கதாபாத்திரத்தையும் ஆசிரியர் அறிமுகப்படுத்துகின்றார்.
தெருவெங்கும் விளக்குகள் போடப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் கச்சேரிகள் நடைபெறும். அம்மனுக்கு பகல் நேரங்களில் சைவ பூஜையும், இரவு பன்னிரண்டு மணிக்கு அசைவ பூஜையும் நடைபெறும். இந்நேரத்தில் விக்கிரமசிங்கம் பிள்ளைக்கும், கந்தையாவுக்கும், முன் விரோதம் காரணமாக அம்மன் அசைவக் கொடை நேரத்தில் கந்தையா வெட்டிக் கொல்லப்படுகின்றான். இதுவே அம்மனுக்கு மாமிசப் படைப்பாக ஆசிரியர் கூறுகின்றார்.
இந்நாவலில் ஆசிரியர் வேளாண்மைத் தொழிலினூடே மக்களின் வாழ்வியலையும் மிக அழகாக பின்னியுள்ளார்.

எழுதியவர் : பெ. பால்முருகன் (1-Nov-15, 9:54 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 382

மேலே