‘மாமிசப் படைப்பு’ – என்ற நாவலில் வரும் பாத்திரங்களின் தோற்ற வருணனைகள்
‘மாமிசப் படைப்பு’ – என்ற நாவலில் வரும் பாத்திரங்களின் தோற்ற வருணனைகள்
முன்னுரை
கவிதை, உரைநடை, நாடகம் ஆகிய வடிவங்களில் இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. தமிழில் கவிதை வடிவம் பழமை வாய்ந்தது. உரைநடை வடிவில் அமைந்த நாவல், சிறுகதை ஆகிய வடிவங்கள் மேலை நாட்டவரின் தொடர்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்தது. இன்று இவ்விலக்கிய வகைகள் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. இக்கட்டுரை நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு என்ற நாவலில் வரும் பாத்திரங்களின் தோற்ற வருணனையை மையமாகக் கொண்டு அமைகின்றது.
ஒரு நாவலுக்கு முக்கிய கூறுகளில் ஒன்று பாத்திரங்கள். பாத்திரங்களின் மூலம் நாவலுக்கு உயிரோட்டம் அளிக்கப்படுகின்றன. பல வகையான பாத்திரங்களின் பின்னல் அமைப்பே ஒரு நாவலாக உறுபெருகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களின் சூழல்களை ஒட்டு மொத்தமாக இணைத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது நாவல். மாமிசப்படைப்பு என்ற நாவலில் கதாப்பாத்திரங்களின் தோற்ற வருணனை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
கூறுவடி கந்தையா
மாமிசப்படைப்பு என்ற நாவலில் முதன்மை கதாப்பாத்திரமாக ஆசிரியர் கந்தையாவைப் படைத்துள்ளார். இவன் நல்ல உழைப்பாளி. உழைப்பில் முறுகிய உடல்வலிமை உடையவன். விவசாயக் கூலி வேலைதான் என்றாலும் வேலையில் சாமர்த்தியமும், நாணமும் உடையவன். இவன் பேசும் பேச்சு பாக்கு கடிப்பது போல இருக்கும். இவன் விவசாய வேலைகள் எதுவானாலும் தன் சொந்த வேலை போல் சுறுசுறுப்புடனும், நம்பிக்கையுடனும் செய்து முடிப்பான். பேசிய கூலியில் இம்மி அளவு குறைந்து வாங்கும் பழக்கம் இவனுக்கு இல்லை. இதைத்தவிர ஜாதகம் பார்ப்பது இவனுக்குப் பொழுதுபோக்கு. இவ்வாறு ஜாதகம் பார்க்க வருபவர்கள் கொடுக்கும் ஒரு ரூபாயோ, எட்டணாவோ அவனுக்கு பக்க வருமானம். இவன் அதிக ரூபாயும் கேட்பதில்லை. இதனால் இவன் மனைவி பொன்னம்மாளுக்கு சில சமயம் கோபம் வரும். சில முறை மழுப்பவதும், பல முறை எரிந்து விழுவதும் கந்தையாவின் வளமை. ஏதிரிகளைக் கூட வஞ்சிக்கும் எண்ணம் இவனிடம் இல்லை. அவர்களை புரியவைத்து நல்வழியில் நடத்த வேண்டும் என்ற கொள்கை உடையவன். அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயலாற்றக் கூடிய தன்மை கொண்டவன். இவனுடைய சக நண்பர்களிடம் போசும் போது கூட வீட்டுவளப்பம், நாட்டுவளப்பத்தைப் பற்றியே பேசுவான். வீண் பேச்சுக்கள் பேசுவதில்லை. இரவு பகலாக ஓயாது உடைப்பான். கந்தையாவின் தோற்ற வருணனையைப் பின்வருமாறு ஆசிரியர் விளக்கியுள்ளார்.
“நெட்டான் நொட்டான் என்று ஊடு மண்வெட்டிக் கைபோல் ஒரு மூச்சு வளர்த்தி, பலகைபோல் விரிந்த உறுதியான மார்பு, பூவரச மர வைரத்தில் செய்த கோடிக் கலப்பை போல் அழுத்தமான உடம்பு நாற்பத்தைந்து வயது தோன்றாத கயிற்று உடல்வாகு. சாமர்த்தியமானதோர் கூறுவடியாக கந்தையா இருந்தான்.” (ப.எண்-11) என்கின்றார்.
கங்காதரம் பிள்ளை
இவர் இந்நாவலில்; துணைக் கதாப்பாத்திரங்களில் முதன்மையானவர். மாங்கோணம் என்னும் சிற்றூரில் பண்ணையாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வூரில் கோயில்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தலைமை தாங்குபவர். கோயில் நிகழ்ச்சிகளிலும் அவர் வந்தால் தான் தீபாராதனை தொடங்கும். இவருக்கு நிறைய நிலப்புலன்கள் உண்டு. அவ்வூரிலேயே நிறைய சொத்துக்கள் உடைய மனிதர். இவரின் குண அடிப்படையில் தோற்றவருணனையை ஆசிரியர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
“ஐந்தேகாலடி உயரம், நீர்யானை போல் எண்ணெய் மினுக்கம் கொண்டு எழும்பே தெரியாத உடம்பு, பேன் வைத்து ‘செடக்’ கென்று குத்தலாம் போல் ‘திம்’ மென்று புடைத்த குடவண்டி வயிறு சூடு காரணமாய் சவரம் செய்யப்பட்ட கட்கங்களிலிருந்து அழுக்கான வியர்வை வரியாய் வடிந்து விலாவில் குங்குமம் படர்ந்து பரவிக் கொண்டிருந்தது.” (ப.எண்-11-12) என்கின்றார்.
குற்றாலம் பிள்ளை
இவர் நாவலில் துணைக்கதாப்பாத்திரம். விவசாயத் தொழில் செய்து வருபவர். கோலும், குண்டுண்ணியும் சொல்வதில் அபார நோட்டம் உள்ளவர். அவரது குணத்தைக் கொண்டு குண்டாமுட்டி குற்றாலம் பிள்ளை என்று இரட்டைப் பெயர் பெற்றவர். பிறரைப் பற்றி கோள் சொல்வதும் நடக்காத ஒரு செயலை நடந்தது என்று பிறரை நம்பவைக்கும் சாமர்த்தியமும் உடையவர். அங்கும் இங்கும் பண்டாரமாகத் திரிந்து கோள் சொல்வதில் இவருக்கு ஒரு தனி சுகம். ஊரில் யார் வீட்டிலும் காற்றைப் போல் சுதந்திரமாய் நுழையும் தன்மைப் பெற்றவர். இவரது குண அடிப்படையில் ஆசிரியர் “கதிர்வீசும் ஆளுமை எதிராளியை நம்பவைக்கும் தன்னை கொண்டவர்.” (ப.எண்-51) என்கின்றார்.
சடையப்ப பிள்ளை
இவர் மாங்கோணத்தில் அம்மன் கோவில் பூசாரி. பகல் நேரங்களில் ஆரம்பப் பள்ளியில் பியூன் வேலை செய்து வருகின்றார். இவர் பள்ளிக் குழந்தைகளிடம் அன்பாகப் பேசுவதும், நகைச்சுவையாக உரையாடுவதும், குழந்;தைகளுக்குப் பிடித்த படங்கள், பொம்மைகள் போன்றவை செய்து கொடுப்பதும் இவரின் பொழுதுபோக்காகும். இவர் பூஜை நேரங்களில் வேறு மனிதர் வேண்டாத மருமகளை வைத்து நடத்தும் மாமியார் போல், வெளியே அடித்து துரத்தப்பட்ட அடைக்கோழி போல் குரலில் எப்பொழுதும் புறுபுறுப்பு. இவர் மற்ற நேரங்களைத் தவிர பூஜை நேரங்களில் இவரது குணம் முழுமையாக மாறிவிடும். இவருடைய குணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் தோற்ற வருணனையை ஆசிரியர் பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றாh.;
“பிரம்பு போல் முறுகிய ஒல்லி உருவம். நெற்றியில் இருப்பது போலவே வயிற்றிலும் மடிப்பு வரிகள். எப்போது பார்த்தாலும் ஏழு நாள் பட்டினி போல் ஒட்டிய வயிறு வெற்றிலைக் காவி மின்னும் பற்கள். சிறுவர்களைக் கண்டால் முகத்தில் குறுஞ்சிரிப்பு இவரைச் சுற்றி மூன்று வயது முதல் பன்னிரெண்டு வயது வரையான சிறுவர், சிறுமியர் கூட்டம் எப்போதும் இருக்கும்.” (ப.எண்-40) என்றும்,
“சடையப்பப்பிள்ளை கோயிலுக்குள் புகுந்தால் வேறு மனிதர். வக்கிரமான ஒரு முகம் வந்து பொருந்திக் கொள்ளும். பிறவிச் சுமையை இறக்க முடியாமல் தினறும் வேதனையும் கோபமும் எரிச்சலும் கொண்ட முகம்.” (ப.எண்-41) என்றும் சுட்டுகின்றார்.
மலையப்ப பிள்ளை
இவர் தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வைரவ சாமிக்கு தவறாமல் விரதம் இருப்பவர். நாட்டுப்புற கூறுகளில் ஒன்று நம்பிக்கை. இச்சொல்லிற்கேற்ப தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். இவரது குணத்தின் அடிப்படையில் ஆசிரியர் இவரின் தோற்ற வருணனையை பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றார்.
“ஐம்பதுக்கு மேல் வயதாகிவிட்டது. விளைந்தது போல் உடம்பு கணுக்கணுவாய் இருந்தது. தொந்தி சரியும் அளவுக்கு நிலபுலன்கள் உள்ள பண்ணையார் இல்லை. ஆதலால் தேங்காய் நெற்றிப்போல், வரிப்பமுத்து இருந்தார். குணத்துக்குத் தகுந்தாற்போல் ஓர் வெடுக்கு உண்டு.” (ப.எண்-105) என்கின்றார்.
சாந்தப்பன்
இவன் கங்காதரம் பிள்ளையின் வேலைக்காரன். எந்நேரமும் ஓயாது உழைப்பவன். எல்லோரிடமும் அன்பாய் பழகும் தன்மை கொண்டவன். ஒருவர் செய்த நன்றியை மறவாத மாமனிதன். சாந்தப்பனிடம் பொய், கள்ளம், குசும்பு, திருட்டு, வங்சகம் ஆகிய குணங்கள் இல்லாத நல்ல மனிதன். விக்கிரசிங்கம் பிள்ளையிடம் தோழனாய், மந்திரியாய், அடியாளாய், நல்லசிரியனாய், அன்பனாய் இருப்பவன். இவனுக்கு ஊரில் யாரிடமும் பகை என்பது கிடையாது. கபடில்லா முகம், யார் சீன்டினாலும் சிரித்துவிட்டு போகும் முகம், வெடுக்கு, சுடுக்கு இல்லாத மறுமொழிகள.; இவனது குணம், செயல் அடிப்படையில் ஆசிரியர் தோற்றத்தை பின்வருமாறு வருணித்துள்ளார்.
“பதினான்கு பதினாறு வயதிருக்கும் அரையில் அழுக்கடைந்த கிழிந்த பெரியதோர் காக்கி நிக்கர் தோளில் சிவப்பான, மீன் வலை போல் அடர்த்தி அற்ற குற்றாலத்துண்டு, புழுதி படிந்து கசங்கியிருந்த உடல்.” (ப.எண்-89) என்கின்றார்.
இசக்கியம்மாள்
சாந்தப்பனின் மனைவி இவள். இரவிப்புதூரில் ஓர் வெள்ளாளனுக்கு வைப்பாட்டியாய் இருந்த ஈழவத்திக்கு மகளாய் பிறந்தாள். இசக்கியம்மாள,; அவள் அம்மாவைப் போலவே தவறானவள் என்று ஆசிரியர் சித்தரித்துள்ளார். கங்காதரம் பிள்ளையின் வசதிக்காக இசக்கியம்மாளை சாந்தப்பனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். இடையிடையே கங்காதரம் பிள்ளையும் இசக்கியம்மாளும், தவறாக நடந்து கொள்கின்றனர். இவளின் குணத்தின் அடிப்டையிலே ஆசிரியர் இவளது தோற்ற வருணனையை சி;த்தரித்துள்ளார்.
“புது நிறத்தில் ஓர் முகப்பொலிவு கட்டையான உருவம் என்றாலும் திராணியாய்க் கைகால்கள் கண்களால் எப்போதுமாய்ச் சுடரும் ஒரு மருட்சி. முன்னால் பூச்சாண்டி நிற்பது போல் பயந்து ஒதுக்கிய நடை அதிகமானால் அவளுக்குப் பதினேழு வயதிருக்கும்.” (ப.எண்-95) என்கின்றார்.
செல்லம் பிள்ளை
இவர், ஊர்க் காரியங்ளைப் பார்ப்பர். ஊரில் எந்த ஒரு பஞ்சாயத்தோ, சண்டைச் சச்சரவுகள் போன்ற பிரச்சனைகளை நியாயமாகப் போசி தீர்த்து வைப்பவர். இவரது இரத்தத்தில் கொஞ்சம் துடிதுடிப்பும், வாயடிப்பதிலும் மன்னன். எப்பேற்பட்டவர்களையும் நான்கு பேர் முன்னிலையில் மடக்கி விடுவார். இவர் நல்ல பேச்சுத்திறமைக் கொண்டவர். இவரது நடவடிக்கைகளில் நியாய உணர்வு இருக்கும். இவர் வாதபிரதிவாதங்களையும், தர்ம அதர்மங்களையும் பேசி பேசி லாயர் செல்லம் பிள்ளை என்ற பட்டம் பெற்றவர் இவரது குணத்தின் அடிப்படையிலேயே தோற்ற வருணனையை ஆசிரியர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
“கரியான வேட்டி, கரியான தோள் முண்டு, வேட்டியின் இடுப்பு மடிப்பில் மாட்டுக் கொம்பில் செய்த பொடி டப்பி, நெல் அவிக்கும் செம்புப் பனையப் பாதியியல் அறுத்துப் பொருத்தியது போல் குமிழ் வயிறு ஒரு பக்கா நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் பூசி வடியவிட்டது போல் வியர்வைக் கசகசப்பு ஒரே உயரத்தில் வளர்ந்திருத்தும் நரைத்த எட்டு நாள் தாடி, நரைத்த எட்டு நாள் தலைமுடி, முகத்தில் மட்டும் பொங்கித் திளைக்கும் நிரந்தரமான சிரிப்பு.” (ப.எண்-137) என்கின்றார்.
பொன்னு
இவன் சூலைபிடாரி, சந்தனமாரி, வைரவன் ஆகிய தெய்வ வழிபாட்டு மாமிசப் படப்புக்கு சமையல் செய்பவன். இவன் அசைவ உள்ளுர் சமையல்காரன். போன்னுவிற்கு இழகிய மனசு. யார் என்ன சொன்னாலும் மறுத்து சொல்ல மாட்டான். இவனது சமையல் கலவைகள் நூதனமாய் இருக்கும். உள்ளுர் கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் பொன்னுவின் சமையல்தான். இவனுக்கு சமையல் வேலை என்பது பொழுதுபோக்கு. பெரிய அடியந்திரங்கள் அய்யர் பரிகாரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக சமையல் செய்து கொடுப்பான். இவன் எங்கு சமையலுக்குச் சென்றாலும் சம்பளத்தை எதிர்பார்ப்பது இல்லை. சமையல் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதே இவனின் நோக்கம். இவனது குணம், தொழில், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் தோற்ற வருணனையை ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“நெட்டான் நொட்டான் என்று உயரம்-முறுகிய காற்றாடி மரக் கம்புபோல் உறுதியான உடற்கட்டு வாயை மூட முடியாதபடி பற்கள், நிரந்தரமான சிரிப்பு.” (ப.எண்-138) என்கின்றார்.
முடிவுரை
இந்நாவல் வேளாண் உற்பத்தியைப் பின்னணியாக வைத்துப் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாத்திரங்களின் வருணனைகள் அனைத்தும் அவர்களின் தொழில், குணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

