அப்புறம்....
இருள் சூழ்ந்த நேரம்
இணைய முடியா தருணம்
இயலாமையில் இருவரும்...
கை பேசி ஒன்றே கண்கண்ட தெய்வம்!
காற்றலைகள் மட்டுமே தூது போகும்
செல்ல குழந்தைகள்!
சிரித்துப் பேசி சித்திரமாய்
எண்ணற்ற கதைகள் சொல்வாய்!
பேசி முடித்து இணைப்பைத் துண்டிக்க
முயலும் போது அப்புறம் என்று
ஆரம்பித்து அடுத்த கதை ஆரம்பிப்பாய்...
பிரிவின் துயரத்தை இருவரும் ஏற்பதில்லை
அதுதான் நிதர்சனம் என்பதை
இருவரும் மறுப்பதில்லை
நொடித் துளிகள் நொடிந்து
நிமிடத் துளிகள் நிறைந்து
மணித் துளிகளாக மாறும் - நம்
நிலையிலிருந்து நாமும் மாறமாட்டோம்....
வீதியுலா வரும் நிலவும் நின்று பார்க்கும்...
கூர்க்காவும் விசிலடித்து செல்வான்
நடுநிசியில் ஊரே உறக்கத்தின் பிடியில்
நாமோ காதலின் பிடியில்...
விடியல் பொழுதின்
கடமைகள் கண்ணை உறுத்தும்
ஒரு வழியாய் துயிலலாம்
என்று எத்தனித்து
பேச்சை முடிக்கும் நேரம்
ஏதோ ஒன்றை நான் கேட்டுத் தொலைய
சட்டென்று ஒற்றை வார்த்தையில்
இதயம் சுடுவாய்!!
கத்தியின்றி குத்திய வார்த்தையில்
செத்துப் பிழைப்பேன்...
கனத்த மனதுடன் கலங்கிய விழிகளுடன் - என்
துப்பட்டாவினால் முகம் மறைத்து
விம்முவேன்....
உன் மௌனம் நான் காயப்பட்டிருப்பதை
நீ உணர்ந்ததாக எனக்கு உணர்த்தும்...
காயம் பட்டவள் கண்ணுறங்கி விடுவேன்!
விடிந்ததும் கைபேசி பார்க்கையில்
உன் வருத்தம், மன்னிப்பு குறுஞ்செய்திகள்
நிறைந்து கிடக்கும்!
உதறலோடு உனை அழைப்பேன்...
ஒற்றை சத்தத்திலேயே
அடியே! கோபமா? - எனக்கு
பேசத் தெரியலை...
வாஞ்சையாய் வருத்தம் தெரிவிப்பாய்!
எனக்கோ சுட்ட வார்த்தைகள்
பட்டுப் போய் பறந்து விடும்!
ஓடிவந்து உனை கட்டிக் கொள்ள உள்ளம் துடிக்கும்...
இதமாய் 'இல்லைம்மா' என்பேன் காதலாய்...!
அப்புறம்.... என்று நீ...
நொடிகள், நிமிடமாகி, மணித்துளிகளாகி.....