விதவைகள்

விதவைகள்...

புதுக் கவிஞர்களைப்
புற முதுகிடச்செய்யும்
சங்கப் புலவர்களின்
மரபுச் செய்யுள் நாங்கள்...

சிறு தூசு பட்டாலும்
சீர் மாறிடத்தான்- இந்த
அழுக்குச் சமுதாயம்
வெண்மை நிறத்தினையே
வெகுமதியாய் வழங்கியது

வாழ்கையோடு எங்கள் போர்
முடியும் முன்னே- எங்களையே
யாருக்குக் காட்டுகிறீர்கள்
சமாதானக் கொடியாக?

எம் மேனியில்..
காற்றில் பட்ட கறைகளைக் கழுவ
கண்ணீரை அல்லவா இந்தச்
சேற்றுப் பன்றிகள்
சினந்து கேட்கின்றன!!

சமுதாயப் புழுதி
காமச் சூறாவளியில்
வேகமாய் வீசுகையில்
இருட்டைத் தேடுகிறோம்
எம் வெண்ணிறம் காக்க...

வெந்நீரை வேரில் கொண்டு
கண்ணீர்க் கனி உதிர்க்கும்
பட்ட மரம் நாங்கள்- சாவு
தொட்ட உடல் நாங்கள்!

ஆம்
விதவைகள்
சமுதாய அழுக்கின்
மிதவைகள்...

எழுதியவர் : முத்துமணி (2-Nov-15, 4:46 pm)
பார்வை : 168

மேலே