கங்கையைத் தேடும் பாவங்கள்

அங்கேயும் ஒரு நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
அன்பே வேதமென்று
பாடிக்கொண்டிருக்கிறது
*
அது ஓர்
அவதாரப் புருஷனின்
அன்பு ராஜ்ஜியம்

அங்கே-
கங்கைகள் பாயுமென்று
பாவங்கள் வந்தன
குளிர்மர நிழலுக்காக
பாரங்கள் வந்தன

அது
அழுது வந்தவர்க்கு
கண்ணீர்ச் சரணாலயம்
அலைகழிக்கப்பட்டோர்க்கு
அறிவூட்டும் குருகுலம்
பசித்த வயிறுகளுக்கு
பழமரக் காடு ..!
*
அதோ
ஆறுகால பூஜைக்கு
ஏழை மனங்களே பூக்களாக
குழந்தைகள் ஏந்திவர

ரிஷி பத்தினிகள்
தர்ம தேவதைகளாக
நவீனப் பொய்கையில்
நன்னீராடிவர

ஒரு நிலாக்காலத்து
தேவ வேளையில் - அங்கே
பௌர்ணமி அலைகளாய்
பக்தி பொங்கும்

அமாவாசை இரவுகளிலோ
ராஜ ரிஷியின்
அவதாரப் பிறப்பு
அதிசயங்கள் நிகழ்த்தும்

அங்கேயும் ஒரு நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
அன்பே வேதமென்று
பாடிக்கொண்டிருக்கிறது

*
ஒரு நாள்
ஒரு ஜீவ நாடகம்
கண்ணீரில் முடிவுறுவது போல
அந்தக் குருகுலம்
தவம் கலைத்த போது
கறுத்த சாபங்களே
வரங்களாய் வந்தன


அனாதைப் பெண்கள்
குருகுலம் காக்க
ரிழிப்பத்தினிகள்
கருவூலம் காத்தது
காட்சிக்கு வந்தது

கவசமே குத்தியது போல
கருணையே கற்புகள் பறித்த
கதைகளோ கண்ணீர் விட்டன

இறைவனின் குழந்தைகள்
மனத்தவங்கள் புரிய
மரவுரிகள் எழுதி வைத்த
மன்மதக் கதைகளோ
பிரசுரத்துக்கு வந்தன.

அந்த
மந்திரக் காட்டிலிருந்து
மிரண்டு வந்த மான்கள்
ராஜ வாசலின் தீர்ப்பு மணியடித்து
கண்ணீர் வழக்கு தொடுத்தன


அந்தக் கண்ணீரே
கடவுள் தூதுவனுக்கு
கைவிலங்கானது

வழக்கு தொடர்கிறது
அனாதைகளாய் அழைக்கப்பட்ட
தேவகுழந்தைகளின்
வாழ்க்கையோ அழுகிறது ..

அங்கேயும் ஒரு நதி
ஓடிக்கொண்டிருக்கிறது (1994)


(சாட்சியங்கள் : திருச்சி ஆசிரமம் , மற்றும் பிற, ..)


(தரையில் இறங்கும் தேவதைகள் நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபாபதி (2-Nov-15, 6:21 pm)
பார்வை : 119

மேலே