பார்வதீப ரமேஸ்வரௌ
சில சமயங்களில், பதிவுகளைவிட, அவற்றில் எழுதப்படும் பின்னூட்டங்கள் மிகத் தரமானவையாக அமைந்துவிடும். மற்ற ஊடகங்களைவிட இணைய எழுத்தை அதிகச் சுவாரஸ்யமாக்குவதும் இவைதான்.
எனக்கு அப்படி ஓர் அனுபவம் இந்த வாரம்.
தமிழ் திரைப் பாடல்களில் வரும் சில Easter Egg Momentsஐக் குறிப்பிட்டு ‘பிரித்தலும் சேர்த்தலும்’ பதிவை நான் எழுதியபோதே, இதேபோன்ற இன்னும் பல ஆச்சர்யங்கள் பின்னூட்டத்தில் குவியும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கு ஏற்ப ஏகப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் (உடையாமல்) வந்து விழுந்தன.
அவற்றில் ஒன்று, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நானோ நீங்களோ ஜுவல்லரி விளம்பரத்தில் வருவதுபோல் ‘தலைகீழா நின்னாலும்’, ‘தவமே செஞ்சாலும்’, ‘குட்டிக்கரணமே போட்டாலும்’, ‘ஒத்தக்கால்ல நின்னாலும்’…. இந்த மேட்டரைக் கண்டுபிடித்திருக்கமுடியாது!
நான் பெற்ற பிரமிப்பு பெறுக இவ்வையகம் என்று அந்தப் பின்னூட்டத்தை ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன். இதனை எழுதியவர் ’பாலா அறம்வளர்த்தான்’, வாசிக்க எளிதாகப் பத்தி பிரித்ததும் சில சிறு திருத்தங்கள் செய்ததும்மட்டுமே என் பங்களிப்பு:
சலங்கை ஒலி படத்தில் வரும் ‘நாத வினோதங்கள்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
அந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது காளிதாசரின் ரகுவம்சத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் வரும். அதன் கடைசி வரி “வந்தே பார்வதி பரமேஸ்வரௌ.”
SPB அந்த வரியை இரண்டுமுறை பாடுவான், (SPB, KJY எல்லாம் எனக்கு அவன் இவன்தான் கண்டுக்காதீங்க, சொல்லடி சிவசக்தி மாதிரி :-)). முதன்முறை ‘வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’ என்று சரியாக வரும், இரண்டாவது முறையாக அதனைப் பாடும்போது “வந்தே பாரவதீப ரமேஸ்வரௌ” என்று பாடி இருப்பான்.
அதாவது, ‘பார்வதீப’ , குட்டி gap விட்டு ‘ரமேஸ்வரௌ’ என்று வரும். இப்படிப் பிரித்து உச்சரிப்பது தவறு. நன்றாகவே சமஸ்கிருதம் தெரிந்த இளையராஜா இதை எப்படி அனுமதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது.
சமீபத்தில் படித்தேன், அது வேண்டுமென்றே இளையராஜா செய்ததாம்.
முதலில் ‘பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம்’, இரண்டாவது ‘பார்வதீப’ (பார்வதியோட பதி : சிவன்) மற்றும் ’ரமேஸ்வரௌ’ (’ரமா’ என்பது மகாலக்ஷ்மியோட இன்னொரு பெயர் , அதனால் ரமாவின் ஈஸ்வரன் (கணவன்) விஷ்ணு). ஆகவே இளையராஜா SPB ஐ வேண்டுமென்றே ‘சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்’ என்கிற அர்த்தம் வருமாறு பாடச் செய்திருக்கிறார்.
இந்தக் காட்சியில் நடித்த கமலும் இதை அற்புதமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயம் பிடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் : முதலில் பார்வதி மற்றும் சிவன் (0:22 முதல் 0:30). இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரௌ’ என்பதற்கு மகாலக்ஷ்மியோடு பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவுடைய அபிநயம் (0:34 முதல் 0:40).
What a classic team work!
அற்புதம். பொதுவாகக் கவிஞர்கள்தான் வார்த்தைகளில் விளையாடுவார்கள். இங்கே இசையமைப்பாளரும் பாடகரும் நடிகரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான குறும்பு செய்து நம்மை அசரடிக்கிறார்கள். இதைக் கண்டுபிடித்துச் சொன்ன பாலா அறம்வளர்த்தான் அவர்களுக்கு மிக்க நன்றி.
UPDATES:
1. ’பார்வதிபரமேஸ்வரம்’ என்பது தவறு, ‘பார்வதிபரமேஸ்வரௌ’ என்பதுதான் சரி என்று ‘ஒருபக்கம்’ ஸ்ரீதர் சுட்டிக்காட்டினார், மன்னிக்கவும், திருத்திவிட்டேன்
2. ஸ்ரீதர், ஈரோடு நாகராஜ் இருவரும் இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சொல்கிறார்கள். இங்கே இளையராஜாவோ SPBயோ, கமலோ எதையும் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. காளிதாசரின் இந்தப் பாடலை நாட்டியப் பள்ளிகளில் சொல்லித்தரும்போதே இப்படிச் சேர்த்து, பிரித்து வருகிற அர்த்தங்களையும் சொல்லி அபிநயிக்கக் கற்றுத்தருவார்கள், மரபு வழி வரும் விஷயம் அது, சினிமாவில் அதனைப் பயன்படுத்தியதற்காக இயக்குநருக்கோ இசையமைப்பாளருக்கோ லேசாகக் கை குலுக்கலாம், அவ்வளவுதான்
***
என். சொக்கன் …
01 06 2012

