கவிதையவள் கவிஞனிவன்

வண்டமிழ் வதனம் காட்ட
.....வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
.....கொட்டிடும் அவளின் ஆற்றல்
அண்டரே மயங்கிப் போகும்
.....அழகொளிர் அங்கம் தன்னில்
சுண்டிடும் விழிகள் கண்டேன்
......சுயநினை விழந்து போனேன்!
மழலையாய்க் கொஞ்சிப் பேசி
......மனமுறுங் காயம் போக்கத்
தழுவிய கரத்தின் மென்மை
......தந்திட உணர்ச்சிப் பாதை
சுழலுமென் குருதி ஓட்டம்
......சுரிதகம் பாடக் கேட்டே
உழலுமென் உயிரின் ஓசை
.......ஒவ்வொரு உலகும் கேட்கும் !
பெண்ணிலேழ் அறிவைக் கொண்ட
.......பிறப்பவள் என்றே சொல்லக்
கண்ணிலேழ் சுரத்தின் கீதம்
........கருவிடக் காதல் ஆசை
விண்ணிலேழ் நிறத்தில் கோலம்
........விதைத்திடும் வான வில்லாய்
மண்ணிலேழ் அதிச யத்தை
........மனத்திலே ஒளிரச் செய்தாள் !
பெண்ணினம் பெருமை கொள்ளப்
.....பிறந்தவள் அவளே என்னும்
எண்ணமே எவர்க்கும் நாவில்
.....எழுந்திட வாழும் இந்தத்
தண்ணிலா நெஞ்சத் தாளைத்
.... ,தமிழுடல் வேகும் போதும்
மண்ணிலே வாசம் கொள்ள
......மாகவி உரைத்துப் போவேன்!
தன்னையே தாங்கும் மண்ணைத்
......தருவிலை வளமே ஆக்கும்
பொன்னையே சுட்டும் தீ..தான்
......பொழிலுற வகையும் செய்யும்!
என்னையே உருகச் செய்தாய்!
......எழில்தமிழ் பருகச் செய்தாய்!
கன்னலே! கனியே! உன்னால்
........கவிஞனாய் ஆகிப் போனேன் !
பாவலர் .வீ.சீராளன்