முத்தத்தின் சத்தத்தைக் கேட்டது யார்

விடிகின்ற பொழுதொன்றில் விரிகின்ற மலரிதழ்மேல்
==விரிவாக இதழ்பதித்து விருந்துண்ணும் வண்டினங்கள்
முடியாதக் கதையாக முறுவலுடன் தினந்தோறும்
==முத்தமிடும் சத்தத்தை முடிவாக கேட்டதுயார்?.
மடிவதற்கென் றறியாமல் மனிதனவன் கைகோர்த்து
==மாலையிலே போனஇணை மறுபடியும் வருமென்று
விடியல்வரை காத்திருத்த வெள்ளாடு எதிர்பார்ப்பில்
==விதைத்திட்ட முத்தத்தின் சத்தத்தைக் கேட்டதுயார்?

கடவுளவர் பாதத்தில் காணிக்கை யாவதற்கு
==காத்திருந்த மலரினங்கள் காலத்தின் கோலத்திற்
குடன்பட்டுக் பிணமொன்றின் மேல்விழுந்து பிணத்தோடு
==உடன்கட்டை ஏறுகின்ற உணர்வற்றப் பொழுதினிலே
மடல்விட்ட எண்ணங்கள் மண்ணோடு மண்ணாகி
==மறைகின்ற காரணத்தை மறக்காமல் மண்ணுக்கு
உடலிற்றுப் போவதுபோல் உயிர்முத்தம் இடும்சத்தம்
==உணர்ந்திங்கு செவிகொடுத்து உளமாறக் கேட்டதுயார்?

கன்னக்குழி யழகினிலே கவிழ்ந்திட்ட ஒருவனுக்காய்
==காப்பாற்றி வைத்திருந்த கனியதர பொக்கிஷத்தை
கன்னமிட்ட காமுகனின் கடும்பசிக்கு இரையாகி
==கறைபட்டு போகின்ற கன்னிமலர் முதல்முத்தம்
தன்புனிதம் சாக்கடையாய் தரமிழந்து போனதென்று
==தாளாத சோகத்தில் தனிமையிலே எந்நாளும்
உன்மத்தம் கொண்டேதான் ஊமையைப்போல் கலங்கியழும்
==உருக்குலைந்த சத்தத்தை உன்னதமாய்க் கேட்டதுயார்?

வரங்கேட்டுத் தவமிருந்த தாயொருத்தி மடியினிலே
==வளர்பிறையாய் வளர்ந்திங்கு வரவிருந்த வண்ணநிலா
சரணத்தைச் சேராமல் சரிகின்ற பல்லவிபோல்
==சயனத்தைக் கொண்டிட்ட பயணத்தின் நிலைமுடிவாய்
மரணத்தை மறைமுகமாய் தழுவிவிடும் பொழுதின்முன்
==மலராத சாபத்தை மடிக்குள்ளே சொல்லியழும்
சுரம்தப்பிப் பாடுகின்ற சுமைகொண்ட பாடலதனின்
==சுமையான முத்தத்தின் சத்தத்தைக் கேட்டதுயார்?

யுத்தநெறி தொலைத்தவர்கள் யோசித்துப் பாராமல்
==யாசித்து நின்றோரின் யௌவனத்தை சீரழித்து
ரத்தத்தில் குளிப்பாட்டி ரணகளத்தில் பெண்மையின்
==ரகசியத்தை அம்பலமாய் ரசனையற்றுக் குடிக்கையிலே
சத்தமிட்டுக் கதருதற்கும் சக்தியற்று நிலைகுலைந்து
==சந்தித்தக் கொடூரத்தின் சகதியிலே வீழ்ந்திருக்க
மொத்தமுமாய் மரணித்த முத்தமது தன்துயரை
==முழங்கிட்டச் சத்தத்தை முடியும்வரைக் கேட்டதுயார்?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Nov-15, 1:41 am)
பார்வை : 145

மேலே