யானைக்கும் அடி சறுக்கும்
யானைக்கும் அடி சறுக்கும்.
====================
டேய் ! பாஸ்கரா! பரீட்சையில நீ பெயிலாயிட்டியாமே?
ஆமாம் பாட்டி! அடுத்த தடவை எழுதும்போது பாசாயிடுவேன்!
நம்ம வீட்ல இதுவரைக்கும் யாரும் பெயிலானது கிடையாது; நீதான் முதல் தடவையா பெயிலாயிருக்கே!
பரீட்சையில கேள்வி எல்லாம் கொஞ்சம் கஷ்டமா கேட்டுட்டாங்க! அதான் பெயிலாயிட்டேன்; அடுத்த தடவை எழுதும்போது நிச்சயம் பாசாயிடுவேன் பாட்டி!
உடனே அங்கு வந்த அம்மா,பாட்டியிடம், " பரீட்சை சமயத்துல இவன் கிரிக்கெட் மேட்ச் பாத்துக்கிட்டு இருந்தா எப்படி பாசாக முடியும்? நாம சீரியல் பாக்க விடாம நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டான். அதான் பெயிலாயிட்டான்; இவன் பெயிலாயிட்டான்னு வெளியில சொன்னா வெட்கக்கேடு!"
அப்போது அங்குவந்த பாஸ்கருடைய அக்கா," நம்ம வீட்டுக் குழந்தைங்க பரீட்சையில மார்க்கு கம்மியா வாங்குனா ," தண்டச்சோறு, மக்கு பிளாஸ்திரி,எருமைமாடு அப்பிடி,இப்பிடின்னு திட்டுவான் .இப்ப இவனே பெயிலாயிட்டானே ! முகத்த எங்ககொண்டு போயி வச்சுக்குவான்னு தெரியலையே! அம்மா ! இந்த லட்சணத்துல இவன் பரீட்சை எழுதும்போது பிட்டு வேற அடிச்சிருக்கான்; இவனோட பிரண்ட் மாதவன் சொன்னான்; நேத்து அவனைக் கடை வீதியில பாத்தேன்; அப்ப அவன் சொன்னான்."
இதைக்கேட்ட பாட்டி,தலையிலடித்துக் கொண்டே, " கருமம்! கருமம் ! பிட்டு வேற அடிச்சானா? அட ஈஸ்வரா! இதக் கேட்டு இன்னும் நான் உயிரோட இருக்கேனே? என்னைக் கொண்டு போயிடப்பா! " என்று புலம்பினாள்.
M. A. தேர்வில் பெயிலான பட்டதாரி ஆசிரியரான பாஸ்கர் , தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் தன்னுடைய பைக்கின் மீது காட்டி பலமாக உதைத்தார். பள்ளிக்குப் புறப்பட்டார்.