ஜானு
ஜானு
=====
கதவு தட்டும் ஓசை கேட்டது.
கதவைத் திறந்தது ஜானு.பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள்.
" வாங்க மாமி! உள்ள வாங்க!"
" என்ன ஜானு! வீட்டுவேலை எல்லாம் முடிஞ்சுதா?"
" அதை ஏன் மாமி கேக்குறீங்க! இன்னும் ஒழிஞ்சபாடு இல்ல! காலங்காத்தாலே ஐஞ்சு மணிக்கே எழுந்துட்டேன். நான் குளிச்சிமுடிச்ச பிறகு, கிருஷ்ணா குளிக்கிறதுக்கு வெந்நீர் விளாவினேன். அப்புறமா குழந்தைகளக் குளிப்பாட்டி, ட்ரெஸ் பண்ணிவிட்டு,டிபன் சாப்பிடவச்சி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடறது. அப்புறம் கிருஷ்ணாவுக்கு லஞ்ச் பாக்ஸுல சாப்பாடு எடுத்து வச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன். செத்த நேரம் அக்கடான்னு உக்கார முடியல மாமி! அடுத்தாப்ல அழுக்குத் துணியெல்லாம் துவைக்கணும்; பண்ட பாத்திரம் கழுவணும்;ஒரு சீரியல் கூட உக்காந்து பாக்கமுடியல மாமி!'
" இந்தாங்க மாமி! பஜ்ஜி சாப்பிடுங்கோ!" ஜானு கொண்டுவந்து வைத்த பஜ்ஜியை பங்கஜம் மாமி ருசி பார்த்தாள்.
" பஜ்ஜி டேஸ்ட் வித்தியாசமா இருக்கே! என்ன பஜ்ஜி இது? எப்படி பண்ணுனே?"
" இது பலாக்கா பஜ்ஜி மாமி! டி.வி. யில நேத்து கீதா மாமி சொல்லிக் கொடுத்தாங்க! அதன்படி செஞ்சு பாத்தேன். பிரமாதமா இருந்தது. அதான் உங்களுக்கு ரெண்டு வச்சேன்."
" ஏன் ஜானு! இவ்வளவு கஷ்டப்படுறியே! ஒரு வேலைக்காரிய வச்சுகிட்டா என்ன?"
" கிருஷ்ணா வாங்குற சம்பளத்துக்கு வேலக்காரிய வச்சுக்கிறதெல்லாம் கட்டுப்படி ஆகாது மாமி! நாலு வீட்ல வேலை செய்றவங்க; அரக்கபரக்க செய்வாங்க; வேலைல சுத்தம் இருக்காது; கிருஷ்ணாவுக்கும் அது பிடிக்காது."
" என்ன ஜானு! செயின் புதுசா இருக்கே? எப்ப எடுத்தே?"
" நேத்துதான் மாமி! ரொம்ப நாளா கிருஷ்ணா கிட்ட கேட்டுண்டு இருந்தேன்; நேத்து என்னோடபர்த்டே இல்லியோ அதான் நானும் கிருஷ்ணாவும் எடுத்துண்டு வந்தோம்."
" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."
" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.
" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.