காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம்
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம்
=================================
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கத்தின் வீட்டின் முன்பாக பல கார்கள் நின்றிருந்தன. ஊட்டியில் அவருக்கு நிறைய காபித் தோட்டங்கள் இருந்தன.அவருடைய ஒரேமகள் சாந்தி. B.Sc..பட்டதாரி.மேற்கொண்டு படிப்பதற்கு சாந்தி விரும்பாததால் அவளுக்கு வரன் தேடும் முயற்சியில் கனகலிங்கம் ஈடுபட்டார்.
காரில் வந்த பெரிய மனிதர்கள் வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்திருந்தனர். கனகலிங்கம் பரபரப்புடன் காணப்பட்டார்.சமையலறையிலிருந்த மனைவியிடம் ஓடிவந்து," காபி ரெடியாயிடுச்சா?எல்லாரும் வந்துட்டாங்க!சீக்கிரம் காபியை சாந்திகிட்ட கொடுத்தனுப்பு" என்று சொல்லிவிட்டு வரவேற்பறைக்கு ஓடினார்.
மணப்பெண் போல அலங்காரம் செய்துகொண்டு சாந்தி, ஒரு தட்டில் காபி டம்ளர்களை வைத்து எடுத்துக்கொண்டு வந்தாள்.வந்திருந்த பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு காபி டம்ளரை எடுத்துக்கொண்டனர்.
" இவள்தான் என்மகள் சாந்தி " என்று கூறி எல்லோருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார் கனகலிங்கம்.சாந்தி எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.
காபியை ருசித்தபடியே எல்லோரும் சாந்தியைக் கவனித்தனர்.காபி குடித்து முடித்த பிறகு வந்திருந்த பெரிய மனிதர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பிறகு கனகலிங்கத்தைப் பார்த்து," மிஸ்டர் கனகலிங்கம்! எங்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
கனகலிங்கம் மனைவியிடம் ஓடிவந்தார். அவருடைய மனைவி அவரைப் பார்த்து,"என்னங்க! என்ன சொன்னாங்க? அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"
" நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்.