சூனியக்கிழவி

M.Jagadeesan

சூனியக்கிழவி
=================
அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓர் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அந்த மலர்த்தோட்டத்தை ஒரு சூனியக்கிழவி பராமரித்து வந்தாள்.

அந்த ஊரில் அன்பே உருவான கணவன்,மனைவி இருவர் வசித்து வந்தனர். ஒருநாள் கணவன் சூன்யக்கிழவியின் தோட்டத்தின் வழியே செல்ல நேரிட்டது. அந்த மலர்த் தோட்டத்தில் இருந்த வண்ணமலர்கள் அவன் கண்ணைப் பறித்தன. தன் மனைவிக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்த ஒரு பெரிய ரோஜா மலரைப் பறித்தான். திடீரென்று இடியும் மின்னலும் தோன்றின. அவன் முன்பாக சூனியக்கிழவி தோன்றினாள்.

சூனியக்கிழவியைப் பார்த்து அவன் நடுங்கினான். தன்னுடைய மந்திர சக்தியினால் அவனை மறைந்துபோகச் செய்தாள்.

கணவனுக்காக அவனுடைய மனைவி நீண்ட நேரம் காத்திருந்தாள். கணவன் வராது போகவே அவனைத் தேடிப் புறப்பட்டாள்.அவள் வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தவுடனேயே பூமி அதிர்ந்தது. சூனியக்கிழவி அவளுக்கு முன்பாகத் தோன்றினாள்.சூனியக்கிழவி அவளிடம்,

"உன் கணவனைத் தேடி அலையாதே! அவன் உனக்குக் கிடைக்கமாட்டான்.இதைக் கேட்டவுடன் அவன் மனைவி அழத்தொடங்கினாள்.

"என் தோட்டத்தில் புகுந்து என் அனுமதியில்லாமல் ஒரு ரோஜா மலரைப் பறித்தான்.ஆகவே அவனை ஒரு ரோஜா மலராக மாற்றிவிட்டேன். என்னுடைய சாபத்தால் அவன் பகல் முழுவதும் ரோஜாவாக இருப்பான்;இரவில் மனித உருவத்தில் இருப்பான்."

இதைக்கேட்ட அவனது மனைவி சூனியக்கிழவியிடம் தன் கணவனுக்குக் கருணை காட்டுமாறு வேண்டினாள்.கிழவி அவளிடம் ,"நாளைக்குக் காலையில் தோட்டத்தில் வந்து என்னைப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டாள்.

மறுநாள் சூரிய உதயத்தில் அவள் கிழவியைப் பார்க்கத் தோட்டத்திற்குச் சென்றாள்.அங்கிருந்த ஒரு செடியில் மூன்று ரோஜா மலர்கள் இருந்தன. கிழவி, அந்தப் பெண்ணைப் பார்த்து," இந்த மூன்று ரோஜா மலர்களில் ஒன்று உன் கணவன்; அந்த மலரை நீ சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உனக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படும். உன் கணவன் இருக்கும் மலரை நீ தேர்ந்தெடுக்கத் தவறினால் நீ அவனை இழப்பாய்; அவனை என்றுமே பெறமுடியாது" என்று சொல்லி கிழவி மறைந்துவிட்டாள்.

அந்தப் பெண் தன் கணவன் இருக்கும் மலரை சரியாகத் தொட்டாள். உடனே அந்த அதிசயம் நடந்தது. அவளுக்கு முன்பாக அவள் கணவன் தோன்றினான்.

கேள்வி: எப்படி அவள் தன் கணவன் இருக்கும் மலரைக் கண்டுபிடித்தாள்?

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Nov-15, 8:55 pm)
பார்வை : 87

மேலே