முதியோர் இல்லம்

#32
முதியோர் இல்லம்
--------------
M.Jagadeesan

பொன்னம்மாள் டேவிட் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது மணி ஏழு. மருமகள் மெர்சி இன்னமும் தூங்கிக்கொண்டு இருந்தாள். காலைக்கடன்களை முடித்துக்கொண்டு , குளித்துவிட்டு வந்தாள். மணி எட்டாயிற்று. இன்னமும் மெர்சியின் தூக்கம் கலைந்தபாடில்லை. நேராகத் தன் மகனிடம் சென்ற பொன்னம்மாள் டேவிட்,

" என்னடா ஜான்சன்! இது வீடா இல்லை சோம்பேறிகள் மடமா? உம் பொண்டாட்டி இன்னமும் தூங்கிட்டிருக்கா! ஒரு பொண்ணா லட்சணமா ஆறு மணிக்கு எழுந்து , வீடு வாசல் பெருக்கிக் கோலம் போடவேண்டாம்?எந்த வீட்லடா நடக்கும் இந்த அநியாயம்? நான் சுகர் பேஷண்டுன்னு தெரியுமில்ல?வேளாவேளைக்கு நான் சாப்பிட வேணாம்? காலம் போன காலத்துல , வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவான்னு தானே இவளைக் கட்டிவச்சேன்! போற போக்கைப் பாத்தா , மூணுவேளையும் நான் சமைச்சுப் போட்டா இவ ஒக்காந்து சாப்பிடுவா போல இருக்கே! இதென்னடா கொடுமை?"

" அம்மா! எதுக்கம்மா சண்டை போடறீங்க? அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை! அதான் தூங்கிட்டிருக்கா! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்கம்மா!"

" டேய்! நான் அவளை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போலாம்டா! ஆனா என் வயிறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலையே! பசி தாங்காத உடம்புடா இது." பொன்னம்மாள் டேவிட்டின் குரல் தளுதளுத்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.அவள் தன் மகனை நோக்கி

" ஜான்சன்! நான் முதியோர் இல்லம் போறேன். அங்கேதான் எனக்கு நிம்மதி கிடைக்கும் ."

" என்னம்மா இது! இப்படி பேசறீங்களே! நான் இருக்கும்போது நீங்கள் இப்படிப் பேசலாமா ?நான் வேணுமின்னா டிபன் செஞ்சு தரட்டுமா? எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா ! நானும் கூட வரட்டுமா ?

" வேணாம்; வழியில எங்காவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன் ."

' சரி; உங்க இஷ்டம்! நான் சொன்னா கேக்கவா போறிங்க?; முதியோர் இல்லம் சேர்ந்தவுடனே எனக்கு போன் பண்ணுங்க!"

" சரிடா!"

அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு முதியோர் இல்லம் வந்து சேர்ந்தாள் பொன்னம்மாள் டேவிட்.

பொன்னம்மாள் டேவிட்டைப் பார்த்தவுடனே , அவளுடைய P.A. விசாலம் ஓடிவந்து வரவேற்றாள்.

" வாங்க பிரசிடென்ட்! எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க! என்ன மேடம்! உங்க கார்ல வராம ஆட்டோவில வந்திருக்கீங்க?"

' என் கார சர்வீசுக்கு விட்டிருக்கேன்! அதான் ஆட்டோவில வந்தேன்! ஆண்டுவிழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டீங்களா ?"

" எல்லாம் பக்காவா இருக்கு மேடம்!"

" மினிஸ்டர் எப்ப வரார்?"

" சரியா பத்து மணிக்கு வந்துருவார் மேடம்!"

" ஒ.கே! "

பொன்னம்மாள் டேவிட் தன் செல்போனை எடுத்துத் தன் மகனுக்குப் பொன் செய்தாள்.

" ஜான்சன்! நான் பத்திரமா முதியோர் இல்லம் வந்து சேந்துட்டேன்!"

" சரி அம்மா! சாயங்காலம் ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டிற்குப் போகும்போது நான் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்."

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Nov-15, 8:58 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 92

மேலே