இது என்ன நியாயம்
பழசை மறந்துடக்கூடாது !!!
விவசாயி ஒருவர் தன் பண்ணையில் ஆயிரம் பசுக்களை வளர்த்தார். அவை நன்றாகப் பால் கறந்தன. கிடைத்த வருமானத்தில் பெரிய வீடு கட்டினார். மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தார். இரண்டு மகன்களை படிக்க வைத்தார். அந்தப் பிள்ளைகள் பொறுப்பானவர்கள். பசுக்களுடன் அவர்கள் அன்பாக இருந்தனர்.
காலம் கடந்தது. பண்ணையில் இருந்த சில பசுக்களிடம் பால் வற்றி விட்டது. அவை கிழடாகி விட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயி, மனைவியை அழைத்து,""அடியே! சில மாடுகள் கிழடாகி பால் குறைந்துவிட்டது. அதை அடிமாட்டுக்கு அனுப்பி விட வேண்டியது தானே! பணமும் கிடைக்கும்,'' என்றான். அவளும் ஆமோதித்தாள்.
இதை பிள்ளைகள் கேட்டனர். தந்தையிடம் சென்றனர்.
""அப்பா! வயதாகி விட்டால் எதற்குமே நாம் பயன்பட மாட்டோமா?'' என்றனர்.
""அதிலென்ன சந்தேகம்! நிற்கக் கூட முடியாது. கால்கள் தள்ளாடும், கைகள் நடுங்கும், '' என்றார் தந்தை.
""அந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்றுவார்கள்?'' என்ற பிள்ளைகளிடம், ""அவரவர் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
உதாரணத்துக்கு எனக்கு வயதாகி விட்டால், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்'' என பதிலளித்தார்.
""அப்பா! நம் மாடுகள் கிழடாகி விட்டாலும், அவை இதுவரை நம்மோடு வாழ்ந்து பால் தந்து நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அவற்றை மட்டும் கொல்ல வேண்டும் என்கிறீர்களே! இது என்ன நியாயம்! நம்மைப் போல நம் வளர்ச்சிக்கு காரணமான அந்த விலங்குகளையும் நேசிக்க வேண்டுமல்லவா!'' என்ற பிள்ளைகளின் பேச்சு, விவசாயியின் மனதில் சம்மட்டி அடியாய் விழுந்தது.
மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு தனியிடத்தில் கட்டி வைத்து, அவை இயற்கையாக மரணமடையும் வரையில் பராமரித்து வந்தார்.