சாகா வரம் பெற்ற பொதுஜனங்கள்

“நீ எதுக்கு கவலைப்படுற? நம்ப எல்லாம் சாகா வரம் வாங்கிட்டு வந்தவங்க” என்ற அசரீரியாக ஒலித்த குரலில் நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

“ம்கும்...உனக்கு என்னப்பா இப்புடி குந்திக்கினு அருள்வாக்கு சொல்லிக்கின்னு இருப்ப...அத்த கேக்குற கேன பையன்னு என்னைய நினைச்சிக்கினியா?” என்ற மற்றொரு குரல் அது அசரீரி அல்ல என்று உணர்த்தியது. நான் தங்கியிருந்த ஒத்தை அறை மான்ஷனின் வராண்டாவில் நடக்கும் பேச்சுவார்த்தை என்று புரிந்தது.

“என்னோட வாக்கு சித்தன் வாக்குத்தான், அதுபுரிய உனக்கு கொஞ்சம் மேல் மாடியில சமாச்சாரம் வேணும்.” என்றார் மற்றவர்.

“இன்னா மாரி இப்படி சொல்லுற, நான் என் கஷ்டத்தை சொன்னா நீ இப்படி சும்மாங்காட்டியும் கவலை படாதன்னுற... விக்கறவெலைவாசில ஊட்டுல இருக்கிறதுங்க மூணு வேள துண்ண சோறு போடுறதா, இல்ல இஸ்துக்கினு கிடைக்குற அம்மாவ பாப்பேனா?” என்று மாரியிடம் கேள்விகள் அடுக்கப்பட்டது.

இதே சிந்தனை தான் படித்துவிட்டு வேலைத்தேடி அலையும் என் மனதிலும், ஆதலால் எனக்கும் மாரியின் பதிலில் விடைகிடைக்குமோ என்ற நப்பாசையில் வெளியில் வந்து நின்றேன்.

“பொங்கி தின்ன இலவசமா அரிசி கிடைக்குது, தர்மாஸ்பத்திரி இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்” என்றார் மாரி.

“வெறும் அரிசிய பொங்கி துண்ணா ஆச்சா? மளிகை ஜாமான் வாங்கவும், மத்தகுடும்ப செலவுக்கும் ராக்கெட் விடுற கணக்கா துட்டு வேண்டியிருக்கே? அதுக்கு எங்க போக. நீ சொல்லுற தர்மாஸ்பத்திரில இட்டுகின்னு போய் அம்மாவ காட்டினா ஏதோ மருந்து மாத்திரை தந்தாங்க, வேற ஏதோ ஆப்பரேசன் பண்ணனும், அதுக்கு இங்க வசதி இல்லன்னு கொண்டு போக சொல்லிட்டாங்க. கொசுறா சத்தான ஆகாரமா துண்ண தரணும்ன்னு சொல்லிட்டாங்க. அம்மாம் துட்ட எங்க போய் கொள்ளை அடிக்க?”

“ஹஹஹா பய புள்ளைக்கு இன்னும் ஒண்ணுமே புரியல. நான் சொன்னா கோவம் மட்டும் பொத்துகிட்டு வருது.” சிரியோ சிரி என்று சிரித்தார் மாரி.

“ஐய. உனக்கு என் கஷ்டம் பாத்தா காமடியா இருக்கா” என்று நொந்தவரைப்பார்த்து

“இன்னும் புரியாத கூமுட்டயா இருக்கியே. இப்போ பாரு டாஸ்மாக்ல தண்ணிய போட்டு தள்ளாடிக்கிட்டு இருக்கிற இஸ்கூல்ல படிக்கற புள்ளைங்க முதல் பெருசுங்க வரை சீக்கிரமே பரலோகம் போய்டும். பொட்டப்புள்ளய எடுத்துக்கிட்டா கருவுல பாதிய கொன்னா மீதிய அப்புறம் கெடுக்கறது முதல் ஆசிட் வீசுறது வரை செஞ்சி கொன்னுப்புடுவோம்.
இல்லேனா தற்கொலை கொலை இப்படி எல்லாம் பண்ணி ஜனங்கள கொன்னுப்புடுவோம்.” என்று கூறிய படி பீடியை பிடிக்க நிறுத்திய மாரியை வினோதமாகப் பார்த்தார் மற்றவர்.

ஒரு முறை பீடியை இழுத்துவிட்டு, “இப்படி எல்லாம் பாதிபேரு செத்தா மீதிய பசி, பட்டினி, குழந்தங்க முதல் பெரியவங்க வர வியாதி என்னனு தெரியாம பாதியும், தெரிஞ்சப்புறம் உங்க ஆத்தா மாதிரி வைத்தியம் பாக்க முடியாம மீதியும் போச்சுனா மிச்சம் என்ன தேறும்?” என்று கேள்வி கேட்டார்.

அதற்கு என்ன பதில் சொல்ல என்று யோசித்த மற்றவரை போல் என்னாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை...வெறும் ஆதங்க பெருமூச்சே வெளியேறியது.

“அதுமட்டுமில்ல...தெக்கு பக்கம் கூடங்குளம்,கிழக்கு பக்கம் மீதேன், மேற்குல இப்போ சொல்லிக்கிட்டு இருக்கற ...ம்ம்.. அது என்னப்பா ஒரு மிட்டாய் பேரு மாதிரி வருமே..நியூட்ரின்..ஆங்.. நியூட்ரினோவோ என்ன எழவோ, அப்புறம் கெயில் குழா புதைக்கறது, கவுத்தி வேடியப்பன் மலைல என்னமோ வெட்டி எடுக்கறது இப்படி எல்லா பக்கமும் எதிர்க்காலத்துக்கு தேவை, அது இதுன்னு சொல்லி நிகழ்காலத்துலையே நம்ப ஜனங்க இருக்க முடியாத படிக்கு நடவடிக்கை நடக்குது.” ம்ம்ம் என்று பீடியை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு

‘நம்மூர் பயப்புள்ளைங்க, நீங்க மட்டும் தான் கேப்மாரித்தனம் பண்ணுவீங்களா, அப்போ நாங்களும் மொள்ளமாரித்தனம் பன்னுவோமில்லன்னு நிரூபிக்கறகணக்கா மீதி எடத்துல கிரானைட், தாது, ஆத்து மண்ணுன்னு ஒண்ணுத்தையும் விட்டு வெக்காம அள்ளுறானுங்க, அதோட விளைவ பத்தி எந்த பண்னாட யோசிக்குது? நுனிமரத்துல ஒக்காந்துகிட்டு அடி மரத்த வெட்டுற அறிவாளி புள்ளங்க நெறஞ்ச ஊரு நம்மூரு. தேவையில்லாததுக்கு எல்லாம் நியாயம் கேட்டு போராட்டம் நடத்துறவங்க நம்ப நாடே சாக கெடக்குது அதுக்கு நியாயம் கேக்காத வீரனுங்க.” என்று மற்றவரின் பதிலை எதிர்ப்பார்க்காமல் மீதி இருந்த பீடியை அனுபவித்து குடிக்கத் தொடங்கினார்.

“ஆமாம், இவர் சொல்லுறதுலயும் உண்மை இருக்கே” என்று என்னையும் மீறி என் மனம் அவருக்கு தன் வோட்டை போட்டது.

“இது எல்லாம் பத்தாதுன்னு ஒபாமா மாதிரி மைனர் மாப்பிள்ளை கூடவும், மான்சாண்டோ, அணுஉலை அமைக்கறவன், ஆயுதங்கள விக்குறவன் மாதிரியான பங்காளிங்க நல்லா இருக்கணும்னு காவடி எடுக்கற பக்தர்கள் ஏராளம். கட்சி பேதம் இல்லாம புரோக்கர் வேலை பாக்குறவன் தான் அதிகாரத்துல இருந்துகின்னு திட்டம் திட்டமா போட்டு நம்பள இப்படி இருக்க வழிப்பண்ணிட்டானுங்க. இந்த நிலை மட்டும் இல்ல இன்னும் ஆட்டம் இருக்குன்னு சொல்லுறாங்க.” என்ற மாரியை ஆதரித்து

“ஆமா, நீ சொல்லுறதும் சரிதான்.” என்று மற்றவர் ஆமோதித்தார்.

“இதுமட்டும் போதாதுன்னு வெளிநாட்டுக்காரன் இங்க வந்து லாபம் பாக்க கூவி கூவி அழைக்கறாங்க. உள்ளூரு பெரிய வியாபாரிங்க எதிர்ப்பை சமாளிக்க எல்லா விதமான சலுகையும் தந்துட்டாங்க. இதுக்கு பழகிபோட்டாங்க அந்த உலகப் பணக்காரனுங்க. இன்னும் அவங்க உலகப் பணக்காரனா முன்னணில இருக்க போட்டா போட்டி போட்டுக்கிட்டு லாபம் பாக்க ஆட்குறைப்புல இறங்கிட்டாங்க. 25,௦௦௦ - 3௦,௦௦௦ ஆளுங்கள வீட்டுக்கு அனுப்பிடறாங்க, அந்த வருமானம் நிரந்தரம்ன்னு கனா கண்டுட்டு அதை நம்பி கடன வாங்கி எத்தன பேரு கட்ட முடியாம நட்டுக்க போறாங்களோ தெரியல. இதை ஏன்னு கேக்க அதிகாரத்துல இருக்கறவனும் சரி, எதிர்கட்சின்னு சொல்லிக்கற ஆளுங்களும் சரி கேக்க துணிச்சல் இல்ல... இது எல்லாம் எதனால? எல்லா வக்கத்த பயப்புள்ளயும் இவனுங்ககிட்ட நிதி வசூல் பண்ணவங்க, ‘மாப்பு நீ யாருக்கு ஆப்பு வெச்சாலும் கேக்க மாட்டோம், எனக்கு மாத்திரம் ஆப்பு வெக்காதன்னு’ கை கழுவிட்டானுங்க.”

இதை கேட்டு என் மனமும் அவருக்கு வோட்டு போட்டது. அவர் சொல்வது போல் சொந்த நாட்டுக்காரனயே கேக்க நாதி இல்லாத ஆளுங்க வெளிநாட்டுக் காரனை மட்டும் கேட்டுடுவாங்களோ?

“ஆக மொத்தம் இப்படி எல்லா ஜனங்களும் இத்தனையையும் மீறி பொழச்சு எழுந்தா அவன் சாகாத வரம் வாங்கினவன் தானே!” என்று சொல்லி புன்னகைத்தார். அந்த புன்னகை “சித்தன் வாக்கு சிவன் வாக்கு” என்பது இதுதான் என்று எனக்கு தோன்றியது.

எழுதியவர் : விஜயலக்ஷ்மி சுஷில்குமார் (5-Nov-15, 9:23 pm)
பார்வை : 138

மேலே