அந்தம்மா எஸ்சி சார் அதனால்தான்
இது ஏதோ கர்நாடகாவில் மட்டும் நடப்பது அல்ல.
92 ம் வருடம் நான் சத்துணவு தணிக்கையாளராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.
அப்போதெல்லாம் சத்துணவு மையங்களில் முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கும் சத்துணவு வழங்கப்பட்டு வந்தது.
ஒரு மையத்தை தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சத்துணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த இருபது முதியோர்களும் ஒரே நாளில் இனி சத்துணவு வேண்டாம், பதிலாக ரேஷன் கடையில் அரிசி வாங்கிக்கொள்கிறோம் என்று விலகி விட்டதை கவனித்தேன்.
அந்த அமைப்பாளரிடம் காரணம் கேட்டபோது, "புது சமையலர் வேலைக்கு சேர்ந்துட்டாங்க சார்" என்றார்.
"ஏன் அவங்க நல்லா சமைக்கலையா?" என்று அப்பாவித்தனமாக கேட்டேன்.
அவர் குரலை மட்டுப்படுத்தி, "அந்தம்மா எஸ்.சி. சார். அதனால்தான் " என்றார்.