என் வீட்டு செல்லக்குட்டி

ஒரு மழை நாளில்
ஒரு மாத குழந்தையாய்
என் இல்லம் நுழைந்தாய்..!
அன்று – என் மகனின்
பதிமூன்றாவது பிறந்தநாள்..!

வாழ்த்த வந்தவர்களெல்லாம்
வாழ்த்துவதை மறந்துவிட்டு
வாயடைத்து நின்றார்கள்
உன் அபூர்வ அழகைக்கண்டு..!

அழகென்றால் அப்படிவொரு அழகு!
கிளியோப்பாட்ரா பார்த்திருந்தால்
கிலுகிலுத்துப்போய் சிலாகித்திருப்பாள்!

முக்கண் நாயகன் சிவபெருமான்
தனது மூன்றாவது கண்ணைத்திறந்தால்
எப்படி இருக்குமோ..
அப்படி இருந்தன உனது இரண்டு கண்களும்..!

பனியும் மழையும் கைக்குலுக்கும்
கார்த்திகை மாத கார்காலத்தில்
போர்வையை இழுத்துப் போர்த்தினால்தான்
உறக்கமே வரும் என்ப்போன்ற மனிதர்களுக்கு..!
ஆனால் உன்ப்போன்ற ஜீவன்களுக்கு…?
அவற்றை சிந்தித்துப்பார்க்கும் திறன்
எங்களுக்கிருந்தாலும் நாங்கள் சுயநலவாதிகள் !

அந்த வெடவெடுக்கும் குளிரில் நீயும் நடுநடுங்கினாய்
உன்னை வெளியில் கட்டிப்போட மனமில்லாமல்
வீட்டின் வரவேற்பறையில் படுக்க விட்டோம்!

விடிந்துப் பார்த்தால் வரவேற்பறை முழுதும்
கக்காக்களாலும், உச்சாக்களாலும் நிறைத்திருந்தாய்!
முகம் கோணாமல் அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு
பினாயில் தெளித்து வாடையை விரட்டினோம்!
பனிக்காலம் முடியும்வரை உனக்காக பணிவுடைப்பண்ணியே
பிணாயிலுக்கும் லைசாலுக்கும் பெருந்தொகை செலவிட்டோம்!


நாட்கள் நகர்ந்தன, உன் பரிணாமம் வளர்ந்தன
நீ பூப்பெயதியபோது எங்கள் மகளே
பூப்பெய்தியதாய் புளாகாகித்தோம் !
உனக்கு நாப்க்கின் கட்டும் நாசுக்கு தெரியாமல்
ஒழுகும் உதிரத்தை மாப்பிங் செய்து மல்லுக்கட்டினோம்!
உனது ரூது காலத்தில் எங்களுக்கது கூடுதல் வேலை..!
நல்ல வேளை – அதற்கு ஆறுமாத இடைவேளை !

எஙகள் மகளிரைப்போல் மாதமொருமுறையென்றால்
எங்களில் ஒருவர் வேலையை இழக்க வேண்டியதான்!
அதற்கு வேலையில்லாமல் செய்த இயற்கைக்கு நன்றி!
இறைவனுக்கும் நன்றி! உன்னை ஈன்றவருக்கும் நன்றி!

“நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்காதே
அதை வைக்க வேண்டிய இடத்தில் வை..!
என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும்
அதன் புத்தி ‘பீ’ திண்ணத்தான் செல்லும் !”

இரக்கமில்லாத மனிதர்களின்
இந்த பிதற்றல் பழமொழிகள்
தொன்றுத்தொட்ட காலம்தொட்டே
நிலைத்து நின்றுவிட்டதை - வென்றெடுக்க
எத்தனை புளுகிராஸ்கள் குரல் கொடுத்தாலும்
செவிடன் காதில் ஊதிய சங்குதான் !

வாசிக்கும் பழக்கத்தைத்தான் குறைத்துக்கொண்டோம்
நேசிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக்கொள்வோம்!

எழுதியவர் : இரா.மணிமாறன் (7-Nov-15, 12:41 pm)
பார்வை : 116

மேலே