தீபாவளி பர்ச்சேஸ்

குட்டிக்கதை

மிச்சப்பணத்தை வாங்கி ஜீன்சில் சொருகிக்கொண்டான் சண்முகம். செல்விகேட்டாள்..

"ஏங்க எவ்ளோவாச்சு"?

" அதெல்லாம் ஒனக்கெதுக்கு ? சாரி செக்‌ஷன் மாடில இருக்காம். வா போலாம்"

"வேணாம்பா. உங்கக்கா ஆடிக்கு வச்சுக்குடுத்தது ஒண்ணு இருக்கு. அதையே கட்டிக்கலாம். உங்களுக்கு எதாச்சும் பார்ப்பமே"

"வீட்லயே நா சொன்னனா இல்லியா ? எனக்கு எதும் வேண்டாம். மாடிக்கு வா. சாரி எடுத்துட்டு கெளம்புவோம்"

ஒரே பிடிவாதமாக அவன் அழைக்கவும் செல்வியால் தட்டமுடியவில்லை. ஆசைக்கும் நிலைமைக்கு நடுவில் ஊசலாடியது அவள் மனம்.

சாரி செக்‌ஷனில் கூட்டம் அதிகமிருந்தது. அவள் ஒவ்வொன்றாய் விலை பார்த்துவிட்டு ஒதுக்கிக்கொண்டிருந்தாள். அவன் பொறுமையாய் காத்திருந்தான். ஒரு பச்சைநிற டிஸைன் புடவையை திரும்பத்திரும்ப எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள்.

அவளுக்கு அது அத்தனை அழகாக இருக்கும். அவன் மெல்ல அந்தப்புடவையைப் புரட்டி விலையைப் பார்த்தான். இவன் பட்ஜெட்டில் இரண்டு மடங்கிருந்தது.

செல்வி ஒருஜிங்குச்சா புடவையை தேர்ந்தெடுத்து அவனிடம் காட்டினாள். விலை கட்டுக்குள்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு திருப்தியில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.

"அந்த பச்சை புடிச்சிருந்தா வாங்கிக்க செல்வி" என்றான் ஒப்புக்கு.

'பரவால்லப்பா. அடுத்தவருசம் நமக்கு வசதி வரப்ப இன்னும் பெட்டரா எடுத்துக்கலாம்" என்றாள்.

பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியில் வந்து ஓட்டலில் சாப்பிட்டு வீடுவந்தபோது களைப்பாகத்தான் இருந்தது. புதுத்துணியை உடனே போட்டாகவேண்டுமென்று அடமான அடம் பிடித்தான் மகன். பாத் ரூம் போய்விட்டு திரும்பிய சண்முகத்தை முறைத்தபடி நின்றிருந்தாள் செல்வி. அவள் கையில் அந்த பச்சைப்புடவை இருந்தது.

"ஏங்க இப்புடி பண்ணீங்க"

"எனக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு நீ நெனைக்கிறப்ப, ஒனக்கு புடிச்சதை வாங்கித்தரனும்னு நான் நெனைக்கமாட்டனாப்பா"?

செல்வி நெருங்கிவந்து சொன்னாள்..

" அட நீங்க வேற ஏங்க காமெடி பண்ணிக்கிட்டு. இப்டின்னு தெரிஞ்சிருந்தா இதுலயே ரோஸ்கலர்ல ஒன்னு இன்னும் சூப்பரா இருந்துச்சி அதயாச்சும் எடுத்திருக்கலாம். என்னமோ போங்க"

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (8-Nov-15, 7:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 248

மேலே