மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் (தெரிந்தே செய்கிறோம்)
பாவலர் கருமலைத்தமிழாழன்

பஞ்சத்தை விரட்டிடுவோம் நாட்டி லுள்ள
---பட்டினியை ஓட்டிடுவோம் வறுமைக் கோட்டை
எஞ்சாமல் அழித்திடுவோம் ஊழல் தன்னை
---எத்திசையும் நுழையாமல் காத்து நிற்போம்
விஞ்சுகின்ற அளவினிலே தேனும் பாலும்
---வீதிகளில் ஓடவைத்துப் பருக வைப்போம்
துஞ்சாமல் உங்களுக்காய் உழைப்போம் என்றே
---துயர்துடைக்க மேடையிலே உறுதி சொல்வார் !

வட்டங்கள் மாவட்ட தலைவ ரெல்லாம்
---வரிசையாக வந்துசொல்லில் இனிப்ப ளிப்பார்
திட்டங்கள் ஆயிரமாய் கோடி தம்மில்
---தீட்டியுங்கள் மேன்மைக்காய் செய்ய உள்ளோம்
பட்டிதொட்டி குக்கிராமம் எல்லாம் ஓங்கிப்
---பசுஞ்சோலை போல்வாழ்வு செழிக்கு மென்று
சட்டைவேட்டி பளபளக்க அமைச்சர் நின்று
---சத்தியத்தைத் தன்தலையில் அடித்துச் சொல்வார் !

ஆறுமாதம் தொடர்ச்சியாக அமைச்ச ராக
---ஆட்சிசெய்வோம் எனும்உறுதி இல்லா தோர்கள்
ஆறுமணி கூட்டமென்றே எட்டில் தொடங்கி
---அய்ந்தாண்டு திட்டங்கள் அறிவிப் பார்கள்
கூறுகெட்ட மக்களாக உண்மை யென்றே
---குத்திகுத்தி வாக்களித்துக் குழியுள் வீழ்வோம்
பேறுகால பெண்ணுறுதி போல நாமும்
---பெற்றபின்பு மீண்டுமீண்டும் தெரிந்தே செய்வோம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Nov-15, 8:44 am)
பார்வை : 241

மேலே