உரிமைகள் பறிக்கப்படும்
உரிமைகள் பறிக்கப்படும்
நீருக்குள் நிழல் தேடல்
பாவலர் கருமலைத்தமிழாழன்
நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று
---நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப்
பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார்
---பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று !
வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம்
---வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால்
பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே
---பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே !
பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும்
---பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள்
ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே
---அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று
கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால்
---கள்ளிப்பால் ஊட்டிசிசு கொல்லல் போன்று
வேல்கொண்டு குத்தியவன் கையி லேயே
---வெதுசெய்யக் கொடுத்திட்டார் மீண்டும் வேலை !
வல்லரசு களெல்லாம் ஒன்று கூடி
---வழங்கிட்டார் அதிகாரம் திருடன் கையில்
கொல்லரசா நிலைநாட்டும் நீதி தன்னை
---கொன்றதினை நியாயமென்றே தீர்ப்பு ரைக்கும்
எல்லாமும் இங்கிருக்கும் தமிழர் தம்முள்
---எள்ளளவும் ஒற்றுமையே இல்லா மைதான்
சொல்லியென்ன தமிழ்நாட்டுத் தலைவ ரெல்லாம்
---சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை !