அவர்கள் ஒரு தொடர்கதை ஒரு பக்க கதைகவிஜி

"ஒரு முப்பது வருஷம் இருக்குமா..."

"ம்ம்ம்.... 25 வயசுல பிரிஞ்சோம்... ......இருக்கும்..."

"பாட்டி ஆகிட்ட அம்மு..."

"நீ ....மட்டும் என்னவாம்... தாத்தா தான்..."

"ம்ம்ம்.... காதல்... எத்தனை காதல் இல்ல ..நினைக்கும் போதே மனம் கனக்குது..."

தலை குனிந்த அந்த பாட்டி ஆம் என்பது போல தலையை ஆட்டியது ....

'ம்ம்ம்...' என்று கூறிய பாட்டிக்கு கனத்த மௌனம்...மனமெங்கும்... அது, முகத்திலும் சிதறியது...

"வாழ்க் கையில எத்தனையோ உறவுகளைக் கடந்து போறோம்.... ஆனால், காதலிச்சவளை மட்டும் கடக்கவே முடியரதில்லை.... நான் ஒரு நாளும் உன்னை மறக்காத நானாகவேதான் இருந்தேன்" என்றார்... அந்த தாத்தா...

'ம்ம்ம்ம்ம்'- என்று அவரின் கண்களைக் கண்ட பாட்டியின் கண்கள் கலங்குவது போல இருந்தது...

"நீ கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்..அம்மு... கிட்டத்தட்ட நீ என்னை ஏமாத்தின மாதிரிதான்..."-என்ற தாத்தா.. கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.. அவரையே பார்த்த பாட்டி மெல்ல பேசியது......

"யார் தான் யாரைத்தான் ஏமாத்தல.. எல்லாரும் ஏதோ வகையில ஏமாத்திட்டுதான் இருக்கோம்... .. இல்லையா...?"-பாட்டி கண்களை ஆழமாக மூடி திறந்தது....

ஆமோதிப்பது போல பார்த்த தாத்தா, "நீ போர்சா ட்ரை பண்ணலயோன்னு தோணுது... சரி விடு... எல்லாரும் என்ன மாதிரியேவா இருப்பாங்க.. அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க பிரச்சினை.. இல்லையா அம்மு..." என்றார்.. கண்களை தூசு விழுந்தது போல மெல்லமாக தட்டி விட்டுக் கொண்டார்...

தாத்தாவின் மெல்லிய கோபத்தை உள் வாங்கியபடியே, " வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க" என்று பாட்டியின் தயக்கம் வார்த்தைகளால் தடுமாறியது

"ம்ம்ம்.. வீட்ல யாரு..." என்று இடைவெளி விட்ட தாத்தா.. பாட்டியின் முகத்தை பார்வையாலே ஏந்துவது போல பார்த்து விட்டு.. "நான் மட்டும் தான்... யாரும் இல்ல.." என்று வெடுக்கென்று கூறினார்...

"என்ன சொல்றீங்க" என்பது போல பாட்டி பார்த்தது....

"நீ போனதுக்கு அப்புறம்...ஒரு பிடிப்பே இல்லாம போய்டுச்சு... கல்யாணம் பண்ணிக்க தோணல. அப்டியே இருந்துட்டேன்..." என்றதுமே பாட்டி மெல்ல விசும்பத் துவங்கியது...... அங்கு வீசிய தென்றலின் வாசத்தில் சுவாசம் இழந்த பூக்களை அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு மேல் நின்ற மரம் உதிர்த்தது....

"உதிர்பவைகள் எல்லாம் பூக்களா..... அல்லது இலைகளா...." இருவருக்கும் பொதுவான கேள்வியாக இருந்தது அவர்களின் அப்போதைய இடைவெளி...

"பெண்கள் எப்போதுமே சேபர் சைடுதான்... இல்லையா அம்மு... இனி அழுது என்ன பிரயோஜனம்... இது வரைக்கும் உன்ன நினைச்சுட்டே வாழ்ந்திட்டேன்.. இனியும் அப்டியே..." என்று வராத புன்னகையை உதிர்த்தார்..

ஒரு பெரு மௌனத்துக்கு பின்..."சில நேரம் தூரமா இருக்கறது நல்லது இல்லையா பிரான்சிஸ்...." என்றபடியே அம்மு எழுந்து போக யத்தனித்தது...

"மறுபடியும் எப்போ பார்க்கலாம்" என்று கேட்கத் தோணாத விழிகளில் ஸ்தம்பித்த பிரான்சிஸ்,.....சட்டென ஞாபகம் வந்தது போல, "அம்மு.. எத்தன பசங்க..." என்று சற்று வேகமாகவே கேட்டார்..

அவரின் கண்கள் அம்முவையே அலை பாய்ந்தது... அம்முவாலேயே அலையானது போல...

மெல்ல திரும்பிப் பார்த்த அம்மு... "ஒன்னு" என்று விரலால் ஜாடையில் காட்டியது...

"ம்ம்ம்.. சரி என்பது போல தலையை ஆட்டிய பிரான்சிஸ் தாத்தா..."ம்ம்ம்... பேர்..... பேர்...... என்ன....?"- என்று ஒரு குழந்தையின் தவழுதலை முகத்தில் கொண்டபடியே கேட்டார்.....

நொடிகள் தயங்கி...."பிரான்சிஸ் எடின் பாரோ" என்று கூறி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றது....

அந்த மரத்தின் வேரின் வளைவுகளென ஒரு உறிஞ்சுதல் உணருதலாய் ... மெல்ல மெல்ல அறு பட்டுக் கொண்டே இருக்க... காற்று சற்று..... அதிகமானது..

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Nov-15, 11:55 pm)
பார்வை : 161

மேலே