ஒரு வீடு, இரு வாசல்

இளங்கோ வெளியூரில் இருக்கும் தன் தங்கையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தான்... ‘‘ஆமாம் மாலா, அம்மா போனதிலேர்ந்து அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார். தனக்குன்னு யாருமே இல்லைன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டார். எத்தனை சொல்லியும் அவரைச் சமாதானப்படுத்தவே முடியலே! அதனால ஒரு ஐடியா பண்ணேன். பக்கத்துல இருக்கிற முதியோர் இல்லத்துக்கு அப்பாவை அழைச்சிட்டுப் போய்க் காட்டினேன். அந்த முதியோர்களோட கண்ணீர்க் கதைகளை நேரடியா அவங்க வாயாலேயே கேட்டதும், ‘இவங்களை விட நாம எவ்வளவோ பரவாயில்லை. நமக்கு நம்ம பிள்ளைங்க இருக்காங்க’ன்னு அப்பா மனசுக்கு ஒரு தெம்பு கிடைச்சிருக்கு. அன்னியிலேர்ந்து அப்பா புலம்பறதில்லை!’’

அதே நேரம் இளங்கோவின் அப்பா, அருகிலிருந்த பூங்காவில் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்... ‘‘பெண்டாட்டி போன துக்கம் தாளாம நான்பாட்டுக்குப் புலம்பிட்டிருந்தேன். ஒரு நாள் திடுதிப்புனு முதியோர் இல்லத்துக்கு அழைச்சிட்டுப் போய்க் காண்பிச்சான் என் பையன். எனக்குச் சுரீர்னுச்சு. ‘பெத்தவங்களை நடுத் தெருவுல விடற பிள்ளைங்களுக்கு மத்தியில் உன்னை நான் எவ்வளவு சௌகரியமா வெச்சிருக்கேன்! சும்மா சும்மா புலம்பிட்டிருந்தேன்னா, நானும் உன்னை இங்கே கொண்டுவிட வேண்டியிருக்கும்’னு என்னை எச்சரிச்ச மாதிரி இருந்துச்சுடா! அன்னியிலேர்ந்து நான் வாயே திறக்கறதில்லை!’’

- ஜி.ஆரோக்கியதாஸ்

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (12-Nov-15, 12:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 361

மேலே