உரிமை பறிக்கப்படும்

*********************************
உரிமை பறிக்கப்படும்!
*********************************
மிசா வந்தால் -
எழுத்துரிமை பறிக்கப்படும்!
சில புருஷன்மார் வந்தால் -
உடையுரிமை, நடையுரிமை,
பேச்சுரிமை, கருத்துரிமை
எல்லாம் பறிக்கப்படும்!

தந்தையின் அகால மரணம்
அவன்
கல்வியுரிமையைப் பறித்துவிட்டது!
கொடூர விபத்து
இவன்
தொழிலுரிமையைப் பறித்துவிட்டது!

கற்புப் பறிக்கப்படும் காமுகனால்!
பொருள் பறிக்கப்படும் திருடனால்!
அறிவு பறிக்கப்படும் இனக்கவர்ச்சியால்!
அழகும் ஆரோக்கியமும் பறிக்கப்படும் நோயால்!
இவை அனைத்தும் பறிக்கப்படும்
- வாழ்வுரிமை, நிம்மதி உட்படக் -
குடிகாரக் கணவனால்!

தேசத் துரோகம்
குடியுரிமையைப் பறிக்கும்!
கருத்தடை
பிறப்புரிமையைப் பறிக்கும்!
இராணுவம்
சிந்திக்கும் உரிமையைப் பறிக்கும்!

நூலகம், மருத்துவமனை,
ஆலயங்களில்
பேச்சுரிமை
பறிக்கப்பட்டே ஆக வேண்டும்!

பெண்களுக்குச் சொத்துரிமை
ஏட்டளவில்தான்!
வீட்டளவில்
பல இடங்களில் பறிக்கப்பட்டு விட்டன!

அந்நியத்தில் பெண்ணெடுத்தால்,
அரசுரிமை கூட பறிக்கப்பாடலாம்!

அஞ்சல் அட்டை ஒழிந்து
கைபேசி வந்த பின்னர்,
எழுத்துரிமையின் வாழ்வு தன்னைப்
பேச்சுரிமை கௌவிக் கொண்டது!

நீங்கள் யோகக்காரர்கள்!
எல்லா உரிமைகளும்
- ஒன்றுகூட பறிக்கப்படாமல் -
உங்களிடம் அப்படியே இருக்கின்றன!

ஆனால்,
என்ன செய்துவிட்டீர்கள்?

காசு வாங்கிவிட்டால்
ஓட்டுரிமை இருக்கிறதா?
இலஞ்சம் வாங்கிவிட்டால்
தொழிலுரிமை இருக்கிறதா?
நாயே என்றால்
காதலிக்கும் உரிமை இருக்கிறதா?
கருத்தடை செய்தால்
வாழும் உரிமை இருக்கிறதா? .....

- ராஜமாணிக்கம்

எழுதியவர் : ராஜமாணிக்கம் (13-Nov-15, 5:47 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 55

மேலே