வின் ஞானம்
இம்மாத அகலுக்கான எனது கவிதை
புவியீர்ப்பு விசை
பலம், பலவீனம்
மின்காந்தம், ஈர்ப்பு
அண்டத்தை கொண்டுசெல்லும்
அடிப்படை விசைகள்
நியுற்றனோடு சேர்ந்துகொண்டு
ஈர்ப்பை விசையென்கிறார்கள்
ஐன்ஸ்டைனோடு சேர்ந்துகொண்டு
வெளிநேர வளைவென்கிறார்கள்
ஈர்ப்பு ஒருவகைக் கவர்ச்சிதான்
துகள்களில் நிகழ்வதில்லை
ஈர்ப்பு ஒருவகை இழுவைதான்
கோள்களில் அகல்வதில்லை
மாற்றந்தான் உலகில்
மாறாதது என்ற
மாற்றானின் மடத்தனத்தை
நாமும் நம்பிவிட்டோம்
மாற்றந் தவிர்ந்த மாறாதவை
இருக்கத்தான் செய்கின்றன
ஈர்ப்பு என்பதை யாராலும்
மாற்றவே முடியாது
நான்கு விசையிலும்
பலவீனமானது ஈர்ப்பு
நான்குமே செய்யாததை
செய்வதும் ஈர்ப்பு
எதையும் வளைத்துப் போடமுடியும்
ஒளியை வளைத்துப் போடலாமா?
ஒளியை வளைக்கும் ஒரே சக்தி
ஈர்ப்புக்கு மட்டுமே உண்டு
எதையும் தடுத்து விடமுடியும்
ஈர்ப்பைத் தடுத்து விடலாமா?
ஈர்ப்புப் புலத்தில் தடைகளுக்கு
எந்த வேலையும் இல்லை
எதையும் உறிஞ்சிட முடியும்
ஈர்ப்பை உறிஞ்சிட முடியுமா?
யாரோடும் சேராமல் இருப்பதாலோ
எல்லை முடிவிலியில் இருக்கிறது?
காதலும் ஒருவகை ஈர்ப்புத்தான்
பாசம் நேசம் கருணை பற்று
ஆன்மாவின் விசைகளில்
கடைசியாக வருவதே காதல்
ஈர்ப்பைப் போலவே காதலும்
சிறியோர்களில் வருவதில்லை
பருவ வயது வந்துவிட்டால்
எவரையும் விட்டு அகல்வதில்லை
உயிர்கள் தோன்றிய காலம்முதல்
காதல் மட்டும் மாறவேயில்லை
மாற்றமே உலகில் மாறாததென்று
சொல்லித் தந்தவன் யார்?
ஒளியைக் கூட ஈர்ப்பு
வளைத்துப் போடுவது போல
கிளியைக் கூட எலிகள்
வளைத்துப் போடுவதே காதல்
புயலை தடுத்து நிறுத்தும்
இயலை கூட கற்றுள்ளான்
காதலை தடுத்து நிறுத்த
என்ன வழி பெற்றுள்ளான்?
ஈர்ப்பும் காதலும்
இரட்டைக் குழந்தை
அண்டத்தில் வளர்வது ஈர்ப்பு
முண்டத்தில் வளர்வது காதல்
வளர்த்த மகளின் காதலை
தந்தையே அறியாதது போல
ஈர்ப்புத் துகளின் இருப்பை
இன்னும் விஞ்ஞானம் அறியவில்லை
குறிப்பு
பலம்- strong
பலவீனம் - weak
மின்காந்தம் - electro magnetic
ஈர்ப்பு - gravity
அடிப்படை விசைகள் - fundamental force
வெளிநேர - spacetime
வளைவு - curvature
துகல் - particle
புலம்- field
முடிவிலி எல்லை - infinite range
ஈர்ப்புத் துகளின் - graviton