குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டி
வளர்ந்த நாகரிகம்
அனைத்திற்கும் தனி இடம்
எதை எங்கு இடுவது –
வீசப்படுவதற்கே
வீதிகள்தோரும்
ஓரிடம் –
வீடென்றாலும்
இடம் தேடி
சேர்ந்துவிடும்
உரித்தும் சீவியும்
மிச்சம் எச்சமென
போட்டுத் தள்ளி மூட
வீட்டில்
அழகு அடையாளமாகும்-
பார்க் பீச் ஓரங்களில்
எதைப் போட்டாலும்
வாங்கிக் கொள்ளும்
நெகிழிப் பிச்சைக்காரர்களாய் -
பள்ளி கல்லூரி
விடுதி உணவகமென்று
இவைகளின் இருப்பிடம் கொண்ட
சுமைகளின் இடப்பெயர்ச்சி
சுத்தமெனப்படுகிறது-
குழந்தைகளையும் சுமக்கும் என்பதால்
நாகரிகத் தொட்டிலானவை
மட்குபவை மட்காதவை என்று பிரிபடும் போது
நமக்குத் தெரியும்
அவைகள் என்னவென்று