கதவு திறந்தே இருக்கட்டும்
கதவு திறந்தே இருக்கட்டும்
கதவு திறந்தே இருக்கட்டும்—நெஞ்சக்
கதவு திறந்தே இருக்கட்டும்.
காலை யொளியிற் பறக்கும் பறவைக்
கீச்சொலி நெஞ்சுள் நுழையட்டும்—தென்னை
ஓலை யிடையெ ஆடும் தென்றல்
நடன மங்கரங் கேறட்டும்.
உள்ளே புகுந்தே இதமாய்த் தடவி
இயற்கை இன்பம் நல்கட்டும்;--வேகக்
கள்ளின் மயக்கில் மனந்தான் அந்தக்
ககன வெளியிற் பறக்கட்டும்.
வாசலில் கோலம் வரையும் மகளிர்
வளையொலி நெஞ்சைத் தடவட்டும்;--அவர்தம்
நேசப் பார்வை உள்மனம் புகுந்தே
நட்டுவம் செய்து பார்க்கட்டும்.
கன்றின் ஓசை தாய்ப்பசு நேசக்
கனபரி மாணம் காட்டட்டும்;--எங்கும்
சென்று திரிந்து மேய்ந்து மகிழ்ந்து
சிந்தை வீடு திரும்பட்டும்.
வாடிடு பயிரின் வாட்டம் வாளாய்
மனசைக் கூறு போடட்டும்;--பிச்சை
தேடியே உண்ணும் பிஞ்சுகள் விதியைச்
சிந்தை எண்ணி நோகட்டும்.
காற்றின் வழியே உலக நடப்புக்
கடுகி நெஞ்சுள் நிறையட்டும்;--ஏழ்மைச்
சேற்றில் புதையும் ஏழைகட் காகச்
சிந்தை முகாரி வைக்கட்டும்.
இன்பக் கீற்று மட்டும் உள்ளே
இதமாய்த் தடவி நுழையாமல்—தாக்கும்
துன்பக் காற்றும் மோதிப் பார்த்துத்
தோல்வி யடைந்தே ஓடட்டும்.
காற்றினி லேதோ செய்தி வருகுது
கதவை அகலத் திறந்துவிடு! ;--அந்தக்
காற்றை நேசக் காற்றென மாற்றிக்
ககன மெங்கும் தவழவிடு. ( கதவு )