மீண்டும் மீண்டும் - விலைநிலம்
மீண்டும் மீண்டும்
நெனச்சு பாத்தா
வேதனைதான் மிஞ்சுது...
முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது
கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது
வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது
வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது
பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது
நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது
களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீரா ஆச்சுது
வாயக்கட்டி வயித்தக்கட்டி
விளைச்ச பூமி
வீட்டைக்கட்டி விலையைக்கூட்டி
விற்பனையாகுது சாமி
பணத்த தின்னா செரிக்குமா???
பட்டினி சாவுதான் குறையுமா???
- பா.வெ.