பாறைக்கு நரபலி

1. வரவர மனிதன் உலகில்
வஞ்சக வடிவெ டுத்தான்
தரதர வென இழுத்து
தரையினில் படுக்க வைத்து
கரகர வெனக் கழுத்தின்
குரல்வளை தனை யறுத்து
நரபலி கொடுத்து ரத்த
சேற்றிலே குளிக் கின்றானே
2. யார்பணத் தோட்டம் போட
யாருயிர் உரமாய் மாறும்
யார்ரத்தம் குடிப்ப தற்கு
யார்பிள்ளை வளர்த்து வைத்தார்
யார்குடியை கெடுப் பதற்கு
யாரங்கே வெடிகள் வைத்தார்
யாரெங்கு கிடைப் பாரென்று
யார்மோப்பம் பிடித்துச் சென்றார்
3. சீர்பெற்று வாழ்ந்து விட்டு
செல்வத்தை அழிக்க எண்ணி
பார்தேடி அலைந் தலைந்து
பணமெல்லாம் கரைந்த பின்பு
ஊர்சுற்றி சோம்ப லாகி
ஊதாரித் தனமாய் வீழ்ந்த
யார்பெற்ற மகனை வெட்டி
ஏனிங்கு பலி கொடுத்தார்
4. குணத்தினை இழந்து நல்ல
கொள்கையை மறந்துக் கொன்ற
பிணத்தினை புதைத்து வைத்து
பொய்யையும் புதைத்து சேர்த்த
பணத்தினை பாதா ளத்தில்
பதுக்கியே விட்டு பூத
கணங்களை காவல் போட்டு
காத்திட செய்கின் றாரே