உழவர் கையில் திருவோடு

1. மதுகடலில் நீந்துகின்ற மனித னுக்கு
மனம்தெளிய வைக்கும்பொறுப் பில்லை யார்க்கும்
எதுவரையில் உழைக்கின்ற உழவ னுக்கு
இத்தகைய நிலைமை யேதான் நீடிக்கும்
புதுவரவு ஏதுமில்லை விளைச்ச லில்லை
புத்தரிசி கேழ்வரகு கம்பு மில்லை
இதுவரையில் இத்தகைய பஞ்சப் பேயை
என்னாளும் உழவர்களோ கண்ட தில்லை

2. கடைசரக்கு வாங்கப் போனால் விலையுமேற்றம்
கடன்கட்ட முடியாமல் திகில்திண் டாட்டம்
படைத்திரட்டல் ஊருக்கூரு குறைச்ச லில்லை
பண்புஇல்லை அன்புஇல்லை பணிவும் இல்லை
இடைத்தரகுக் காரனுக்கு வேலை யில்லை
இருட்டினை விரட்டமின் சாரம் இல்லை
எடைபோட்டு பார்த்தாலும் உண்மை யில்லை
இவையென்று மாறுமென்று ஏங்கு கின்றார்

3. பழுதுவந்து நேராமல் பாது காப்பாய்
படர்ந்துநிலம் நோக்கிவே ரூன்றும் ஆலின்
விழுதுயென ஞாலமெனும் மரம்வீ ழாமல்
வைரமிகு தூண்களென தாங்கி நின்று
உழுதுவிளை வித்துநித்தம் உணவ ளிக்கும்
உழவர்களின் மேன்மைகுன்றி தாழ்மை யுற்று
அழுதுக்கண் ணீர்வடித்து வருத்த முற்று
அதிர்ச்சியால் உயிரிழக்கும் நிலையைக் கண்டார்

4. கார்மேகக் கன்னியேனோ கலைந்து போனாள்
காவேரி அன்னையேனோ வடிந்து போனாள்
நீர்மேவும் நிலைகளெல்லாம் வெடித்த தாலே
நின்றப்பயிர் வாடியதால் சாய்ந்து மாய்ந்து
சீர்மேவும் வயலில் உருக் குலைந்து தீய்ந்து
செப்பரிய சேதத்தைக் கண்ட போது
கூர்வேலால் தாக்குண்ட பறவையைப் போல
குமுறிமனம் பதைத்துழவன் பிணமாய் வீழ்ந்தான்

5. நெடிதுயர்ந்த மலைகளிலும் பசுமை யில்லை
நிழல்கொடுக்க மரங்களிலும் இலைக ளில்லை
செடிகொடிகள் வளரவில்லை படர வில்லை
சிரிக்கின்ற மொட்டுகளும் மலர வில்லை
வடிவழகு பெண்கள்முகம் களையி ழந்து
வருங்காலம் எவ்வகையில் பிழைப்போ மென்று
இடிவிழுந்து உருவிழந்த தென்னை யாக
ஏக்கமுறும் அவலநிலை சொல்லொ ணாதே

6. அரும்பாடு பட்டுயிட்ட பயிரின் பச்சை
அனைத்துமே நீரின்றி கருகக் கண்டு
பெரும்பாடு பட்டுழைத்தோர் வாடும் போது
பரிவோடு ஆளவந்தோர் அணுகி டாமல்
இரும்பாக இதயத்தை வைத்துக் கொண்டு
ஏறெடுத்துப் பாராமல் முரண்பாட் டோடு
திருவோடு உழவரது கையில் ஏந்தி
தெருவிலே வரிசையாய் நிற்கின் றாரே!

எழுதியவர் : பாவலர் கொ.வீ.நன்னன், சட்டப (14-Nov-15, 10:55 pm)
சேர்த்தது : K.V.Nannan
பார்வை : 523

மேலே