மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்
என் எழுதுகோல் கண்ணீர் சிந்தும்
மாண்டு போன
எம்மக்களுக்காய் எழுதத்தூண்டும்

மழையின் மேகமே!
திராவிட நாடை தாண்டி வந்தாயென
தவறியும் சொல்லிவிடாதே!
உன் மெல்லிய மேனியில்
தோட்டக்களை மறைத்து வைப்பார்கள்...

குளிரும் நிலவே!
ஈழ நிலத்தில் நித்திரைக் கொண்டதை
மறந்தும் சொல்லிவிடாதே!
நீதி மறந்தவர்கள்
உன்னை நிதம் நிதம் நிந்திப்பார்கள்...

இளைப்பாறும் பறவையே!
பாரத நாட்டில் பாடி திரிந்தயென
பதில் சொல்லிவிடாதே!
பச்சை மாமிசம் உண்பவர்கள்
உன் இனத்தின் மீது
இச்சை கொள்வார்கள்...

ஓ மனிதனே!
இன்ப உலகில் பிறந்தாயென
பெருமை கொள்ளாதே
ஈழம் என்றால் இகழ்ச்சியென்றே
இங்கு பொருள் தருவார்கள்...

ஈழ தமிழனே!
தமிழகம் தாய் வீடென
மார்த்தட்டிக் கொள்ளாதே!
மறுகனமே மார்பை அறுத்து
மண்ணில் புதைப்பார்கள்...

மறைந்த மனிதமே!
இந்த பாவ பூமியில்
இறந்தாயென எண்ணிவிடாதே!
நீ வாழ்ந்தால் தானே
இறப்பதற்கு என்று
ஏளனம் செய்வார்கள்...

அலைக்கடலே!
அனல் நெருப்பே!
அசுரக் காற்றே!
பேதமை இன்றி
இப்பூமியை அழித்திடு!
மீண்டும் போர்களின்றி
மனித இனம் தொடங்கட்டும்
புன்னகையோடு
தமிழினம் பிறக்கட்டும்
போர்க்களம் மறைந்து
பூந்தோட்டம் ஆகட்டும்
அதுவரை சொல்லிவிடாதே!
இங்கு
போர்கள் நிறுத்தப்பட்டன என்று...

எழுதியவர் : சீதளாதேவி வீரமணி (16-Nov-15, 4:23 pm)
சேர்த்தது : சீதளாதேவி வீரமணி
பார்வை : 156

மேலே