அரும்புகள்

அடம் பிடித்து
விழுந்து புரண்டுப் போராடி
கண்ணீர் ஆயுதங்கள் உபயோகித்தும்
தோற்றுப் போன இரவு போர்கள்
பரணி இலக்கியத் தலைவன் போல
அம்மா தோரணையோடு வீற்றிருந்தாள்
அரும்பிற்கோ போர்க்காயமாய் பால் மீசை


மளிகைச் சீட்டு மாயம் போனதால்
மதியமெல்லாம் தேடி திரிந்தவளிடம்
மின்மினி கண்கள் அகல விரித்து
தன் காகிதக்கப்பல் சுட்டிக் கேட்டான்
தொலைந்தது மிதப்பதா என்று

கலைக்கூடம் ஒன்றனில் கண்வியக்கும்
ஓவியம் ஒன்றனை அப்பா வாங்கிவர
வீட்டைச் சுற்றி இருக்கும் சிற்றாரிடம்
சிலபல தூரிகைகள் , வண்ணங்கள்
கடன்வாங்கி , தன் திறன் முதலீட்டினில்
சுவரோவியம் வரைந்து வைத்து காத்திருந்தான்
தந்தையின் முத்த லாபங்களுக்கு

அம்புலிமாமா கதைகள் பாட்டி சொல்ல
அரைத் தூக்கத்தினில் தலையசைத்து கேட்டுக்கொண்டு
அவள் மடியினில் தலை சாய்ப்பான்
விண்வெளி பயணங்கள் செல்லும்
விண்மீன் தோட்டங்கள் உலா வரும்
கனவுகள் சுமப்பான் கவின் கண்களில்

அந்தி வேளையில் சம்மணம் போட்டபடி
அகரமும் அழகு தமிழும் பழகும்
அரும்பின் குறும்புகள் யாவும்
தித்திக்கும் தேன் கரும்பு !!

எழுதியவர் : பூஜ்யா ரவிசங்கர் (16-Nov-15, 11:25 pm)
Tanglish : arumpukal
பார்வை : 210

மேலே